கும்மிப் பாட்டு

அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே
உன்னை அடி பணிந்தே நானே
அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே.

கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே வாரும் – சற்று
கண் திறந்து பாரும் – அந்த
கருணை மாரி கதை படிக்க கவிகள் அள்ளித் தாரும்

தேவாதி தேவர் போற்றும் சிவனுடைய பாலா – வள்ளி
தெய்வயானை யின் லோலா – இந்த
சிறியேனைக் கண் பாருமய்யா திருச்செந்தூர் வேலவா

காமனைக் கண்ணால் எரித்த கயிலையங்கிரி வாசா – அன்பு
கருணை உள்ளம் கொண்ட நேசா
மாரி காந்தாரி கும்மி பாட காத்தருளும் ஈசா

அழகு நல்ல தாமரையில் அமர்ந்த வித்வமணியே
கல்விக்கு ஆன அதிபதியே
எனக்கு அருள் புரிய வேணும் அம்மா கமல சரஸ்வதியே

மலையத்துவசன் மகளாய் வந்த
மதுரை மீனாட்சி தாயே – சற்று மணம் இறங்கி நீயே – உன்
மலரடியே நான் பணிந்தேன் மைந்தனைக் காப்பாயே

 

வாருங்கம்மா வாருங்கம்மா வந்து இங்கே கூடுங்கம்மா
வானவரும் தேவர்களும் வாழ்த்துரைக்க பாடுங்கம்மா
கூடுங்கம்மா கூடுங்கம்மா கூடி கும்மி அடியுங்கம்மா
கூடும் சபை தனிலே கூச்சமின்றிப் பாடுங்கம்மா

பாடுங்கம்மா பாடுங்கம்மா பவளமுத்து வாய் திறந்து
பண்புள்ள மாரித்தாயை பணிந்து கும்மி கொட்டுங்கம்மா
கொட்டுக்கம்மா கொட்டுங்கம்மா குனிந்து கும்மி கொட்டுங்கம்மா
குணமுள்ள மாரித்தாயை கும்பிட்டுக் கொட்டுங்கம்மா

தட்டுங்கம்மா தட்டுங்கம்மா தாளந் தவறாத படி
தன்மையுள்ள மாரித்தாயை தாள் பணிந்து தட்டுங்கம்மா
வட்டம் சுற்றி வாங்களம்மா வரிசை வளையாமலே
வாஞ்சையுள்ள மாரித்தாயை வணங்கி கும்மி கொட்டுங்கம்மா

சுற்றி நீங்க வாங்களம்மா சோர்வு கொள்ளாதபடி
சொகுசு உள்ள மாரித்தாயை சூழ்ந்து கும்மி கொட்டுங்கம்மா
தானானை என்பவருக்கு தலைபுரிவாள் மாரியம்மா
தகுந்ததொரு வரங்களையும் தான் கொடுப்பாள் எங்களம்மா

பாட்டுச் சொன்ன பேருக்கெல்லாம் பாக்கியம் தான் தருவாள்
பலகோடி துன்பங்களை பனிபோல நீக்கிடுவாள்
கும்மி சொன்ன பேர்களுக்கு குறைகள் எல்லாம் நீக்கிவிடுவாள்
குழந்தை குட்டி மக்களுக்கு குறைவில்லாமல் சுகம் தருவாள்

மாரியுடைய பேரைச் சொன்னால் மனக் கவலை நீங்கிவிடும்
மலை போல கஷ்டங்களும் மறுகணமே மாறிவிடும்
ஆத்தாளுடைய பேரைச் சொன்னால் அச்சங்களும் தீர்ந்துவிடும்
அனேககோடி துன்பங்களும் அரைக்கணமே மாறிவிடும்

ஈஸ்வரியாள் பேரைச் சொன்னால் இம்சைகளும் தீர்ந்துவிடும்
எந்த குறை இருந்தாலும் இக்கணமே மாறிவிடும்
ஆத்தாளைத் தான் வணங்கி அகிலமெல்லாம் கொண்டாட
மாரியைத் தான் வணங்கி மண்டலத்தோர் கொண்டாட

