கார்த்திகை விரதம்

கார்த்திகை விரதம் என்பது இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரத முறை மேற்கொண்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும்.

முருகனை எண்ணி நோற்கக்கூடிய முக்கிய விரதங்களாக கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம், வெள்ளிக் கிழமை விரதம் ஆகியவை கருதப்படுகின்றன.

இதில் கார்த்திகை விரதம் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும், கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியிலும், வெள்ளிக்கிழமை விரதம் வாரந்தோறும் வரும் வெள்ளிக் கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரதம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று தொடங்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை, ஆடியில் வரும் ஆடிக்கார்த்திகை, தையில் வரும் தைக்கார்த்திகை ஆகிய மூன்று கார்த்திகை நாட்களில் கடைப்பிடிக்கப்படும் விரதம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுப்படுகிறது.

இவ்விரதத்தை வழிபாட்டினை மேற்கொள்வதால் வாழ்வின் எல்லா செல்வங்களும் கிடைப்பதாக் கருதப்படுகிறது. நாரதர், அருணகிரிநாதர், அரிசந்திரன், திரிசங்கு, பகீரதன் உள்ளிட்டோர் இவ்விரதத்தினைப் பின்பற்றி வழிபாடு செய்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன

 

கார்த்திகை விரதம் தோன்றிய முறை

சிவபெருமான் சூரபத்ம சகோதரர்களின் மூலம் தேவர்களுக்கு உண்டான துயரத்தினை நீக்கும் பொருட்டு தனது தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் ஆகிய முகங்களுடன் ஆறாவது முகமான அதோமுகம் முதலியவைகளிலிருந்து நெருப்புப் பொறிகளை உருவாக்கினார்.

இந்நெருப்புப் பொறிகளை அக்னியும், வாயும் கங்கையின் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தனர். அப்பொறிகள் ஆறுகுழந்தைகளாக ஆறு தாமரை மலர்களில் உருவாக்கினர்.

அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் சீராட்டி பாலூட்டி வளர்த்தனர். அப்போது ஒருநாள் சிவபெருமானும், உமையம்மையும் குழந்தைகளைக் காண அங்கு வந்தனர்.

உமையம்மை ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஒரே குழந்தையாக மாற்றினார். அவ்வாறு ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தைகளாக மாறிய நாள் திருகார்த்திகை நாள் ஆகும்.

சிவபெருமான் கார்த்திகையில் முருகப்பெருமானை நினைத்து விரதமுறையினை மேற்கொண்டு வழிபாடு செய்தால் வாழ்வின் எல்லா செல்வங்களும் கிட்டும் என்று அருளினார்.

 

கார்த்திகை விரத வழிபாட்டு முறைகள்

கார்த்திகை விரதமுறையானது கார்த்திகை மாதம் வரும் திருகார்த்திகை தினம் முதல் மேற்கொள்ளப்பட்டு பின் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரத முறையினை மேற்கொண்டு வழிபட்டால் வாழ்வின் உன்னத நிலையை அடையலாம்.

இம்முறையில் கார்த்திகை நட்சத்திரமானது மாலை ஐந்து மணி மேல் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கார்த்திகை தினத்தில் விரதமுறையை மேற்கொள்வோர் கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி அன்று நண்பகலில் உணவினை உண்டு இரவில் உண்ணாமல் விரத வழிபாட்டினைத் தொடங்க வேண்டும்.

மறுநாள் கார்த்திகையில் நீராடி முருகனை வழிபட்டு அன்று முழுவதும் விரதமிருந்து தியானம், பாராயணம், கோவில் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

பகலிலும் இரவிலும் உறங்கக் கூடாது. மறுநாள் ரோகிணி அன்று காலையில் நீராடி முருகனை வழிபாடு மேற்கொண்டு உணவு உண்ணலாம்.

மாதந்தோறும் கார்த்திகை அன்று அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும். பின் பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயசெயல்களில் ஈடுபடாது இருக்க வேண்டும்.

மாலையில் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். இவ்விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகனைப் பற்றியவற்றை பராயணம் செய்யலாம்.

வழிபாட்டின்போது கந்தரப்பம், பாசிப்பருப்பு பாயாசம், இனிப்புக்கள், பழங்கள் ஆகியவை படைக்கப்படுகின்றன. இவ்விரத்தில் பட்டினி இருக்க முடியாதவர்கள் பால், பழம் ஆகியவற்றை உண்ணலாம்.

மாலை வழிபாட்டிற்குப்பின் விரதமுறை முடிக்கப்பட்டு உணவு உண்ணப்படுகிறது. கார்த்திகை விரதத்தின்போது அன்னதானம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அன்றைய தினம் கோவில்களில் அன்னதானமும் நடைபெறுகிறது.

கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதமுறையினை மேற்கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, நிம்மதியான வாழ்வு ஆகியவை கிடைக்கும்.

இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும்பேற்றினையும் இறுதியில் முக்தியையும் பெறலாம்.

கார்த்திகை விரதத்தினைப் பின்பற்றி நற்பேறு பெற்றவர்கள்

கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பெரும் பேற்றினைப் பெற்றார்.

திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள்.

மகிசனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவங்கள் நீங்க உமையம்மை திருகார்த்திகை விரதத்தினை மேற்கொண்டு விளக்கேற்றி பாவங்கள் நீங்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை விரதத்தினை மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு முருகன் அருளால் வாழ்வின் எல்லா நலன்களும் பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.