குடிக்கு அடிமையான தமிழகம்

குடிக்கு அடிமையான தமிழகம் என்பது தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று. தன் கட்டுப்பாட்டில் குடியை வைத்திருக்காமல் குடியின் கட்டுப்பாட்டிற்குள் தமிழன் வந்துவிட்டான்.

குடிப்பது தவறா?

என் நண்பர் ஒருவர் கடந்த மாதம் வெளிநாடு சென்று வந்தார். ஒரு மாலைப்பொழுதில் தனது பயண அனுபவங்களை அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் முக்கியான விசயம் குடி.

நமது நாட்டில் எல்லா ஊரிலும் டீக்கடைகள் மிகஅதிகம். நீங்கள் ஒரு டீ குடிக்க வேண்டுமென்றால் அதிகபட்சம் 100 மீட்டர்கூட நடக்க வேண்டியது இருக்காது.

நமது நாட்டில் டீ கிடைப்பதுபோல் அவர் சென்ற வந்த நாட்டில் எல்லா இடத்திலும் மிகச்சாதாரணமாக பீர் கிடைத்துக் கொண்டே இருந்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டார்.

எல்லா இடத்திலும் மது அருந்த வாய்ப்பு இருந்தாலும் குடித்து விட்டுத் தெருவில் விழுந்து கிடந்த ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்றார் நண்பர்.

குடிப்பது தவறில்லை ஆனால் குடிக்கு அடிமையாக இருப்பது மிகப்பெரிய தவறு என்றே எனக்கு தோன்றியது.

வாழ்க்கையின் இன்பங்களில் மதுபானமும் ஒன்று. அதனை அனுபவிப்பதில் சிலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் குடிமட்டுமே இன்பம் தரும் என்று அதனிடம் நிறைய தமிழர்கள் சரணடைந்து விட்டது வேதனை தரும் விசயம்.

குடி என்ன செய்யும்?

கட்டுப்பாடில்லாத குடி ஒருவனது வாழ்வை சிதைத்து விடும்.

தன் மனைவிடம் இனிமையாகப் பழகவிடாமல் மணவாழ்க்கையைத் தோல்வியில் தள்ளிவிடும்.

பெற்ற குழந்தைகளை நம்மிடம் அண்டவிடாமல் செய்துவிடும்.

நம்முடைய திறமைகளைப் பயன்படுத்தி நம் பொருளாதாரத்தை உயர்த்த முடியாமல் செய்துவிடும்.

கடைசியாக நம்முடைய உடல்நலத்தைக் கெடுத்து வாழ்வைப் பாரமாக்கிவிடும்.

நம் கட்டுப்பாட்டில் குடி

ஒரு காலத்தில் குடிப்பவர்கள் குறைவாகவும் குடிக்காதவர்கள் நிறைவாகவும் தமிழ்நாட்டில் இருந்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது என்றே எண்ணுகிறேன்.

நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று சொல்லிக் கொண்டே அரசு மதுவிற்பனையில் மும்மரமாக இருக்கின்றது.

புதிய குடிகாரர்கள் உருவாகாமல் தடுப்பதில் இரண்டு வகையினர் அதிக பங்காற்ற முடியும். முதலில் திரைத்துறையினர்; அடுத்தது இன்றைய குடிகாரர்கள்.

தங்களது திரைபடங்களில் குடிப்பழத்தை ஊக்கப்படுத்தாமல் இருந்தால் திரைத்துறையினர் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய சேவையாக அது இருக்கும்.

நான் குடிப்பேன்; ஆனால் என் முன்னால் புதிதாக குடிக்க ஆரம்பிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று தற்போது குடிப்பவர்கள் நடந்து கொண்டால் அது அவர்களின் மிகச்சிறந்த தொண்டு.

 

பெற்றோர்களின் பங்கு

பெற்றோர்களும் கவனத்துடன் பிள்ளைகளிடம் பழக வேண்டும்.

பிள்ளைகளுக்கு அதிகமான மனஅழுத்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இனிமையாகப் பழகும் வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

விழாக்களின் முக்கியத்துவம் புரிந்து விழாக்களைக் குழந்தைகள் அனுபவித்து மகிழுமாறு செய்ய வேண்டும்.

நல்ல நண்பர்கள் நமது மனக்கவலைகளை நீக்கும் அருமருந்து என்பதைப் புரிய வைக்க வேண்டும்.நல்ல நண்பர்களைக் குழந்தைகள் உருவாக்கப் பெற்றோர் உதவ வேண்டும்.

மனக்கஷ்டத்திற்குப் போதைப்பழக்கம் தீர்வல்ல என்பதைச் சொல்ல வேண்டும். போதையின் பாதை என்பது மீளமுடியாத மாயவலை என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

கட்டுப்பாடான இன்பம் நீடித்த இன்பம் என்று அனைவரும் உணர்ந்தால் குடியின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழகம் விடுபடும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

நலத்திட்டங்கள் செயல்படுத்த நிதி வேண்டும்; மறுப்பதற்கில்லை. ஆனால் எந்த ஏழைக்கு நாம் உதவி செய்ய நினைக்கின்றோமோ, அவனுடைய இரத்தத்தை உறிஞ்சிதான் நலதிட்டங்களுக்கு நிதி சேர்க்க வேண்டுமா?

 

அரசு மது பான கடை
அரசு மது பான கடை

 

மதுவிலக்கு வேண்டும் என்று நாம் அரசிடம் கேட்கவில்லை. அது நடைமுறை சாத்தியமற்றது என்கின்ற புரிதல் நம்மிடம் உள்ளது. ஆனால் மது விற்பனையை ஊக்கப்படுத்தாத அரசு வேண்டும் என்று எதிர்பார்ப்பது காந்தி பிறந்த நாட்டில் பெருங்குற்றமா?

 

குடிக்கு அடிமையான தமிழகத்தை மீட்க நாம் அரசிடம் இரண்டே கோரிக்கைகள் வைக்கின்றோம்.

1.புதிய மதுக்கடைகளைத் தயவுசெய்து திறக்க வேண்டாம்.

2.மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் குறைத்து இதர வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்யுங்கள்.

குடியின் கட்டுப்பாட்டில் தமிழன் இருக்காமல், தமிழனின் கட்டுப்பாட்டில் குடி இருந்தால் நாட்டிற்கு, வீட்டிற்கு நல்லது. செய்வீர்களா?

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.