எதிர்கால நம்பிக்கை நிகழ்கால கொடூரம்

எதிர்கால நம்பிக்கை நிகழ்கால கொடூரம் என்ற இக்கட்டுரை, தங்கள் லட்சியத்தை அடைய விரும்புபவர்கள், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியத்தைக் கூறுகிறது.

பொதுவாக நம் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு லட்சியம் உண்டு. அந்த எதிர்கால லட்சியத்தை அடைய, நிகழ்காலத்தை எப்படி கடப்பது என்பது பற்றி நமக்குத் தெரியாது.

நம் ஊரில் ஒருகதை சொல்வர்.

பால் வியாபாரி ஒருவன் தூங்கும் போது, ஒரு லட்சியக் கனவு கண்டான்.

அவன் மாடுகளைப் பெருக்கி, பால் வியாபாரம் செழித்து, செல்வந்தனாகி, பெரிய இடத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.

ஒரு நாள் அவளின் சிறு தவறுக்காக, அவளை உதைப்பதாக கனவில் எண்ணி, தான் வைத்திருந்த உண்மையான‌ பால் பானையை உதைத்து விடுகிறான்.

அவனுடைய பால் முழுவதும் வீணாகி விடும்.

பால் கொட்டியதும் விழித்து எழுந்து அழுவான்.

அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நல்ல லட்சியம் இருந்தது. ஆனால் நிகழ்காலத்தை உணராத அவன் செயல், அவனுக்கு வளர்ச்சிக்குப் பதிலாக வீழ்ச்சியையே கொடுத்தது.

இந்த கதையில் வரும் பால் வியாபாரி போல் இல்லாமல், போர்க் கைதியாகி, எட்டு வருடம் சிறையில் அடைபட்டு, நிகழ்கால கொடூரத்தைத் தாங்கி, எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து செயல்பட்ட ஒருவரை பற்றிப் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வாருங்கள் அவரைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜேம்ஸ் ஸ்டாக்டேல்

ஜேம்ஸ் ஸ்டாக்டேல், அமெரிக்காவின் கப்பல் படையில், துணை அட்மிரல் என்ற பதவியை வகித்தவர். 1965ஆம் ஆண்டு  வியட்நாம் போரின் உச்சத்தில், அவர் ஹனோய் ஹில்டன் என்ற இடத்தில், போர்க் கைதியாக மாட்டிக் கொண்டார்.

கைதிகள் முகாமில் இருந்த ஒவ்வொருவரும் மிக அதிக‌ வேதனை அனுபவித்தனர்.

விடுதலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஊசலாட்டம்; எப்போது விடுதலை என்ற ஏக்கம், எல்லா கைதிகளையும் வாட்டி எடுத்தது.

கொடுமையான சித்திரவதை மற்றும் மன உளைச்சலுக்கு ஆட்பட்ட பல கைதிகள் மரணமடைந்தனர்.

எதிர்காலத்தில் உறுதியாக குடும்பத்தினரை பார்ப்போம் என்ற நம்பிக்கை ஸ்டாக்டேலிடம் இருந்தது.

ஆனால் இந்த நரக வாழ்க்கையிலிருந்து எப்போது  விடுதலை என்பது தெரியாது.

எதிர்கால நம்பிக்கை நிகழ்கால கொடூரம் என்பதை எதிர் கொண்டார். 

 

எல்லா லட்சியவாதிகளுக்கும் வரக்கூடிய இக்கட்டான சூழ்நிலை அது.

எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கும். ஆனால் நிகழ்காலம் தாங்க முடியாத கொடூரமானதாக இருக்கும்.

அதை எப்படி எதிர்கொள்வது?

ஸ்டாக்டேல் அவர்களின் வாழ்க்கை இந்த குழப்பத்திற்கு நமக்கு விடை கொடுக்கின்றது.

 

நிகழ்கால கொடூரம்

தனது எதிர்கால நம்பிக்கை மூலம் அவர் பகல் கனவுகளை உருவாக்கவில்லை.

மாறாக அதனை ஊன்று கோலாகக் கொண்டு, நிகழ்காலக் கொடூரத்தை நேருக்கு நேர் சந்தித்தார்.

சிறையில் கிடைக்கும் அடி, உதை மற்றும் சித்திரவதைகளை அவர் ஏற்றுக் கொண்டார்.

எப்படி எதிராளிகளின் அடி உதையிலிருந்து தப்பிப்பது என்பதை மெதுவாகக் கற்றுக் கொண்டார்.

எப்படி முகாமிலேயே எதிராளிகளுக்கு எதிராக போராடுவது என்பதையும் கற்றுக் கொண்டார்.

ஒருசில சமயங்களில் நாற்காலியால் தன்னைத்தானே தாக்கிக் கொள்வது, பிளேடால் தன்னையே கிழித்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களில், உளவுத்துறை தகவல்களை ரகசியமாக பகிர்ந்து கொண்டார்.

எதிராளிகளுக்கு இதுபற்றி தெரிய நேர்ந்தால், சித்திரவதை அதிகரிக்கக் கூடும் அல்லது கொல்லப்படலாம் என்பதைத் தெரிந்தும் அவர் இதனைச் செய்தார்.

எல்லாக் கொடுமைகளையும் ஏற்றுக் கொண்டு உயிர் பிழைத்திருக்கும் வழியை அறிந்து கொண்டார் ஸ்டாக்டேல்.

 

ஸ்டாக்டேல் மற்ற‌ போர்க் கைதிகளுக்கு தலைமையேற்று செயல்பட ஆரம்பித்தார்.

