கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர்.

கண்ணதாசன் திரைச்கதை ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசவை கவிஞர் என பன்முகம் கொண்டவர்.

பொதுவாக இவர் திரைப்படப் பாடலாசிரியராகவே எல்லோராலும் அறியப்படுகிறார். இவர் தமிழ்மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தை மிகவும் விரும்பினார். அதனை அவரின் பாடல்கள் மற்றும் உரைநடைகள் மூலம் நாம் அறியலாம்.

காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கிய சாமி என பல புனைப் பெயர்களில் கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1944 முதல் 1981 வரை உள்ள காலத்தில் பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் புதினங்ள் ஆகியவற்றை எழுதியுள்ளார். கவிஞர், கவியரசு என்று எல்லோராலும் போற்றப்படுகிறார்.

சண்டமாருதம், திருமகள், திரைஒலி, தென்றல், தென்றல்திரை முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். சாகித்ய அகடாமி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த வசனகர்த்தா ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் மொழியின் முக்கிய மற்றும் சிறந்த எழுத்தாளராகப் போற்றப்படுகிறார்.

இவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூல் இந்து மதத்தின் தத்துவங்களை சிறப்பாக விளக்குகிறது. இவர் செய்யுள் வடிவில் ஏசுவின் வரலாற்றை ஏசுகாவியம் என்னும் பெயரில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

பிறப்பு மற்றும் இளமைப் பருவம்

கண்ணதாசன் 24.06.1927ல் சிறுகூடல்பட்டி என்னும் ஊரில் சாத்தப்பனார், விசாலாட்சி ஆகியோருக்கு 8வது பிள்ளையாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் 7 பேர். இவரது இயற்பெயர் முத்தையா என்பதாகும்.

இவர் சிறுவயதிலேயே 7000 ரூபாய்க்கு தத்துக்கொடுக்கப்பட்டு நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சிறு கூடல் பட்டியிலும், உயர்நிலைக் கல்வியை அமராவதி புதூரில் பயின்றார். இவர் 8வது வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றார்.

 

பத்திரிக்கை ஆசிரியராக கண்ணதாசன்

இவர் 1943ல் (தனது 16 வயதில்) சென்னை திருவெற்றியூரில் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் அனுப்புகை எழுத்தராக வேலைக்கு சேர்ந்தார். சிறுவயதிலேயே கண்ணதாசன் எழுத்தார்வம் மிக்கவராய் நிகழ்ந்தார்.

ஏஜாக்ஸ் நிறுவனத்தில் வேலைபார்க்கும் போதே இவர் எழுதிய ‘நிலவொளியிலே’ என்ற கதை கிரக லெட்சுமி பத்திரிக்கையில் வெளியானது. இதுவே இவர் எழுதிய முதல் கதை ஆகும்.

பின் மறுவருடம் 1944ல் ஏஜாக்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறி திருமகள் பத்திரிக்கையில் விளம்பரம் சேகரிக்கும் வேலையில் சேர்ந்தார். பின் அப்பத்திரிக்கைக்கே தனது எழுத்து திறமையின் மூலம் பத்திரிக்கை ஆசிரியரானார்.

இங்கு இவர் தனது முதற்கவிதையான் ‘காலை குளித்தெழுந்து’ என்பதனை எழுதினார். பின் திரை ஒலி, மேதாவி ஆகிய பத்திரிக்கைகளின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1954ல் தென்றல் கிழமை இதழைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம் என்னும் மாதமிருமுறை பத்திரிக்கையை தொடங்கினார். 1956ல் முல்லை இலக்கிய மாத இதழைத் தொடங்கினார்.

1960-1961ல் தென்றல் திரை நாளிதழையும், 1968-1969ல் கண்ணதாசன் மாத இதழையும், கடிதம் நாளிதழையும் தொடங்கினார்.

 

திரைப்படத்துறையில் பாடலாசிரியர்

1949ல் மார்டன் தியேட்டர்களின் சண்ட மாருதம் பத்திரிக்கையில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின் மார்டன் தியேட்டர்ஸின் கதை இலக்காப்பிரிவிற்கு மாறினார். இவ்வாறு திரைப்படத்துறையில் கண்ணதாசன் நுழைந்தார்.

