எள் உருண்டை செய்வது எப்படி?

எள் உருண்டை வீட்டில் தயாரிக்கக்கூடிய பராம்பரிய இனிப்புத் திண்பண்ட வகைகளுள் ஒன்று. முறுக்கு, தட்டை, அதிரசத்தைப் போலவே எளிதில் தயார் செய்யலாம்.

இதனை தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருளான எள்ளில் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டின், அமினோ அமிலம் மற்றும் தாதுப்பொருட்கள் (கால்சியம், இரும்புச் சத்து) ஆகியவை உள்ளன.

ஒரு கைபிடி எள்ளில் உள்ள கால்சியச் சத்து ஒரு டம்ளர் பாலில் உள்ள கால்சிய சத்தை விட அதிகம். எள்ளில் கேன்சரைத் தடுக்கக் கூடிய சீசமின் மற்றும் சீசமோலின் என்பவைகள் உள்ளன.

மேலும் எள் நார்சத்து மிக்கது. உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க கூடிய ஆற்றல் எள்ளிற்கு உண்டு. இவ்வளவு சத்து மிகுந்த எள்ளினைக் கொண்டு சுவையான எள்ளு உருண்டை தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 400 கிராம்

கருப்பட்டி – 200 கிராம்

எள்ளு – 100 கிராம்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை

முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை இடித்து சலித்துக் கொள்ளவும். எள்ளை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து சலித்த மாவுடன் சேர்க்கவும்.

கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கருப்பட்டியைப் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பில் சிறுதீயில் வைக்கவும். கருப்பட்டி கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

பின் அதனை வடிகட்டி சலித்து வைத்துள்ள மாவில் படத்தில் காட்டியவாறு சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவானது திரண்டு பெரிய பந்து போல் வரும்.

 

மாவுடன் கருப்பட்டிக் கரைசலைச் சேர்த்தல்
மாவுடன் கருப்பட்டிக் கரைசலைச் சேர்த்தல்

 

 

பின் மாவினை படத்தில் காட்டியவாறு சிறு சிறு உருண்டைகளாக்கவும்.

 

பொரிக்கத் தயாராக உள்ள எள் உருண்டைகள்
பொரிக்கத் தயாராக உள்ள எள் உருண்டைகள்

 

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமானவுடன் பொரித்து எடுக்கவும். சுவையான எள் உருண்டை தயார்.

 

குறிப்பு

எள் உருண்டை தயார் செய்வதற்கு கருப்பு எள்ளை பயன்படுத்துவது நல்லது.

மாவினைச் சலிக்கும் போது சல்லடையில் பெரிய ஓட்டை உள்ள சலிப்பானில் சலிக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்