காடு – அழகின் சிரிப்பு

காடு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், காடு எத்தனை அழகுடையது என்று புரியும்: உடனே ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும்.

 

 

             காடு

மலைப்பு வழி

நாடினேன்; நடந்தேன்; என்றன்
நகரஓ வியத்தைத் தாண்டித்
தேடினேன்; சிற்றூர் தந்த
காட்சியைசி சிதைத்தேன்; சென்றேன்;
பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த
பாதையை இழந்தேன். அங்கே
மாடிவீ டொன்று மில்லை
மரங்களோ பேச வில்லை!

 

வழியடையாளம்

மேன் மேலும் நடந்தேன்; அங்கே
“மேற்றிசை வானம்” என்னை
“நான் தம்பி என்னை நோக்கி
நட தம்பி” எனச்சொல் லிற்று!
வான்வரை மேற்குத் திக்கை
மறைத்திட்ட புகைநீ லத்தைத்
தேன்கண்டாற் போலக் கண்டேன்
திகழ் காடு நோக்கிச் சென்றேன்.

 

காட்டின் அருகு

வன்மை கொள் பருக்கைக் கல்லின்
வழியெலாம் பள்ளம், மேடு!
முன்னாக இறங்கி ஏறி
முதலைகள் கிடப்ப தைப்போல்
சின்னதும் பெரிது மான
வெடிப்புகள் தாண்டிக் சென்றேன்;
“கன்மாடம்” எனும்பு றாக்கள்
கற்களைப் பொறுக்கக் கண்டேன்.

 

மயிலின் வரவேற்பு

மகிழ்ந்துநான் ஏகும் போதில்
காடுதல் மயிலை ஏவி
அகவலால் வரவேற் பொன்றை
அனுப்பிற்றுக்! கொன்றைக் காய்க்கு
நிகரான வாலை ஆட்டிக்
காரெலி நின்று நின்று
நகர்ந்தது. கூடச் சென்றேன்
நற்பாதை காட்டும் என்றே.

 

தமிழா நீ வாழ்க!

முகத்திலே கொடுவாள் மீசை
வேடன், என் எதிரில் வந்தான்.
அகப்பட்ட பறவை காட்ட,
அவற்றின்பேர் கேட்டேன்! வேடன்
வகைப்பட்ட பரத்து வாசன்
என்பதை வலிய‌ன் என்றான்;
சகோ ரத்தைச் செம்போத் தென்றான்!
தமிழா நீ வாழ்க என்றேன்.

 

வேடன் வழி கூறினான்

“போம் அங்கே! பாரும் அந்தப்
புன எலு மிச்சை என்றான்
ஆம் என்றேன்” அதைத்தான் ஐயா
குருந்தென்றும் அறைவார் என்றான்!
ஆம் என்றேன் தெரிந்த வன்போல்!
“அப்பக்கம் நோக்கிச் சென்றால்
மாமரம் இருக்கும் அந்த
வழிச்செல்வீர்” என்றான் சென்றேன்.

 

காட்டின் உச்சிக் கிளையில் குரங்கு ஊசல்

செருந்தி, யாச் சா, இலந்தை,
தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு மூங்கில், இரு குரங்கு
கண்டேன் பொன் னூசல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
கோணல்மா மரமும் கண்டேன்!

 

பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான் கன்றை நரியடித்தது

ஆனைஒன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனை ஒன் றணுகும்; அங்கே
புலி ஒன்று தோன்றம்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.

 

மயிலுக்கு கரடி வாழ்த்து

இழந்தபெட் டையினைக் கண்டே
எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட் டெழுந்த கூட்டக்
கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம் விரிக்கும்
தனி மயிலால், அடைத “தேன்”
வழிந்திடும்; கரடி வந்து
மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.

 

பயன்பல விளைக்கும் காடு

ஆடிய கிளைகள் தோறும்
கொடிதொங்கி, அசையும்! புட்கள்
பாடிய படியி ருக்கும்!
படைவிலங் கொன்றை யொன்று
தேடிய படியிருக்கும்!
காற்றோடு சருகும் சேர்ந்து
நீடிசை காட்டா நிற்கும்;
பயன்தந்து நிற்கும் காடே!

– பாவேந்தர் பாரதிதாசன்