நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்

அம்மா சொன்ன மளிகைப் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். கையிலிருந்த மளிகைப் பொருட்களை நிர‌ம்பிய பையை வாசற்படியருகே வைத்துவிட்டு, இடது புறம் இருந்த குழாய் அருகில் சென்றேன்.

கைகளை சோப்பு போட்டு நன்றாக சில நிமிடங்கள் தேய்த்துக் கொண்டு பின்னர் குழாய் நீரில் கழுவினேன்.

‘மாஸ்கையும் இப்பவே தோச்சிடலாம்’ என்று எண்ணினேன். அங்கிருந்த ஒரு குவளையில் குழாயை திறந்து நீரை பிடித்துக் கொண்டேன். துணி சோப்பும் ஒரு டப்பாவில் கொஞ்சம் இருந்தது.

அதை எடுத்து குவளையில் இருந்த நீரில் போட்டு கொஞ்சம் கரைத்தேன். எஞ்சிய சோப்பை வெளியே எடுத்து மீண்டும் டப்பாவில் வைத்துவிட்டு, நான் அணிந்திருந்த முகக்கவசத்தை கழட்டி அந்த சோப்பு நீரில் போட்டு துவைத்தேன்.

பின்னர் வெளியே எடுத்து வைத்துவிட்டு குவளையில் இருந்த நீரை கீழே ஊற்றினேன்.

சோப்பு நீர் தரையில் ஓடியது. குழாயை திறந்து குவளையில் நீரைப் பிடிக்க முற்பட்டேன். அப்பொழுது, குவளையின் அடியில் திட்டு திட்டாக கசடு இருந்ததை கவனித்தேன்.

குழாயில் இருந்து நீர் ஊற்றிக் கொண்டிருந்தது. எனது மனம் அந்த கசடில் தங்கியது.

வேதியியல் மொழியில் சொல்லவேண்டும் எனில், இந்தக் கசடை ‘வீழ்படிவு’ என்று கூறுவோம். ஆங்கிலத்தில் ‘scum’ என்று அழைப்பார்கள். கடின நீருடன் சோப்பு சேரும் பொழுது இத்தகைய வீழ்படிவு உருவாகிறது.

“என்ன சார் யோசிக்கிறீங்க? மக்குல தண்ணி நிர‌ம்பி வழியுதே” குரல் ஓங்கி ஒலித்தது. ஆம், இது நீரின் குரல் தான்.

சுதாரித்துக் கொண்டேன். கவனம், குவளையின் மீது திரும்பியது. உடனே, குழாயைத் திருகி மூடினேன்.

“என்ன ஆச்சு சார்?” மீண்டும் கேட்டது நீர்.

“நீரா? மன்னிச்சுக்கோ” என்றேன்.

“எதுக்கு சார்?”

“கொஞ்ச நீர வீணாக்கிட்டேனே. அதான்.”

“சரி சார். எப்பவும் கவனமா இருப்பீங்க. இப்ப என்ன ஆச்சு? வேற ஏதோ பலமா சிந்திக்கிறீங்க போல.”

“கடின நீர் பத்திதான் யோசிச்சேன்.” என்றேன்.

“கடின நீரா? இப்படியும் எனக்கு பெயர் இருக்கா?”

“ஆமா, உனக்கே தெரியாதா?”

“தெரியாது சார். இப்ப நீங்க சொல்லி தான் எனக்கு ‘கடின நீர்’ அப்படீங்கற பேரு இருக்குன்னு தெரியும். எதுக்காக எனக்கு இந்த பேரு? சொல்லுங்களேன்.”

“உம்ம், சொல்றேன். தண்ணீருல கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடுகள், பை‍‍-கார்பனேட்டுகள் மற்றும் சல்பேட்டுகள் கரைஞ்சு இருந்துச்சினா, அப்ப உன்ன கடின நீருன்னு சொல்லுவோம்.”

“நீங்க சொன்ன உப்புக்கள் என்னுல்ல கரைஞ்சு இருப்பதற்கும், கடின நீர் என்ற பெயருக்கும், என்ன சம்பந்தம்.”

“ரொம்ப‌ குழப்பிக்காத, அறிவியில் உலகத்துல கடின நீர் அப்படீங்கறதுக்கு ஒரு வரையறை வச்சிருக்காங்க. சோப்பு, நீருல கரைஞ்சு வீழ்படிவ தந்துச்சுனா, அந்த நீருக்கு கடின நீர் அப்படீன்னு பெயர். அவ்வளவு தான்.”

“ஓ…ஓ… அப்படியா. சரி எதுனால, சோப்பு கடின நீரோட வீழ்படிவ உண்டாக்குது?”