இவர் கன்னியின் காதலி என்னும் படத்தில் ‘கலங்காதிரு மன‌மே’ என்ற தனது முதல் திரைப்படப்பாடலை 1949ல் எழுதினார். தத்துவம், காதல், சோகம், சந்தோசம், ஆன்மீகம் ஆகியவை பற்றிய திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய

அச்சம் என்பது மடமையடா,

சரவணப் பொய்கையின் நீராடி,

மலர்ந்தும் மலராத,

போனால் போகட்டும் போடா,

கொடியசைந்ததும் காற்று வந்ததா?

எங்கிருந்தாலும் வாழ்க,

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்,

சட்டிசுட்டதடா,

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,

நிலவைப் பார்த்து வானம் சொன்னது,

பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

இவர் முத்தான முத்தல்லவோ என்னும் பாடலை 10 நிமிடங்களில் எழுதி முடித்தார். நெஞ்சம் மறப்பதில்லை. அது நினைவை இழப்பதில்லை என்னும் பாடலை முடிக்க அதிக நாட்கள் எடுத்துக் கொண்டார். கண்ணே கலைமானே என்பதுதான் இவர் எழுதிய கடைசி திரைப்படப் பாடல் ஆகும்.

 

திரைப்படத்துறையில் நடிகர்

ஆரம்ப காலத்தில் இவர் தனது பெயரை சந்திரமோகன் என மாற்றிக்கொண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கேட்டார். பின் பராசக்தி, இரத்ததிலகம், கறுப்புபணம், சூரியகாந்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக

1957ல் மாலையிட்ட மங்கை, 1958-1959ல் சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

 

அரசியல்

1949ல் திமுகவில் ஆரம்பகால உறுப்பினரானார். 1957ல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷ்டியூரில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1960-1961ல் திமுகவிலிருந்து வெளியேறினார். பின் சம்பத் தலைமையிலான‌ தமிழ் தேசியக் கட்சியில் சேர்ந்தார். 1962-1963ல் காங்கிரஸில் இணைந்தார். 1964-1966ல் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

 

திருமணம்

1950ல் இவர் பொன்னழகி என்ற பொன்னம்மாளை திருமணம் செய்தார். இவர்களுக்கு கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய நான்கு மகன்களும், அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

பின் அதே ஆண்டு பார்வதி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு காந்தி கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிகய ஐந்து மகன்களும், ரேவதி, கலைசெல்வி ஆகிய இரண்டு மகளும் உள்ளனர்.

இவர் தனது ஐம்பாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு விசாலி என்ற மகள் உள்ளார். மொத்தம் இவருக்கு 15 குழந்தைகள் உள்ளனர்.

கண்ணதாசன் சுமார் 35 ஆண்டுகள் திரைப்படத்துறையில் பாடல்கள் எழுதியுள்ளார். இவர் தன் வாழ்க்கை வரலாற்றை வனவாசம், மனவாசம் என்னும் தலைப்புகளில் எழுதியுள்ளார்.

1952-1953ல் டால்மியாபுரம் பெயர் மாற்றத்திற்காக போராட்டம் நடத்தி சிறை சென்ற போது மாங்கனி என்னும் நூலினைப் படைத்தார். இது இவரது முதற்காவியம் ஆகும். அதே சிறையில் இருந்த போதே தனது முதற்கதை வசனத்தை ‘இல்லற ஜோதி’ என்னும் படத்திற்கு எழுதினார்.

இவர் ரஷ்யா மற்றும் மலேசியா நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாட்டு தமிழ்சங்க விழாக்களில் பங்கேற்றுள்ளார். 1981ல் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் தமிழ்சங்க விழாவிற்கு சென்றபோது உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.1981ல் இயற்கை எய்தினார். 22.10.1981 அன்று அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

பரிசுகள் மற்றும் சிறப்புகள்

1961ல் சிறந்த வசனகர்த்தாவிற்கான தேசிய விருது இவருக்கு ‘குழந்தைக்காக’ என்னும் திரைப்படத்தில் வழங்கப்பட்டது.

1970ல் மத்திய மாநில அரசுகளின் சிறந்த பாடலாசியரியர் விருதினைப் பெற்றார்.

1978ல் தமிழ்நாட்டின் அரசவைக் கவிஞராக பதவி ஏற்றார்.

1979ல் இவரின் சேரமான காதலி என்ற நாவலுக்கு சாகித்ய அகடாமி பரிசு வழங்கப்பட்டது.

1979ல் சிறந்த கவிஞருக்கான அண்ணாமலை அரசரின் நினைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு இவரைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு நூலகமும், கண்ணதாசன் தொடர்பான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

– வ.முனீஸ்வரன்