எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?

எலுமிச்சை சாதம் என்பது எளிதாகத் தயார் செய்யக் கூடிய கலவை வகை சாதம். பள்ளி, வேலைக்கு செல்பவர்கள் டிபன்பாக்ஸில் எடுத்துச் செல்லவும், வெளியூர் பயணத்தின் போது கொண்டு செல்லவும் ஏற்ற சாத வகை இது.

இதனை எளிதான முறையில் வீட்டில் தயார் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 400 கிராம்

எலுமிச்சம் பழம் – 3 (பெரியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்

 

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

கடலைப் பருப்பு – 3 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (நடுத்தரமானது)

இஞ்சி – சுண்டு விரல் அளவு

கறிவேப்பிலை – 20 கீற்றுகள்

நல்ல எண்ணெய் – 50 கிராம்

 

செய்முறை

முதலில் அரிசியை சாதமாக்கிக் கொள்ளவும். சாதமானது உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சாதத்தை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி உலர விடவும்.

எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும். எலுமிச்சைச் சாற்றில் கொட்டைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பிழிந்து வைத்துள்ள எலுமிச்சைச் சாற்றில் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். கறிவேப்பிலையை உதிர்த்துக் கொள்ளவும்.

எலுமிச்சை சாதம்‍ ‍தயார் செய்ய தேவையானவை
எலுமிச்சை சாதம்‍ ‍தயார் செய்ய தேவையானவை

 

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும். அதனுடன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கடலைப் பருப்பைச் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் பச்சை மிளகாய், சதுரங்களாக வெட்டிய இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்க்கவும்.

எலுமிச்சை சாறை ஊற்றும் முன்
எலுமிச்சை சாறை ஊற்றும் முன்

 

கடலைப் பருப்பு பொன்னிறமானதும் எலுமிச்சைக் கலவையைச் சேர்க்கவும். உடனே அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது எலுமிச்சை ரசம் தயார்.

எலுமிச்சை ரசம்
எலுமிச்சை ரசம்

 

பின் சாதத்துடன் எலுமிச்சை ரசக்கலவையைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார். இதனுடன் புளிக்குழம்பு, கொத்தமல்லி துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் சேர்த்து உண்ணலாம்.

தயார் நிலையில் எலுமிச்சை சாதம்‍ ‍
தயார் நிலையில் எலுமிச்சை சாதம்‍ ‍

 

குறிப்பு

எலுமிச்சை சாதம் அதிக அளவு தயார் செய்யும் போது சிறிதளவு சாதத்துடன் சிறிதளவு ரசம் சேர்த்து கிளறி பெரிய பாத்திரத்தில் கொட்டவும். இவ்வாறாக எல்லா சாதத்தையும் கிளறி பெரிய பாத்திரத்தில் போட்டு இறுதியாக எல்லாவற்றையும் ஒரு சேரக் கலக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.