“அப்படி கேளு. கடின நீருல இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள், சோப்பு மூலக்கூறுகளுடன், அதாவது, சோடியம் ஸ்டீயரேட்டுடன் வினைப்பட்டு நீரில் கரையா தன்மைக் கொண்ட கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஸ்டீயரேட் வீழ்படிவ தருது. இப்ப புரியுதா?”

“ஆம்.. புரியுது. நீங்க சொன்ன கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் என்னோட சேருவதற்கு காரணம் சில தாதுக்கள் தான். அது உங்களுக்கு தெரியுமா?”

“உம்ம்… தெரியுமே. சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் போன்ற தாதுக்கள் வழியா நிலத்துல நீ ஊடுருவிச் செல்லும் போது தான், அதுல இருக்கும் கால்சியம், மெக்னீசியம் அயனிகள் கரைஞ்சு உன்னோட சேருது. என்ன நான் சொன்னது சரியா?”

“நீங்க சொல்றது சரிதான்.”

“இம்ம்”

“சார், எனக்கு ஒரு சந்தேகம்.”

“என்னது?”

“நான் கடின நீரா இருக்கும் போது ஏதாச்சும் தீமை இருக்கா?”

உடனே, “ஆமாம். கடின நீர், தொழிற்சாலையில பயன்படுத்தப்படும் கொதிகலன்கள், குளிர்விப்பு கோபுரங்கள் போன்ற விலையுயர்ந்த கருவிகள்ல கடுமையான பிரச்சினைகளை உருவாக்குது. அதுமட்டுமில்ல, வீட்டு உபயோக சாதனங்களான நீர் சூடேற்றி போன்ற கருவிகள்ல மென்படலத்தை உருவாக்கி அவற்றோட செயல் திறனை குறைக்கிது.

அதுமட்டுமா, கடின நீருல, துணி சோப்பு பயன்படுத்தும் போது, சோப்பு வீழ்படிவா மாறுதுன்னு சொன்னேல. அதனால சோப்பும் வீணாகுது.

எடுத்துக்கிட நீருல இருக்கும் எல்லா கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளும் சோப்பால வீழ்படிவாகிய பிறகுதான், எஞ்சிய சோப்பு அழுக்க நீக்க பயன்படுது.

இந்த பிரச்சனையால தான் சோப்பு தூள் கண்டுபிடிக்கப்பட்டுச்சு. சோப்பு தூளுக்கு ஆங்கிலத்துல detergent-ன்னு சொல்லுவாங்க.

சோப்பு தூள், சல்ஃபோனிக் அமிலச் சேர்மம் ஆகும். இது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளோட வீழ்படிவ உண்டாக்குவதில்ல.

அதினால கடின நீருலையும் இத பயன்படுத்தலாம். வீணாகாது. என்ன பிரச்சனைனா, சோப்பு தூள் உயிரிச் சிதைவு அடையாது. ஆனா சோப்பு உயிரிச் சிதைவு அடையும்.”

நீர் எதுவும் சொல்லவில்லை.

“என்ன கம்முன்னு இருக்க?” என்றேன்.

“நான் கடின நீரா இருக்கும் போது உங்களுக்கு பிரச்சனை தானா?” தழுதழுத்த குரலில் நீர் கேட்டது.

நீரின் கண்ணீரை காண முடியவில்லை. எனினும் அதன் குரலில் துயரம் தெரிந்தது. நீரின் கடின தன்மையால் ஏற்படும் சில தீங்குகளை நான் கூறியது, நீருக்கு துயரத்தை தந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.

“ச்சே, ச்சே, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. கடின நீரால ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் இல்ல. என்ன, சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அவையும் கால்சியம் மெக்னீசியம் அயனிகளால தான். நீ என்ன பண்ணுவ?’ என்று கூறினேன். கூடவே, நீரின் பெருமைகளையும் எடுத்து கூறினேன்.

“அப்படியா?” என்றது நீர்.

“இப்ப தான் நினைவுக்கு வருது. உன்னோட கடின தன்மையால நன்மையும் இருக்கு.”

“என்னது?” ஆர்வமுடன் கேட்டது நீர்.

“கடின நீருல, குறிப்பா மெக்னீசியம் அயனிகள் அதிக அளவு இருக்கும் கடின நீருல தயாரிச்ச காபி ரொம்பவும் வலுவான சுவையுடன் இருக்குமாம். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இத கண்டிபிடிச்சிருக்காரு.”

“எப்படி?”

“என்ன, கடின நீருல இருக்கும் மெக்னீசியம் அயனிகள், கஃபின் போன்ற சுவை தரும் சேர்மங்கள அதிக அளவு கரைச்சு நீருல கொண்டு வருமாம். இதனால, டிகாஷன் வலுவான சுவையுடன் இருக்குமாம்.”

“நல்லது சார்.” என்றது நீர்.

“சரி” என்று கூறி, முக கவசத்தை துவைப்பதில் எனது கவனத்தை செலுத்தினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்

நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.