கீரை மசியல் செய்வது எப்படி?

இன்றைக்கு வீட்டில் கீரை மசியல் என்றதும் நிறையப்பேருடைய “1000” வாட்ஸ் முகம் கூட “0” வாட்ஸ் ஆகிவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு கீரையுடைய மருத்துவ குணங்களையும் அறியத் துவங்கினால் மறுபடியும் “1000” வாட்ஸ் ஆகிவிடும். சாப்பிட்டாலும் தான். இந்த சுவையான கீரை மசியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை -1 கட்டு

பச்சை மிளகாய் – 3

பூண்டு (நசுக்கியது) – 3 பல்

பெருங்காயம் – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

தாளித்து வதக்க:

கடுகு – ¼ டீஸ்பூன்

சீரகம் – ¼ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 10

எண்ணெய் – 3 தேக்கரண்டி

தக்காளி – 2

 

செய்முறை:

கீரை மசியல் செய்ய முதலில் கீரையை படத்தில் காட்டியவாறு சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த அரைக்கீரை
சுத்தம் செய்த அரைக்கீரை

பின் கீரையை பொடியாகவும், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நீளவாக்கிலும் அரிந்து கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.தக்காளியை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

குக்கரில் பொடியாக அரிந்த அரைக்கீரை, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் (தேவை எனில் விதையை நீக்கிக் கொள்ளவும்), நசுக்கிய பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை பருப்புக் கடையும் மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.

அதோடு நீளவாக்கில் அரிந்த சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி கடைசியாக தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். படத்தில் காட்டியவாறு எண்ணெய் பிரியத் துவங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.

தக்காளி விழுது, சின்ன வெங்காயம் வதக்கிய கலவை
தக்காளி விழுது, சின்ன வெங்காயம் வதக்கிய கலவை

இந்தக் கலவையை கீரையோடு சேர்த்து தேவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து இன்னொரு முறை கடைந்து விடவும். சுவையான கீரை மசியல் தயார்.

கீரை மசியல்
கீரை மசியல்

குறிப்பு: பருப்பு சேர்க்காமல் செய்தால் அரைக்கீரை சுவையாக இருக்கும்.

சிறுகீரைக்கு கீரை வேகும் போது சிறிது துவரம் பருப்போ அல்லது பாசிப் பருப்போ சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும்.

கீரையை சரிவர கடையாவிடில் முதியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். அதனால்தான் கீரையை பொடியாக அரிந்து செய்கிறோம். மிக்சியில் மைய அரைத்தால் கீரை அவ்வளவு சுவையாக இருக்காது.

பிரதிபா செந்தில்