ஐயப்பன் பற்றிய கதை

ஐயப்பன் இந்து சமயத்தின் பிரம்மச்சாரிய கடவுளுள் ஒருவர். இவரை தர்மசாஸ்தா என்றும், மணிகண்டன் என்றும், அரிகரசுதன் என்றும் அழைக்கின்றனர். வழிபாட்டுத் தலங்களில், ஐயப்பனை 18 படிகள் மேலே வைத்து வழிபடுவது ஐயப்பனின் சிறப்பு ஆகும்.

முன்னொரு சமயம் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தை பங்கிடுவதற்கு பாற்கடலை கடைந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய பெண்ணாக மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சமமாக பங்கிட்டு தருவதாகக் கூறினார்.

அங்கே வந்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். சிவபெருமானுக்கும், மோகினிக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரே ஐயப்பன் ஆவார்.

ஐயப்பனின் அவதார நோக்கமே மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்வதாகும். மகிஷம் என்றால் எருமை என்று பொருள்படும். மகிஷி எருமை முகமும், மனித உடலும் உள்ள அரக்கி.

அவள் பிரம்மதேவரை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்ம தேவரிடம் தனக்கு இறவா வரம் வேண்டினாள். உலகில் பிறந்த உயிர்கள் என்றாவது ஒரு நாள் இறக்க வேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார். அதற்கு அவள் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சக்தியால் தனக்கு மரணம் நிகழவேண்டும் என்ற வரத்தினை வேண்டினாள்.

மேலும் தனக்கு ஒப்பற்ற ஆற்றலை வழங்கும்படி வேண்டினாள். தான் பெற்ற ஒப்பற்ற ஆற்றலை பயன்படுத்தி உலக மக்களை துன்புறுத்தி வந்தாள். இந்நிலையில் சிவனும், மகாவிஷ்ணுவும் தங்களுக்கு பிறந்த குழந்தையின் கழுத்தின் கண்டத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டி சபரி மலைக் காட்டின் நடுவில் விட்டுவிட்டுச் சென்றனர்.

அப்பொழுது சிவ பக்தரான பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன் வேட்டைக்கு சபரிமலைக் காட்டிற்கு வந்தார். காட்டின் நடுவே குழந்தையின் அழுகுரல் கேட்டு, குழந்தையைத் தேடி, கண்டுபிடித்தார். கழுத்தின் கண்டத்தில் மணிகட்டி இருந்ததால் கண்டெடுத்த குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.

குழந்தைப் பேறு இல்லாத ராணி மணிகண்டனை தனக்கு கடவுள் கொடுத்த பரிசாக எண்ணி தன் மகனைப் போல வளர்த்து வந்தார். குழந்தையான மணிகண்டன் சற்றே பெரியவனானதும் மகாராஜா ராஜசேகர பாண்டியன் கல்விகற்க குருகுலத்திற்கு அனுப்பிவைத்தார்.

குருகுலத்தில் மணிகண்டன் கல்வியை கசடறக் கற்றான். குருவிற்கு எல்லாவித உதவிகளையும் செய்து வந்தான். குருவின் மகனான‌ வாய் பேச முடியாத, காது கேட்காத சிறுவனுக்கு வாய்பேசவும், காதுகேட்கும் சக்தியையும் வழங்கினான். குருகுலக் கல்வியை முடித்தவுடன் அரண்மனை திரும்பிய மணிகண்டனுக்கு அரசன் இளவரசு பட்டம் சூட்ட எண்ணினான்.

அப்போது அரசனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. எனினும் அரசனோ, அரசியோ எந்த வித வேறுபாடும் மணிகண்டனிடம் காட்டவில்லை. மணிகண்டனும் தனது தம்பியிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்தான். இராசசேகர பாண்டியன் அரசவையில் இருந்த மந்திரி ஒருவனுக்கு மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவது பிடிக்கவில்லை. இதை எப்பிடியாவது தடுத்துவிட எண்ணினான்.

அரசனிடம் மணிகண்டன் யார் என்று தெரியாது, காட்டிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை எனவே அரசனுக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று வாதிட்டான். அந்த வாதத்தினைக் கேட்ட அரசன் கடும் கோபம் கொண்டு மணிகண்டன்தான் தனது மூத்த மகன் என்றும், அவனுக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்றும் கூறிவிட்டார்.

அதன்பின் மகாராணியிடம் சென்று மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டக் கூடாது என்றும், ராணிக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று கூறினான். முதலில் மகாராணி இதனைக் கேட்டு கோபப்பட்டாலும், மந்திரி ராணியின் மனதினை மாற்றினான்.