வருஷத்திற்கு ஒரு தடவை வையகத்தோர் கொண்டாட
அதுபோல நாமெல்லாம் ஆண்டுக்கு ஒரு தடவை
முத்தாலம்மன் தேவிக்குத்தான் திருவிழா எடுப்போமே
முத்தாலம்மன் திருவிழா முக்கியமான திருவிழா

கும்பிட வேணுமென்று கூட்டங்களும் தான் போட்டு
ஊர் வழக்கப்படி உறமுறையோர் செய்கைபடி
நாட்டு வழக்கப்படி நல்லோர்கள் செய்கைபடி
ஆத்தாளுக்கு திருவிழாதான் அகிலமெல்லாம் கொண்டாட
நாளும் கிழமைகளும் நல்ல நாளும் தான் பார்த்து
தேதி கிழமைகளும் தெளிவகாத் தான் பார்த்து

பஞ்சாங்கம் பார்த்தல்லவோ பக்குவமாய் நாள் குறித்து
காலண்டர்கள் பார்த்தல்லவோ திசைக்குத் திசை கொடியும் கட்டி
ஊரை மறைத்தல்லவோ உயரத்திலே கொடியும் கட்டி

மா பெரிய உற்சவமாம் மங்காத விசேஷமாம்
மகிமையுள்ள தேவிக்குத்தான் மாபெருந் திருவிழா
தீர்த்தத்தால் நீராட்டி தெய்வத்தைத்தான் வணங்கி

பொங்கல் வைத்து பூஜை பண்ணி பூமகளைத் தான் வணங்கி
ஊர் குடி மக்களுக்கு ஒரு குறையுமில்லாமல்
தெருவிலுள்ள மக்களுக்கு தீங்கு நேராதபடி

இருந்து காக்க வேண்டுமென்று இருகரத்தால் தான் வணங்கி
பாதுகாக்க வேணுமென்று பணிந்து மிக தான் வணங்கி
குதூகலமா கொண்டாடி கும்பிட்டுத்தான் வணங்கி

மங்களமாய் கொண்டாடி மகிழ்ச்சியுடன் தான் வணங்கி
மாரியுடைய பெருமையைத்தான் மங்கையர்கள் மனதில் எண்ணி
மகிமையுள்ள தேவிக்குத்தான் மகிழ்ந்து கும்மி அடிப்போம்

வீதிதோறும் பந்தலெல்லாம் விதவிதமாய் தான் போட்டு
வேடிக்கையாய் கமுகு வாழை ஈச்சமரம் நட்டி
மாங்குலையும் வேப்பிலையும் மரகதம் போல் கட்டி
மண்டலத்தோர் கொண்டாடும் மகமாயி திருவிழா

மாசிமாதம் ஞாயிற்றுக்கிழமை மூர்த்தக் காலோ நட்டி
நம்ம முச்சந்தி கொடி கட்டி – தாயி
சக்தி தேவி வாசலிலே மேளதாளம் கொட்டி

வாசலெல்லாம் பந்தலிட்டு வண்ணக் கோலம் தீட்டி
அங்கே வாழை மரம் நாட்டி – நமக்கு
வரம் கொடுப்பா சக்தி தேவி முத்துமாரி தானே

கரும்பாலே கால் நிறுத்தி கதலி வாழை கட்டி – அங்கே
காந்தலைட்டும் மாட்டி – லைட்டு
காதவழி மின்துனுதம்மா கயிலை மலை எட்டி

அம்மன் கோவில் முன்னிலையில் அம்சமுள்ள பந்தல் – அவள்
அழகு மெத்த சிந்த – அந்த
அலங்கார பந்தலிலே அடியாள் பாட்டு படிக்க

