கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி என்ற பாடல்  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்கின்ற‌ ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையின் பன்னிரண்டாவது பாசுரம் ஆகும்.

பொழுது விடிந்து அதிக நேரம் ஆகியும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை விழித்தெழும்பும் படி அழைக்கும் பாடல் இது.

திருப்பாவை பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்

கன்றுகளைப் பிரிந்த எருமைகள் தங்களின் கன்றுகளின்மீது பாசம்கொண்டு அவைகளை நினைத்து கனைத்துக்கொண்டு வெளியிட்ட பாலால் தரை முழுவதும் சேறாகிக் கிடக்கின்ற வீட்டினைக் கொண்ட பெருஞ்செல்வனின் தங்கையே!

சீதையைக் கவர்ந்த, கொடுஞ்செயல்கள் செய்த இராவணனை அழித்த, நம்முடைய மனதிற்கு இனிமையை தரும் இராமனாகிய திருமாலை உன் வீட்டின் முன் நின்று பாடிக் கொண்டிருக்கிறோம்.

மார்கழி பனி எங்களின் தலையில் விழுந்து கொண்டிருக்க நாங்கள் உன் வீட்டின் முன் மங்கள கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கிறோம்.

நீயோ, எதனையும் கேளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாய். பொழுது விடிந்து எல்லோரும் எழுந்து விட்டனர்.

நாங்கள் உன்னை எழுப்பும் செயல் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இனியாவது எழுந்திரு. என்ன இந்த உறக்கம். உறக்கத்தை விட்டு மார்கழி நோன்பு நோற்க வாராய்.

கோதை என்ற ஆண்டாள்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.