தான் கற்றுக் கொண்ட அனைத்தையும், அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை வழிநடத்தினார்.

சித்திரவதையின்போது, கைதிகள் எவ்வாறு தங்களின் உயிரினைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி பயிற்சி அளித்தார்.

கைத்தட்டலின் மூலம் கைதிகளுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பயிற்சி அளித்தார்.

இதனால் கைதிகள் வெவ்வேறு அறைகளில் தனிமைப் பட்டிருந்தாலும், தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கைதாகி மூன்றாம் ஆண்டின் முடிவில் கைதிகள் கைதட்டலின் மூலம் ‘நாங்கள் உங்களை விரும்புகிறோம்’ என்ற தகவலை ஸ்டாக்டேலிடம் பகிர்ந்து கொண்டனர்.

 

எதிர்கால நம்பிக்கை

அடி, உதை மற்றும் சித்திரவதையுடன் கூடிய நரக வாழ்க்கை, என்று முடியும்? என்று தெரியாமலேயே நீண்டது.

பல கைதிகள் சித்திரவதை தாளாமல், விடுதலை கிடைக்காது என்ற விரக்தியுடன் மரணமடைந்தனர்.

ஆனால் அடுத்தடுத்து வரும் அலை போல, வந்த தொடர் கஷ்டங்களை எல்லாம், ஸ்டாக்டேல் கடந்து கொண்டே இருந்தார்.

நிகழ்கால கொடூரம் நீண்டு கொண்டே இருந்தது.

 

அவரது எதிர்கால நம்பிக்கை வீண் போகவில்லை.

1965 முதல் 1973 வரை சுமார் எட்டு ஆண்டுகள், போர்க் கைதியாக ஏராளமான சித்திரவதைகளை அனுபவித்த பின்பு, அது பலன் கொடுத்தது.

ஆம்; ஸ்டாக்டேல் விடுதலை பெற்று,  அமெரிக்கா திரும்பினார்.

அமெரிக்க அரசின் உயரிய பதக்கங்களான‌ ஏவியேட்டர் விங்ஸ், காங்கிரஸ்னல் மெடல் ஆஃப் ஹார்னர் ஆகிய பதக்கங்களை, ஒரேநேரத்தில் அணியும் மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட முதல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார்.

இது அமெரிக்க கப்பற்படை வரலாற்றில் முதன்மையாக நிகழ்ந்தது ஆகும்.

தனது சிறை அனுபவங்களை அன்பும் போரும் (லவ் அன்ட் வார்) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.

அந்த‌ புத்தகத்தின் அத்தியாயங்கள் ஸ்டாக்டேல் மற்றும் அவருடைய மனைவியால் அடுத்தடுத்து எழுதப்பட்டுள்ளன.

அதில் ஸ்டாக்டேல் போர்க் கைதியாக இருந்த எட்டு வருடங்களும் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளன.

 

வாழ்க்கைக்கு அவசியமான  பாடம்

ஜிம் காலின்ஸ் என்பவர் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவர். அவர் ஒரு நாள் ஸ்டாக்டேல் அவர்களைப் பேட்டி கண்டார்.

“ஸ்டாக்டேல் அவர்களே, முடிவே தெரியாத அந்தப் போராட்டத்தில், நீங்கள் வெற்றி அடையக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

“இறுதியில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது” என்றார் ஸ்டாக்டேல்.

மேலும் “சிறையில் இருந்து நான் விடுதலை அடைவேன் என்பது மட்டுமல்ல; இந்த சிறை வாழ்க்கையை என் வாழ்வின் திருப்புமுனையாக பயன்படுத்திக் கொள்வேன் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.” என்றும் கூறினார்.

 

ந்த போராட்டத்தில் யார் தோற்றார்கள்? அதாவது விடுதலை அடையாமல் மரணமடைந்தவர்கள் யார்?”என்று காலின்ஸ் கேட்டார்.

“நம்பிக்கையாளர்கள்” என்ற பதில் மின்னல் வேகத்தில் ஸ்டாக்டேலிடமிருந்து வந்தது.

 

காலின்ஸ் ஆச்சர்யமாக ஸ்டாக்டேலைப் பார்த்தார்.

“ஆமாம், நம்பிக்கையாளர்கள் தாம். நம்பிக்கையாளர்கள் எதிர்வரும் கிருஸ்துமஸ்க்கு விடுதலையாவோம் என்று நம்பினர். கிருஸ்துமஸ் சென்றது; விடுதலை கிடைக்கவில்லை.

ஈஸ்டருக்கு விடுதலையாவோம் என்று நம்பினர். ஈஸ்டர் சென்றது; விடுதலை கிடைக்கவில்லை.

நன்றி தெரிவிக்கும் நாளுக்கு விடுதலையாவோம் என்றனர். அதுவும் சென்றது; விடுதலை கிடைக்கவில்லை.

மறுவருடமும் கிருஸ்துமஸ் வந்து சென்றது. ஆனால் விடுதலை மட்டும் கிடைக்கவில்லை. அவர்கள் கனத்த இதயத்துடன் மரணத்தை தழுவினர்.”

“இறுதியில் (எதிர்காலத்தில்) நாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

அதேநேரத்தில் கொடூரமான நிகழ்காலத்தை எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும்.

இது வாழ்க்கைக்கு அவசியமான முக்கியமான பாடம்.” என்றார் ஸ்டாக்டேல்.

இதனையே ஸ்டாக்டேல் முரண்பாடு என்றார் காலின்ஸ். இந்த ரகசியம் உங்களுக்குப் புரிந்தால், சந்தேகமில்லாமல் நீங்கள் ஒரு சாதனையாளர்தான்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.