சக்திகோயில் முன்னிலையில் சவுக்கு மரப் பந்தல் – முத்து
சரஞ்சரமாய் சிந்த – அந்த
சன்னதியின் பந்தலிலே பெண்கள் கும்மி அடிக்க
மாரி அவள் பிறந்த இடம் மலையாள தேசம் – ஒளி
மங்காத பிரகாசம் – வாடை மணக்குதவ
கொண்டையிலே மகிழம் பூவாசம்
காளி அவள் பிறந்த இடம் கலிங்கநாடு தேசம்
அழகு கருணை பிரகாசம் வாடை கமழுது
அவள் கொண்டையிலே காட்டு மல்லி வாசம்

ஆதிசக்தி அமர்ந்திருக்கும் ஆதி கைலாசம்
மிக அழகு பிரகாசம் வாடை அடிக்குது
அவள் கொண்டையிலே அடுக்கு மல்லி வாசம்

தேவி சக்தி வீற்றிருக்கும் தெய்வ கைலாசம் – ஜெக
ஜோதி பிரகாசம் – வாடை தெரியுது அவள்
கொண்டையிலே செண்பகப்பூ வாசம்

நந்தவனம் கண்திறந்து நல்ல மலர் எடுத்து – வாழை
நாருணாலே தொடுத்து – அதை
நம்முடைய மாரிக்குத்தான் நன்றாகவே படைத்து

பூங்காவனம் கண்திறந்து பூத்த மலர் எடுத்து – மிக
புதுமையாகத் தொடுத்து – நம்ம
பொன்னு முத்து மாரிக்குத் தான் பூஜைகளும் படைத்து

செடிக்குச் செடி பூவுகளும் சீராகவே எடுத்து – அதை
சிங்காரமாய் தொடுத்து – நம்ம செல்ல முத்து
மாரிக்குத் தான் சிறப்புடனே படைத்து

கொடிக்குக் கொடி பூவுகளும் கோளராக எடுத்து – அதை
கோர்த்து நல்லா தொடுத்து – நம்ம கோவில் கொண்ட
மாரிக்குத் தான் கும்பிடுவோம் படைத்து

ஊரணியாம் தாமரையாம் உயர்ந்த கொடி மேலே
மலர் உதிரும் அங்கே கீழே – எங்கள்
உத்தமிக்குக் தொடுத்திடுவோம் ஊசி முனையாலே

கங்கையாம் தாமரையாம் காட்டுக் கொடிமேலே
மலர் கனிந்து உதிரும் கீழே
மாரி கரகத்திற்கு தொடுத்திடுவோம் கையின் விரலாலே

பொய்கையாம் தாமரையாம் போகும்
கொடி மேலே – மலர் பூத்திருக்கும் கீழே
மிகப் பொருத்தமுடனே தொடுத்திடுவோம் மாரிக்கு பூமாலை

வைகையாம் தாமரையாம் வண்ணக் கொடி மேலே – மலர்
வளர்ந்து உதிரும் கீழே – மாரி
வடிவழகை பார்க்க தொடுப்போம் வகை வகையாய் மாலை

பொய்கையிலே தலை முழுகி பூங்காவனம் அடுத்து
நல்ல பூமலர்கள் எடுத்து – நல்ல பூ வாழை நாருறுச்சி
பூவை கையால் கோர்த்து

வைகையிலே தலை முழுகிமலர் மலர் வனத்தை அடுத்து
மல்லி வாசமலர் எடுத்து – நம்ம வாழை
மரம் நாருறுச்சி வண்ண மலர் கோர்த்து
குளத்திலே தலை முழுகி குறிஞ்சி வனம் அடுத்து
நல்ல கொட மல்லிகை எடுத்து நம்ம குளிர்ந்த வாழை
நாருறுச்சி குயில் மொழிகாள் கோர்த்து

அந்தியிலே பூத்திருக்கும் அழகு ரோஜா மல்லி
நம்ம ஆளுக்கொன்னு கிள்ளி – ஆத்தாளுக்கு
மாலை கட்டி போவோமே சொல்லி

