கரடி என்ன சொன்னது?

கரடி என்ன சொன்னது என்ற இக்கதையிலிருந்து தன்னலம் கொண்ட நபர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இனி கதையைப் பார்ப்போம்.

காட்டு வழி பயணம்

செவ்வூர் என்ற ஊரில் ராமு சோமு என்ற இரு நண்பர்கள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் தங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊரான மஞ்சளூருக்கு செல்ல வேண்டி இருந்தது.

செவ்வூருக்கும், மஞ்சளூருக்கும் இடையே அடர்ந்த காடு ஒன்று இருந்தது. ஆதலால் நண்பர்கள் இருவரும் நடந்து காட்டினைக் கடந்து மஞ்சளூருக்குச் செல்ல தீர்மானித்தனர்.

 

கரடி வந்தது

அதன்படி காட்டிற்குள் இருவரும் நடந்து சென்றனர். நடுக்காட்டில் திடீரென கரடி உருமும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி ராமுவும் சோமுவும் திரும்பிய போது கரடி ஒன்று தூரத்தில் வருவது தெரிந்தது.

ராமுவும் சோமுவும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அப்போது சோமு ராமுவிடம் “ராமு வா நாம் இருவரும் இங்கே இருக்கும் பெரிய மரம் ஒன்றில் ஏறிக் கொள்வோம். கரடி சென்றதும் நாம் கீழே இறங்கி நமது பயணத்தைத் தொடருவோம்” என்று கூறினான்.

இதனைக் கேட்டதும் ராமு “ஐயோ ராமு, எனக்கு மரம் ஏறத் தெரியாதே. இப்போது என்ன செய்வது?” என்று கேட்டான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே கரடி அவர்களை சற்று நெருங்கி இருந்தது.

இதனைக் கண்டதும் சோமு அருகில் இருந்த பெரிய மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். அப்போது ராமுவுக்கு கரடி பிணத்தை ஏதும் செய்வதில்லை என்று ஊரில் பெரியவர்கள் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

ஆதலால் கரடி அருகில் வரும்போது மூச்சை அடக்கிக் கொண்டு பிணம் போல் நடித்தால் தப்பித்து விடலாம் என்று திட்டத்தை ராமு தீட்டினான்.

அதன்படி தரையில் படுத்துக் கொண்டான். கரடி ராமுவை நெருங்கி வந்ததும் ராமு மூச்சை அடக்கி பிணம்போல் நடித்தான். கரடி ராமுவின் முகம் மற்றும் உடலில் மோந்து பார்த்துவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது.

 

கரடி என்ன சொன்னது?

கரடி சென்ற சிறிது நேரத்தில் சோமு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தான். ராமுவிடம் சோமு “ராமு கரடி உன்னிடம் என்ன சொன்னது?” என்று கேலியாகக் கேட்டான்.

அதற்கு ராமு “தன்னலம் கொண்டவர்களை நண்பனாகக் கொள்ளக் கூடாது. ஆபத்தில் உதவாதவன் நண்பன் அல்லன்” என்று கூறி தனியே நடக்கத் தொடங்கினான். சோமு அவமானத்தில் தலை குனிந்தான்.

இக்கதையின் நீதி

நாம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்பவர்களை நண்பர்களாக ஏற்கக் கூடாது. அவர்களை அடையாளம் கண்டு நாம் ஒதுங்கி இருப்பது நன்மை பயக்கும்.

வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.