கல்லூரி எதற்கு?

1971ஆம் வருடம் ஜூன் மாதம் பி.யூ.சி.யின் மதிப்பெண் பட்டியலையும், முதல் மாணவன்  என்ற சான்றிதழையும் பெற்றுக் கொண்டு தே.தி.இந்துக் கல்லூரி சென்றேன்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முறைப்படி நிரப்பி அலுவலகத்தில் இணைப்புகளுடன் கொடுத்தேன். மதிய உணவிற்குப் பின் கல்லூரி முதல்வரைப் பார்க்க என்னிடம் கூறப்பட்டது. காத்திருந்தேன், உரிய நேரம் வந்தது. முதல்வர் அறையில் பெரும் கூட்டம், வரிசையாக நின்று எனது முறை வந்ததும் உள்ளே அனுப்பப்பட்டேன்.

கல்லூரி முதல்வர் திரு.எல்.சிதம்பர தாணு பிள்ளை வணிகவியல் துறைத் தலைவர், அவரை எல்.சி.தாணு என அனைவரும் அழைப்பார்கள், கம்பீரமான தோற்றம் உடையவர்.

பளிச்சென்று நீண்ட இரு கைகளிலும் பட்டன் போட்ட சட்டை அணிந்து அதனைப் பேன்டின் உள்ளே இன்பண்ணிக் கம்பீரமாக இருந்தார். நெற்றியில் ஒரு சிறிய சந்தனப் பொட்டு, வாய் நிறைய வெற்றிலை.

என்னை அவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு, திடீர் என உரத்த குரலில் என்ன விளையாடுகிறாயா? பி.ஏ.தமிழ் வேண்டும் என்று கேட்கிறாய்.

இன்று தமிழ் வேண்டும் என்கிற நீ, நாளை வந்து பி.காம் வேண்டும் என்பாய். ரேங்க் வாங்கி இருக்கும் நீ பி.காம் படித்தால் என்ன? என்று என்னை அதட்டிவிட்டார்.

நான் பயம் கலந்த தொனியில் மெதுவாக சார் நான் தமிழ் படிக்க ஆர்வமாக இருக்கிறேன் சேர்ந்த பின் குரூப் மாற்றிக் கேட்க மாட்டேன் என்று கூறினேன்.

உடன் அவர் ஒண்ணு தெரிஞ்சுக்கோ படிச்சு சோத்துக்கு வழியுண்டா? என்று பார்க்க வேண்டும் தமிழ் உனக்கு சோறு போடாது. நல்லா யோசிச்சிட்டு இன்று போய்; நாளை வா என்று கூறி நெக்ஸ்டு என்று அடுத்த மாணவரை அழைத்து விட்டார்.

நான் போர்க்களத்தில் இராவணன் அவமானப்பட்டது போன்று எனது கர்வமெல்லாம் அடங்கித் தலையைத் தொங்கவிட்டு அறையை விட்டு வெளியேறினேன்.

மறுநாள் காலையே முதல்வர் அறைமுன் வரிசையில் நின்றிருந்தேன். மாணவர்கள் பலரும் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் அறைக்குள் சென்று வந்தனர்.

என் முன்னர் ஒரு மாணவரும், அவருடைய தந்தையும் நின்றிருந்தனர். வயது முதிர்ந்த தந்தை, மேலாடையுடன் தோளில் ஒரு டவலையும் போட்டிருந்தார். சற்று அழுக்கேறிச் சிறிது வெளிறிய ஆடைகளை அணிந்திருந்தார்.

அவரையும், அவர் மகனையும் பார்க்கும் பொழுது அநேகமாக கிராமத்தைச் சார்ந்தவர்களாகவும் அதிலும் கடற்கரைக் கிராமத்தினர் போன்றும் இருந்தனர்.

வரிசை முதல்வரை நோக்கி நகர்ந்தது. முதல்வர் அறைக்குள் இப்பொழுது நான்கு ஐந்து பேர் அனுப்பப்பட்டனர். நானும் என்முன் நின்றிருந்த பெரியவர், அவர் மகன் என மூன்று பேர் அறையின் உள்ளே அனுப்பப்பட்டோம்.