மாலையிலே பூத்திருக்கும் மலராத மல்லி
அதை மக்களெல்லாம் கிள்ளி மாலை கட்டி
போடுங்கம்மா முத்துமாரி பேரைச் சொல்லி

கோடையிலே பூத்திருக்கும் குண ரோஜா மல்லி
நம்ம கோர்த்து வைப்போம் சொல்லி – மாரி
கொண்டையிலே சூடியிருப்பா குளிர்ந்த மலர் அல்லி

வெட்டி வேரு கதம்ப ரோஜா வீசும் மணம் கூடி
மாரி வீதியில் விளையாடி அவள் வீற்றிருப்பாள்
கோவிலிலே வெள்ளை ரோஜா சூடி

பார்த்தாலும் சிறு நந்தவனம் தாயே பூத்தாலும் கூடை மல்லிகை பூ
கொண்டை பெருத்தவள் முத்து மாரிக்கு
கொண்டு வந்தேன் கூடை மல்லிகைப் பூ

கத்தரி பூத்ததைப் பாருங்கம்மா
கத்தரி கலந்து பூத்ததைப் பாருங்கம்மா
கத்திரி கீழே முத்து மாரிக்கு காசு விளையாட்டைப் பாருங்கம்மா

முல்லை பூத்ததைப் பாருங்கம்மா
முல்லை முகந்து பூத்ததைப் பாருங்கம்மா
முல்லைக்கும் கீழே முத்து மாரிக்கு
முத்து விளையாட்டை பாருங்கம்மா

சுரை படர்ந்ததைப் பாருங்கம்மா
சுரை சுற்றிப் படர்ந்ததைப் பாருங்கம்மா
சுரைக்கும் கீழே முத்துமாரிக்கு சூது விளையாட்டைப் பாருங்கம்மா

அம்மா வாரா அம்மா வாரா கம்மா கரையோரம் – அது
அர்த்த‌ ஜாம நேரம் – அவள்
அழகு பாதம் சிலம்பு ஓசை கேட்குது வெகு தூரம்

ஆத்தா வாரா ஆத்தா வாரா ஆத்தங்கரை மேலே – அது
ஆள் ஓடும் வேளை – அவள் அடையாளமும் காட்டுதல்லோ
அழகு மஞ்சள் சேலை

தாயி வாரா தாயி வாரா தண்ணி கரையை அடுத்து
தான் தவசு இருந்து முடித்து மேள தாளத்தோடு
கூட்டி வாங்க தாங்கி அவளை அழைத்து

கோதை வாரா கோதை வாரா குளத்தங்கரையை அடுத்து
தான் கொலு இருந்து முடித்து கொட்டு மேளத்தோடு
கூட்டி வாங்க கும்பிட்டு அவளை அழைத்து

திருமாலோட தங்கச்சியாம் தேவி மகமாயி
அவள் தெப்பக்குளம் போயி – அம்மா
சிக்கெனவே நீராட சென்றிடுவாள் – தாயி

குறிப்பாக தலை முழுகி கோவில் தங்கி இருப்பா – நமக்கு குறிச்ச
வரம் கொடுப்பா – மாரி குணசாலி
மனமிரங்கி கொண்டனைத்துக் காப்பா

நெய் ஊத்தி மாபிணைஞ்சி நெட்டு நெட்டாய் வைப்போம்
நாங்கள் நினைத்த வரம் கேட்போம் மாரி நீராடி
வெளியில் வரும் நேரத்தையும் பார்ப்போம்.

