கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்

கண்டது கற்க பண்டிதன் ஆவான் என்ற பழமொழியை தாய் ஒருத்தி தன் குழந்தைகளுக்கு கூறுவதை பழங்கள் சேகரிக்கும்போது சிவப்பு பாண்டா சிவத்தைய்யா கேட்டது.

மூங்கிலை தின்பதை விட்டுவிட்டு பழமொழி பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என ஆர்வமுடன் அவர்களைக் கவனிக்கலானது.

அப்போது சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் “இந்தப் பழமொழி ஏதோ கண்டதையெல்லாம் படித்தால் பண்டிதன் ஆகலாம் என கூறுகிறதா அம்மா?” என்று கேட்டான்.

அதற்கு அவனுடைய அம்மா “சிலர் கண்ணால் கண்டவுடன் நுணுக்கமான விஷயங்களை எளிதில் கற்றுக் கொள்வர். சிலர் புத்தகங்களைப் படித்து அறிவினை வளர்த்து கொள்வர்.

இவ்வாறு ஏதாவது ஒரு வகையில் கல்விக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் இப்பழமொழி அமையுமானால் இதை நாம் வரவேற்கலாம். சரி இப்பழமொழி எவ்விதமாக தோன்றியது என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.

பழமொழி தோன்றிய விதம்

பாண்டவர்களும் கௌரவர்களும் சிறுவர்களாக இருந்தபோது அனைவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆழமான கிணற்றுக்குள் மோதிரம் ஒன்று விழுந்து விட்டது.

அதை எடுக்கும் வழியறியாது சிறுவர்கள் திகைத்து நின்றனர்.
அப்போது அவ்வழியே வந்த துரோணர் குழந்தைகள் அனைவரும் ஒரு கிணற்றை சுற்றி நிற்பதைக் கண்டார்.

துரோணரும் குழந்தைகளிடம் “குழந்தைகளே ஏன் எல்லோரும் கிணற்றைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்ன நடந்தது?” என வினவினார்.

குழந்தைகளும் மோதிரம் கிணற்றுக்குள் தவறி விழுந்ததைக் கூறினார்கள். உடனே துரோணரும் தனது வில்லை எடுத்து குறி பார்த்து அம்பு எய்தி அந்த மோதிரத்தை எடுத்துத் தந்தார்.

அப்போது அர்ச்சுனன் அந்த மோதிரத்தை வாங்கி மீண்டும் கிணற்றுக்குள் போட்டான். அதைக் கண்ட அனைவரும் திகைத்தனர். “மோதிரத்தை எடுக்க எவ்வளவு சிரமப்பட்டோம் இவன் மீண்டும் கிணற்றினுள் வீசி விட்டானே” என வாய்க்குள் முணுமுணுத்து அவன் மீது கோபம் கொண்டனர்.

இவற்றையெல்லாம் காது கொடுத்து கேளாத அர்ச்சுனன் தனது வில்லை எடுத்து துரோணர் அம்பை எய்ததை போலவே தானும் அம்புவிட்டான். மோதிரத்தை வெளியே எடுத்தான்.

‘கண்ட கலையை கற்காமல் விடக்கூடாது’ என அர்ச்சுனன் கண்ணால் கண்டவுடன் கற்றதனால், சிறந்த ‘வில்லாளி’ என்ற பெயரும் பெற்றான்.

இக்கதையின் மூலமாகவே ‘கண்டதும் கற்கப் பண்டிதன் ஆவான்!’ என்ற பழமொழி உருவாகியது.” என்று கூறினார்.

 

பழமொழி மற்றும் அதனுடைய விளக்கத்தை அறிந்த சிவப்பு பாண்டா சிவத்தையா நேராக வட்டப்பாறையை நோக்கி ஓடியது. அங்கே எல்லோரும் கூடி காக்கை கருங்காலனின் வரவினை எதிர்நோக்கி இருந்தனர்.

வட்டப்பாறையை அடைந்த சிவப்பு பாண்டா சிவத்தையா கூட்டம் ஆரம்பம் ஆகாததால் நிம்மதி பெருமூச்சு விட்டது. சிறிது நேரத்தில் காக்கை கருங்காலன் வட்டப்பாறைக்கு வந்தது.

கூட்டத்தினரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே “என் அருமை குஞ்சிகளே, குட்டிகளே. உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

சிவப்பு பாண்டா சிவத்தையா எழுந்து “தாத்தா இன்றைக்கான பழமொழி கூறும் வாய்ப்பினை எனக்கு தாருங்கள்” என்றது. காக்கை கருங்காலனும் “நல்லது சிவப்பு பாண்டா சிவத்தையா. நீ இன்றைக்கு என்ன பழமொழியைக் கூறப்போகிறாய்?” என்று கேட்டது.

சிவப்பு பாண்டா சிவத்தையா “நான் இன்றைக்கு கண்டது கற்க பண்டிதன் ஆவான் என்ற பழமொழியைக் கூறுகிறேன்” என்று தான் கேட்ட அனைத்தையும் கூறியது.

காக்கை கருங்காலனும் “பழமொழி மற்றும் அதன் விளக்கத்தைக் கூறிய சிவப்பு பாண்டா சிவத்தையாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.“ என்றது.

“கண்டது கற்க, பார்த்தவுடன் கற்றுக் கொள்வது அதாவது கல்வியை கற்க காலம் தாழ்த்துதல் ஆகாது என்ற வேறு ஒரு விளக்கமும் இப்பழமொழிக்கு உண்டு. சரி நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.” என்று கூறி காக்கை கருங்காலன் எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.