கண்டங்கத்திரி – மருத்துவ பயன்கள்

கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

பழங்குடி மக்கள் கண்டங்கத்திரி பழச்சாற்றை காதுவலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். கண்டங்கத்திரி பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் கோழையகற்றும் பண்பிற்காக சேர்க்கப்படுகின்றது.

கண்டங்கத்திரி செடி முழுவதும் கூர்மையான முட்கள் கொண்டது. முட்கள், மஞ்சளாக, பளபளப்பாக, 15 செ.மீ. நீளத்தில் காணப்படும். கண்டங்கத்திரி இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை.

கண்டங்கத்திரி பூக்கள் நீலநிறமானவை, 2 செ.மீ. நீளத்தில் சிறு கொத்துகளில் காணப்படும். கண்டங்கத்திரி செடியில் சிறு கத்தரிக்காய் வடிவமான காய்களும், மஞ்சள் நிறமான பழங்களும் உள்ளன.

கண்டங்கத்திரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், தரிசு நிலங்கள், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது. கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குள்; சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம் தீரும்.
கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

கறிமுள்ளி

கறிமுள்ளி தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும் நீலநிறமான பூக்களையும் வெள்ளை வரியுடைய உருண்டையான காய்களையும் மஞ்சள் நிறப் பழங்களையும் உடையது. பாப்பாரமுள்ளி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.

கறிமுள்ளி தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கின்றது. கறிமுள்ளி இலை, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இவை கோழையகற்றும்; சிறுநீர் மற்றும் வியர்வையை அதிகமாக்கும்.

கறிமுள்ளி இலைச்சாறு 3 தேக்கரண்டி, சிறிதளவு தேன்கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம், 3 நாட்கள் குடிக்க சளி குணமாகும்.

கறிமுள்ளி செடியை நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொண்டு, சம அளவு கற்கண்டுத் தூள் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இதில், ½ தேக்கரண்டி அளவு, தேவையான அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.