தண்ணீர் ஊத்தி மாபிணைஞ்சி தட்டு தட்டாய் வைப்போம்
நாம் தகுந்த வரம் கேட்போம் – மாரி தலை உலர்த்தி
வெளியே வரும் தருணத்தையும் பார்ப்போம்
அழகழகாய் விளக்கேற்றி அடுக்கடுக்கா வைப்போம்
நாம் அனேக வரம் கேட்போம் – மாரி ஆலயம் திறந்து
வெளியில் வரும் அம்சத்தையும் பார்ப்போம்

வண்ண வண்ண விளக்கேற்றி வரிசையாக வைப்போம் – நாம்
வரங்கள் மெத்த கேட்போம் – மாரி
வாசல் திறந்து வெளியில் வரும் வடிவழகைப் பார்ப்போம்

கோவிலுக்குள்ளே இருப்பாளே
குழந்தை மாரி அம்மா – கண் கூசும்
அவளைப் பார்த்தால் – மனக்குறை
தீர்க்க வந்திடுவாள் கூவி நாம் அழைத்தால்

ஆலயத்துக்குள்ளே இருப்பாள் அழகு
மாரி அம்மாள் – மனம் அஞ்சும்
அவளைப் பார்த்தால் – மிக அருள்
புரிய வந்திடுவாள் அன்பாய் நாம் அழைத்தால்

சிங்கத்து மேல் இருப்பாள் செல்ல மாரி அம்மாள்
மனம் சிந்தை கலங்கும் பார்த்தால் வருந்தும் சேதி
தெரிந்து வந்திடுவாள் சிறப்புடனே அழைத்தால்

வாகனத்து மேல் இருப்பாள் வாஞ்சை மாரி அம்மாள்
மின்னும் வடிவழகைப் பார்த்தால் – முகம் வாட்டம்
கண்டு வந்திடுவாள் வணங்கி நாம் அழைத்தால்

கொட்டுச் சத்தம் குலவை கேட்டு கோவில் விட்டு வருவாள்
நம்ம குறைகளையும் தெரிவாள் ஏதும் குழந்தை இல்லா
பேர்களுக்கு குழந்தை வரம் தருவாள்

மணியோசை சத்தம் கேட்டு மனையை தேடி வருவாள்
நம்ம மனக் குறையைத் தெரிவாள் மணமாகாத
பெண்களுக்கு மாலை எடுத்து வருவாள்
சங்கு சத்தம் ஓசை கேட்டு சன்னதி விட்டு வருவாள்
நம்ம சங்கடங்களைத் தெரிவாள் அவளை
சாஷ்டாங்கம் செய்தவருக்கு சகல சுகமும் தருவாள்

சேகண்டி சத்தம் கேட்டு சிலையை விட்டு வருவாள்
நம்ம சேதிகளைத் தெரிவாள்
அவளை சேவித்த பேர்களுக்கு சேமம் மெத்த தருவா

வேப்பிலையும் கை பிடித்து வீதி வழி வருவாள்
அவள் விஷயத்தையும் புரிவாள் – அவளை
விரும்பின பேர்களுக்கு வேண்டிய வரம் தருவாள்

வாடாத மலர் எடுத்து வாசல் வழி வருவாள்
அவள் வாதனையை புரிவாள் – அவளை
வணங்கி நின்ற பேர்களுக்கு வரங்கள் மெத்த தருவா

மரக்காலலே முத்தளந்து மண்டலம் சுத்தி வருவா
தன் மனம் போல் அதை எறிவா – அவள்
மகிமை தெரிந்து பணிந்தவர்க்கு மாத்தி சுகமும் தருவாள்

நாழியிலே முத்தளந்து நாடு சுத்தி வருவாய
திசை நாலு புறமும் எறிவா – அவளை
நம்பின பேர்களுக்கு நல்ல சுகமும் தருவாள்

படியினாலே முத்தளந்து பவனி சுத்தி வருவா – கண்ட
பக்கமெல்லாம் எறிவா – அவள் பாதம் பணிந்து
வணங்கினோர்க்கு பார்த்து சுகமும் தருவாள்

உழக்காலே முத்தளந்து ஊரு சுத்தி வருவா – நம்
உடம்பில் அதை எறிவா – மனம் உருகி அவளை
பணிந்தவர்க்கு உடனே சுகமும் தருவா