ராணி மனம் மாறி தன் மகனுக்கு எவ்வாறு இளவரசு பட்டம் சூட்டுவது என்று யோசிக்கையில், மந்திரி ராணியிடம், ராணிக்கு தீராதவயிற்று வலி என்றும், வலி தீர, புலியின் பால் தேவை என்றும், புலியின் பாலைக் கொண்டுவர மணிகண்டனை அரசன் பணிக்க வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மந்திரி மேற்கொள்வதாக கூறினான்.

மந்திரி கூறிய யோசனைக்கு ராணியும் உடன்பட்டு தனக்கு தீராதவயிற்று வலி உள்ளதாக அரசனிடம் தெரிவித்தாள். அரசன் அரண்மனை வைத்தியரை அழைத்து வைத்தியம் பார்க்கச் சொல்ல, மந்திரியின் கையாளான வைத்தியர் புலிப்பால்தான் ராணியின் நோய்க்கு மருந்து என்று அரசனிடம் கூறினான்.

இதனைக் கேட்ட அரசர் புலிப்பால் கொண்டு வருவோர்க்கு நாட்டில் பாதி தருவதாகக் கூறினான். ஆனால் யாரும் புலிப்பால் கொண்டு வருவதற்கு தயார் இல்லை. இதனைக் கண்ட அரசன் வருத்தமடைந்தான். அரசனின் வருத்தத்தைக் கண்ட மணிகண்டன், தான் புலிப்பால் கொண்டு வருவதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட மன்னன் மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதற்கு காட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கூறினான். ஆனால் மணிகண்டன் பிடிவதாமாக தான் மட்டும் தனியாகச் சென்று புலிப்பால் கொண்டு வருதாகக் கூறி காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

காட்டினுள் சென்ற மணிகண்டன் குடிசை ஒன்றினுள் தங்கினான். அப்போது எருமைத்தலையுடன் மகிஷி அங்கியிருந்தோரை துன்பப்படுத்துவதைக் கண்டான். மகிஷியுடன் போர்புரிந்து இறுதியில் மணிகண்டன் மகிஷியை கொன்றுவிட்டான்.

மகிஷியின் உடலிருந்து சாப விமோசனம் பெற்ற பெண் தன்னை மணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் வேண்ட தான் பிரம்மசாரி எனவும், தன்னால் திருமணம் செய்ய இயலாது எனவும் தெரிவித்துவிட்டார்.

மகிஷியிடமிருந்து விடுதலை பெற்றவுடன் தேவர்கள் ஐயப்பனை மனமார வாழ்த்தினர். இந்திரன் ஆண்புலியாகவும், மற்ற தேவர்கள் பெண் புலியாகவும் மாற, ஐயப்பன் ஆண் புலியின் மீது ஏறி பந்தள நாட்டிற்குள் வந்தார்.

அதனைக் கண்ட அரசன் ஐயப்பனிடம், ராணி மந்திரியின் வஞ்சகப்படி ஐயப்பனைக் கொல்வதற்காக தனக்கு வயிற்றுவலி எனவும், புலிப்பால்தான் நோய்க்கு மருந்து எனவும், புலிப்பாலைக் கொண்டுவர ஐயப்பன் காட்டிற்கு செல்கையில் புலியினால் மரணமடைந்தால் தனது மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டவும், எண்ணி வயிற்றுவலி என நாடகமிட்டாள் என்ற உண்மையைக் கூறி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும், மன்னித்து புலிகளை காட்டிற்குள் அனுப்பிவிட்டு இளவரசு பட்டத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறினான்.

அதற்கு ஐயப்பன், தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் (மகிஷியை வதைப்பது) தான் மீண்டும் தேவலோகம் செல்லப் போவதாகக் கூறினார். மேலும் தன் நினைவாக தன் அம்பு விழும் இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பவும் கேட்டுக்கொண்டார்.

ஐயப்பன் எய்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அந்த இடத்தில் இராஜசேகரபாண்டியன் ஆலயத்தை ஏற்படுத்தினார். மேலும் ஐயப்பன் தன் அருளைப் பெற வேண்டும் எனில் 41 நாட்கள் சுத்த சைவ உணவினை உண்டு, பிரம்மசாரிய விரதத்தை மேற்கொண்டு மனக் கட்டுப்பாட்டுடன் சபரிமலைக்கு யாத்திரைச் செல்ல வேண்டும் என்று அருளினார்.

Comments are closed.