முதலில் அந்த மாணவரும் அடுத்து அவர் தந்தையும், மூன்றாவதாக நானுமாக முதல்வர் அறையில் நுழைந்தோம்.

சற்றும் எதிர்பாராத விதமாக கல்லூரி முதல்வர் எல்.சி.தாணு அவர்கள் உச்சஸ்தாயியில் கத்த ஆரம்பித்து விட்டார். அந்த மாணவனைப் பார்த்து, அவர் கத்திக் கொண்டே சொன்னார்.

என்னடா படித்திருக்கிறாய்? கொஞ்சம் கூட உனக்கு மரியாதை தெரியவில்லை, ஒரு பிரின்சிபாலைப் பார்த்ததும் விஸ் பண்ண வேண்டும் என்று உனக்கு எவருமே சொல்லித் தரவில்லையா? தடிமாடு போல வந்து நிற்கிறாய், உனக்கு எல்லாம் எவண்டா சர்டிபிகேட் தந்தது? உனக்கு ஒரு பண்பாடும், நாகரிகமும், மரியாதையும் தெரியவில்லை என்று மிக உரத்த குரலில் கண்டித்துப் பேசியதைப் பார்த்த எனக்குப் பெரும் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டுவிட்டன.

ஆனால் உடன் வந்த அந்த அழுக்கேறிய ஆடை அணிந்த பெரியவர் முதல்வரைப் பார்த்துச் சொன்னார், ‘ஐயா, என் மகனுக்குப் பண்பாடும், நாகரிகமும், மரியாதையும் தெரியாததனால் தான் அவனை உங்கள் காலேஜில் சேர்க்கக் கூட்டிகிட்டு வந்திருக்கேன்.” என்றார்.

என் மகன் நீங்க சொன்ன மாதிரி பண்பாடு தெரியாம தடிமாடு மாதிரி வளர்ந்திட்டான். பெரியவங்களைப் பார்த்தா மரியாதைக்குக் கையெடுத்துக் கும்பிட வேணும் என்று சொல்லிக் கொடுங்கையா. அவனை நீங்க தான் மனுசனாக்க வேணும், அவன் மனிதனாக மாற வேண்டும். அதனால தான் உங்கள் காலேஜில் எம் பிள்ளை படிக்கணும் ஐயா என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

அந்த அறை நிசப்தமாக இருந்தது, முதல்வர் தலை குனிந்தார். அவன் விண்ணப்பத்தினை எடுத்து கையெழுத்திட்டு அட்மிஷன் கொடுத்தார்.

அடுத்து நின்ற நான் மிகுந்த அச்சத்துடன் நின்றிருந்தேன். என்னை உற்றுப்பார்த்தார். அவருக்கு முந்தைய நாள் நிகழ்ச்சி நினைவிற்கு வந்து விட்டது.

என்னைப் பார்த்து என்ன முடிவுடன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். நான் அச்சத்துடன் கம்மியகுரலில், தமிழ் சார் என இழுத்தேன். என்ன நினைத்தாரோ திடீரென போ தமிழ்ப்படி ஆனால் என்னிடம் குரூப் சேஞ்சு கேட்கக் கூடாது என்று கூறிக் கொண்டே அனுமதித்து ஆணையிட்டு விண்ணப்பத்தினை எனது கையில் கொடுத்தார். நன்றி கூறிப் பெற்றுக் கொண்டேன்.

அதுவரை நின்றிருந்த அந்த மாணவனும், தந்தையும் முதல்வருக்கு இருகை கூப்பி நன்றி கூறி வணங்கிவிட்டு வெளியேறும் பொழுது, தந்தை முதல்வரைப் பார்த்துக் கூறினார்.

‘எங்கப் பிள்ளைகளை இந்த மாதிரிப்பட்ட கல்லூரி தாங்க மனிதனாக மாத்தணும். தரமாக வாழ நீங்கதான் சொல்லித்தரணும். அதுக்குத் தாங்க நாங்க கல்லூரிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புகிறோம்’ என்று கூறி வெளியேறினர். நானும் அவரைப் பின் தொடர்ந்து வெளியேறினேன்.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்