மஞ்சள் நல்ல துயிலுடுத்தி மல்லிகைப் பூச்சூடி
நம்ம மனைகள் தோறும் நாடி இங்கே
மாலை நேரம் வருவாளம்மா மக்களையும் தேடி

பஞ்ச வர்ணப்பட்டுடுத்தி பன்னீரும் பூச்சூடி
அவள் பாசம் கொண்டு தேடி நம்மை
பாதுகாக்க வருவாளம்மா பச்சம் வைத்து ஒட்டி
சிரித்தாலே முத்துதிரும் சிங்கப்பல்லுக்காரி
சிவகாசி பத்திரகாளி – நம்ம தெருப்பாக்க
வருவாளம்மா சிங்க ரதம் ஏறி
குறிச்சவாய் முத்துதிரும் குணமுடைய மாரி
அவள் குறிஞ்சிப் பூக்காரி – இங்கே
குலவைச் சத்தம் கேட்கும்மா குடவரையோ மீறி

மணி அசைய தேர் குலுங்க மண்டபத்தை விட்டு
அவள் மணிக்கணக்குப் போட்டு
மஞ்சனையோ மணக்கும் முத்து மாரி வரும் ரூட்டு

தேரேறி மணியசைய தெருப்பார்க்க வருவா
நமக்குத் தரிசனமும் தருவா நம்ம
தேனீரு காணிக்கையைச் சிறப்புடனே பெறுவா

தங்க ரதம் ஏறிமாரி தனி வழியே வருவா நமக்கு
தகுந்த வரம் தருவா – மாரி
தடம்புரள சடை குலுங்க தாயாரிங்கே வருவா

சக்திதேவி வடிவமாகி வீற்றிருக்கும் தாயே – உனக்கு
கீர்த்திகள் உண்டாகி – மாரி வடக்கு
முகமாயிருக்கா குழந்தை முகமாயி

சிங்கமுக ரதமேறி சீமை சுற்றி வருவாள் நமக்கு
சிறந்த வரம் தருவாள் – மாரி
சிங்கார நடை நடந்து தெரிசனமும் தருவா

ஆத்துக்குள்ளே குச்சல் கட்டி அங்கிருப்பாள் மாரி
அவள் அடங்காக் கோபக்காரி
மிக குணத்திலேயும் சிறந்தவளாம் குங்குமப் பொட்டுக்காரி

சாலையோரம் குச்சல் கட்டி சாஞ்சிருப்பாள் மாரி
அவள் சாந்த ரூபக்காரி
சகல சாஸ்திரமும் தெரிஞ்சவளாம் சந்தப் பூச்சுக்காரி

வேலியோரம் குச்சல் கட்டி வீற்றிருப்பாள் மாரி
அவள் விஸ்வரூபக்காரி – சகல
வேதங்களும் தெரிஞ்சவளாம் விபூதி பூச்சுக்காரி

தெப்பக்குளம் காத்திருப்பாள் தேவி மகமாயி
இந்த தேசம் புகழ் தாயி அவள் திருநீறு
அணிந்தவர்க்கு தீர்ந்து போகும் நோய்

மந்தையிலே காத்திருப்பாள் மாரி மகமாயி
அவள் மணி மந்திரத் தாயி – அவள்
மந்திரத்தைச் சொன்னால் தீரும் மருந்தில்லாமல் நோய்

மாமாங்க பொய்கையிலே மஞ்சள் நீராடி
மாரி மல்லிகைப் பூச்சூடி வாரா
மடப்புரத்தை விட்டு நம்ம மாளிகையைத் தேடி

குற்றால அருவியிலே குளித்து நீராடி
மாரி குடமல்லிகை சூடி வாரா
கொல்லங்குடி விட்டு நம்ம குடவரேயே தேடி

தேக்கமலை அருவியிலே தீர்த்தங்களும் ஆடி
மாரி திண்டாரமும் சூடி – வாரா
தெப்பக்குளத்தை விட்டு நம்ம தெருவாசலைத் தேடி

