ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி தினத்தில் இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து திருமாலை வழிபடுவதைக் குறிக்கும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பதினொன்றாம் நாள் ஏகாதசி தினம் என்றழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக 24 ஏகாதசிகள் வருகின்றன. ஏதாவது ஒரு சமயத்தில் 25 ஏகாதசிகள் வரும்.

ஏகாதசிகளில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியின் மூலம் இவ்விரதத்தின் சிறப்பினை அறியலாம்.

ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகிய மன்னர்கள் இவ்விரத முறையினைக் கடைப்பிடித்து பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்.

அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி அல்லது வளர்பிறை ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது தேய்பிறை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.

இவ்விரத முறையை ஆண், பெண், ஏழை, பணக்காரர் ஆகிய வேறுபாடுகள் ஏதும் இன்றி எல்லோரும் இவ்விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்.

எல்லா காலங்களிலும் (தீட்டுக்காலங்கள் உட்பட) இவ்விரத முறையினைக் கடைப்பிடிக்கலாம் என்பது இதனுடைய சிறப்பாகும்.

 

மாத ஏகாதசியின் பெயர்கள் மற்றும் பலன்கள்

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது நமது விருப்பங்களை நிறைவேறும். திருமணப் பேற்றினை அளிக்கும்.

 

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி பாப மோசனிகா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது நம்முடைய பாவங்களைப் போக்கி நற்பேற்றினை நல்கும்.

 

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி மோஹினி ஏகாதசி என்ழைக்கப்படுகிறது. இது உடல் சோர்வினை நீக்கி உடலுக்கு உறுதியளிக்கும். வளர்ச்சிக்கான எண்ணங்களை வெற்றி பெறச் செய்யும்.

 

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி வரூதினி ஏகாதசி என்ழைக்கப்படுகிறது. இது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சௌபாக்கியங்களையும் கிடைக்கச் செய்யும். உடலின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும்.

 

ஆனி மாத வளர்பிறை ஏகாதசி

ஆனி மாத வளர்பிறை ஏகாதசி நிர்ஜனா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது பீம ஏகாதசி எனவும் வழங்கப்படுகிறது. பீமன் ஆழ்மனதில் இறைவனை நினைத்து வழிபாடு செய்து பலன் பெற்ற நாள்.

இது வாழ்வின் அனைத்து வெற்றிகளையும் எல்லா ஏகாதசிகளின் பலத்தினையும் அருளும். இந்நாளில் நீர் அருந்தாமல் விரத முறை மேற்கொள்வது சிறப்பு.

 

ஆனி மாத தேய்பிறை ஏகாதசி

ஆனி மாத தேய்பிறை ஏகாதசி அபரா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது குரு நிந்தனை, பொய் சாட்சி போன்ற பாவங்களைப் போக்கும். இவ்விரதம் சிவராத்திரி விரத புண்ணியத்தைக் கொடுக்கும்.

 

ஆடி மாத வளர்பிறை ஏகாதசி

ஆடி மாத வளர்பிறை ஏகாதசி சயநீ ஏகாதசி ஆகும். இது தெய்வீக சிந்தனையை அதிகமாக்கும். நமக்கு விருப்பமான நல்ல சக்திகளைத் தரவல்லது. இன்றைய தினத்தில் ஆடை தானம் குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

 

ஆடி மாத தேய்பிறை ஏகாதசி

ஆடி மாத தேய்பிறை ஏகாதசி யோகினி என்றழைக்கப்படுகிறது. இது நோய்களை நீக்கும். இன்றைய தினத்தில் வெள்ளி அல்லது வெண்கல விளக்கு தானம் நல்ல வளமான வாழ்கையைத் தரும்.

 

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இது நற்புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், நல்ல மாணவ மாணவியராகத் திகழவும் இன்றைய தினம் விரதம் சிறந்த பலனைக் கொடுக்கும்.

 

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா என்றழைக்கப்படுகிறது. இது நமது விருப்பங்களை நிறைவேற்றும். மன பயம், மரண பயம், கொடிய துன்பம் ஆகியவற்றை நீக்கும்.

ஆவணி மாத ஏகாதசி விரதத்தினை காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி விரதமுறையை மேற்கொள்ள வேண்டும்.

 

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஆகும். இது நீர் வளத்தினைப் பெருக்கி பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும்.

 

புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி

புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு அஜா என்ற பெயர். இது இழந்ததை திரும்ப அளிக்கும். சுட்பிச்சமான ஒற்றுமையான குடும்ப வாழ்வை நல்கும். அரிசந்திரன் இந்நாளில் விரதம் மேற்கொண்டு மனைவி, மக்கள், அரசாட்சி ஆகிய அனைத்தையும் பெற்றான். இவ்விரத்தில் தயிர் உபயோகிக்கக் கூடாது.

 

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா எனப்படுகிறது. இது பாவங்களைப் போக்கும். கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும்.

 

ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி

ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்றழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது.

 

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி எனப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் வழங்கப்படுகிறது. இது உயர்ந்த நன்மைகளை வழங்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

 

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ரமா எனப்படும். இது உயர்ந்த பதவிகளைக் கொடுக்கும். இன்றைய தின விரதம் இருபத்தியோரு தான பலன்களைக் கொடுக்கும்.

 

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. இது மோட்ச ஏகாதசி என்றும் வழங்கப்படுகிறது. இது வைகுண்ட பதவியை அளிக்கும்.

 

மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி

மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. இது சகல சௌபாக்கியங்களை கொடுக்கும். பகையை வெல்ல உதவும்.

 

தை மாத வளர்பிறை ஏகாதசி

தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரா எனப்படும். இது குழந்தைச் செல்வத்தை அளிக்கும். வம்சாவளியைப் பெருகச் செய்யும் சந்தான ஏகாதசி ஆகும். சுகேதுமான் இந்நாளில் விரதம் மேற்கொண்டு குழந்தையைப் பெற்றான்.

 

தை மாத தேய்பிறை ஏகாதசி

தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா ஏகாதசி எனப்படும். இது பாவநிவர்த்தி கொடுக்கும். இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். இல்லறம் இனிக்கும்.

 

மாசி மாத வளர்பிறை ஏகாதசி

மாசி மாத வளர்பிறை ஏகாதசி ஜயா எனப்படும். இது பேய்க்கும் மோட்சத்தைக் கொடுக்கும். மால்யவான் பேயான சாபத்திலிருந்து விடுதலை பெற்றான். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி அகலும்.

 

மாசி மாத தேய்பிறை ஏகாதசி

மாசி மாத தேய்பிறை ஏகாதசி ஷட்திலா எனப்படும். இது அன்ன தானம் செய்ய உயர்ந்தது. பசி துயரம், உணவுப் பஞ்சம் ஏற்படாது. பிரம்மஹத்தி தோசத்தை போக்கும்.

 

பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி

பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி ஆமலதீ என்றழைக்கப்படுகிறது. இது கோ தானம் செய்ய ஏற்றது.

 

பங்குனி தேய்பிறை ஏகாதசி

பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி விஜயா என்றழைக்கப்படுகிறது. இது கணவன் மனைவி கடல் கடந்து பிரிந்து இருந்தாலும் அவர்களை ஒன்றிணைக்கும். இராமர் இவ்விரதத்தினை மேற்கொண்டே சீதையை மீட்டார்.

 

கமலா ஏகாதசி

ஏதேனும் ஒரு வருடத்தில் கூடுதலாக வரும் 25-வது ஏகாதசி கமலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் மேற்கொண்டால் திருமகளின் பரிபூரண அருள் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.

நாமும் ஏகாதசி விரதம் மேற்கொண்டு வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.