இலை குலுங்க பொய்கையியே இருந்து நீராடி
மாரி இருவாஞ்சியும் சூடி – வாரா
இருக்கண்குடியை விட்டு நம்ம இல்லத்தையும் தேடி

சமயபுரத்து மாரி வாரா – சப்பரத்து மேலே
பூரண சந்திரன் போலே அவ சரீரத்திலே
மின்னுது பார் ஜரிக பட்டுச் சேலை

அருப்புக்கோட்டை மாரி வாரா அன்ன ரதம் மேலே
நல்ல அழகு சந்திரன் போலே – அவ அங்கத்திலே
மின்னுது பார் ஆரணி பட்டுச் சேலை

தஞ்சாவூரு மாரி வாரா தங்கத் தேர் மேலே
நல்ல ஜெக சூரியன் போலே – அவ திரேகத்திலே
மின்னுது பார் திராட்சை பட்டுச் சேலை

ஊத்துக் காட்டு மாரி வாரா பூப்பல்லக்கு மேலே
நல்ல உதய சூரியன் போலே அவ உடம்பினிலே
மின்னுது பார் ஊதாப்பட்டுச் சேலை

மஞ்சள் பூசி அம்மா மஞ்ச சேலையுடுத்தி
தாயி மனதைத் திடப்படுத்தி – நம்ம
ஊர்மக்களையும் காத்திருப்பா வீதி வலம் சுற்றி

கைவளையல் மின்னுதம்மா கருகணமிக்காரி
முத்து கருணையுள்ள மாரி – நம்மளை
காத்து இங்கே ரட்சிப்பாளே கருவளையல் காரி

நெய்ப்பவளம் ஜோதி மின்ன நேருவுச்சி எடுத்து
கழுத்தில் நெக்கலசும் தொடுத்து – அம்மா
நெல்லிமணிக் கோவையும் தாழ் வடங்கள் தரித்து

அழகு நல்ல மாரியம்மாள் அன்னக் கொப்பு மாட்டி
முத்து அழகு நகை பூட்டி – அம்மா
ஆபரணம் ஒட்டியாணம் அணிவாளே சீமாட்டி

கட்டழகு மாரி காதில் கம்மலது மின்ன
தாயி கணையாழியோ துன்ன
அம்மா கால் கொலுசு பாதரசம் கலீர் கலீரென்ன
ஆபரணம் ஜொலிக்குதம்மா அன்ன நடைக்காரி தாயி
ஆலயத்தை கோரி அநேக ஜனம் வந்திடும்
அம்மா அழகு பார்க்கத்தானே

ஓராயிரம் பொன் பெறுமாம் உயர்ந்த முத்து புல்லாக்கு
மாரிக்கு உலகமே செல்வாக்கு மாரி
ஊரு சுற்றி வருவாள் ஏறி ரெத்தின பல்லாக்கு

மூவாயிரம் பொன் பெறுமாம் மூக்குத்தி கல்சிவப்பு
மாரி முகமும் ஒரு அமைப்பு – அவள்
முன் மகுட கிரீடம் வந்து மூன்று லட்சம் மதிப்பு

ஐயாயிரம் பொன் பெறுமாம் அசல் வைரமாலை
மாரி அணிந்திருப்பாள் மேலே – இந்த
அகிலத்திலே யாருமில்லை – அவள் அழகு போல

ஏழாயிரம பொன் பெறுமாம் இருபாதத்திலும் தண்டை
அவளுக்கு இடதுபுறம் கொண்டை மாரி இடுப்பில்
கட்டி இருக்கும் சேலை இருகரையும் கெண்டை

அலங்கார மேடையிலே அம்பு விளையாட – அங்கே
அனேக ஜனம் கூட – மாரி
அட்டத்துத் தோளில் ரெண்டு அன்னக்கிளி பாட

பளிங்குக்கல் மேடையிலே பந்து விளையாட
அங்கே பார்த்த ஜனம் கூடி – மாரி
பக்கத்துத் தோளில் ரெண்டு பட்சி கவி பாட

சிங்கார மேடையிலே செண்டு விளையாட
அங்கே சேர்ந்த ஜனம் கூட – மாரி
தென்புறத்து தோளில் ரெண்டு சிட்டு கவிபாட

ஒய்யார மேடையிலே ஊஞ்சல் விளையாட
அங்கே ஊர் ஜனங்கள் கூடி – மாரி
உத்தமியாள் தோளில் ரெண்டு ஊர்க்குருவி பாட

மாரியம்மன் கோவிலுக்கு மாதம் அஞ்சு வெள்ளி – அங்கே
மயில்கள் ஆடும் துள்ளி – வாரம்
மறவாமல் நடப்பவர்க்கு செய்வாள் உபகாரம்

மாங்கனியோ பழுத்திருக்கும் மரக்கிளைகள் மேவி
அங்கே மயிலினங்கள் உலாவி – அந்த
மாங்கனியைப் புசிக்கக் கிளி மந்திகளும் தாவி

தேங்கனியோ பழுத்திருக்கும் தென்னஞ்சோலை சுத்தி
மாரி தெப்பக்குளம் மத்தி அந்த
தேன் கனியின் ரசம் குடிக்க சிட்டினங்கள் தத்தி

அடர்ந்த மல்லி படர்ந்திருக்கும் அழகு ரோஜா பூத்து மாரி
ஆத்தாள் கோவில் பார்த்து அங்கே
அழகு நடம் புரியுதம்மா அன்னக்குயில் வாத்து

மாரியம்மன் கோயிலிலே மர‌த்தாலே தூணு – அதில்
மகிமை மெத்த தோணும் – அந்த
மகிமையத் தான் காண்பதற்கு ஆயிரம் கண் வேணும்

காளியம்மன் கோயிலிலே கரும்பினாலே தூணு – அதில்
கணுக்கணுவாய் தோணும் அதை
கட்டி அணைவதென்றால் கரங்கள் பல வேணும்

அன்ன ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருப்போம் நாம்
அக்னி சட்டி எடுப்போம் – கிடா
ஆடுவெட்டி பொங்கலிட்டு அம்மாளுக்கு படைப்போம்

தேனும் தினைமாவும் தின்று தீர்த்தங்களும் குடிப்போம் – நாம்
தீச்சட்டியும் எடுப்போம் – கூவும்
சேவல் அறுத்து பொங்கலிட்டு தேவிக்கு அமுது படைப்போம்
பகல் இரவா ஏதுமின்றி – பானகத்தை குடிப்போம்
புதுப்பாயிலே தான் படுப்போம் – மிக
பக்தியுடன் விரதமிருந்து பால் குடமும் எடுப்போம்

தாயி உடைய பேரைச் சொல்லி தனி விரம் இருப்போம்
முடி தாடிகளை வளர்ப்போம் – அவள்
தலை வாசல் சன்னிதியில் தலைமொட்டையும் எடுப்போம்

வாழையடி வாழையாக வணங்கிடுவோம் தாயே – மிக
வாஞ்சையுடன் நீயே – என்
வாய் திறந்து எங்களுக்கு வரங்கள் தருவாயே

குழந்தை மக்கள் குடும்பம் எல்லாம் கொண்டாடுவோம் தாயே
மிக குணமுடனே நீயே எங்களை கொண்டணைத்து அருள்
புரிந்து குறைகளை தீர்ப்பாயே

பிள்ளை பிள்ளை தலைமுறைக்கு போற்றிடுவோம் தாயே – மிக
பொறுமையுடன் நீயே – ஏதும்
புரியாமல் பிழை செய்திருந்தால் பொறுத்துக் கொள்வாயே

மக்கள் மக்கள் தலைமுறைக்கும் மறக்க மாட்டோம் தாயே – மிக
மனம் இறங்கி நீயே – என் மனம் நோக நடந்திருந்தால்
மன்னித்துக் கொள்வாயே.

3 Replies to “கும்மிப் பாட்டு”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.