கேக் செய்வது எப்படி?

கேக் என்பது எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் உணவு ஆகும். கிருஸ்துமஸ் பண்டிகை அன்று இதனை தயார் செய்து அசத்துங்கள். ஏளிதான வகையில் சுவையான கேக் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – கால் படி (2 பங்கு)

தேங்காய் எண்ணெய் – ஆழாக்கு (1 பங்கு)

மண்டை வெல்லம் – தூளாக்கியது ஆழாக்கு (1 பங்கு)

தயிர் – ½ ஆழாக்கு (½ பங்கு)

பேக்கிங் சோடா – ½ டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – ½ ஸ்பூன்

பால் – ஆழாக்கு (1 பங்கு)

முந்திரி பருப்பு – 5 எண்ணம் (முழுமையானது)

பாதாம் பருப்பு – 5 எண்ணம்

செய்முறை

மண்டை வெல்லத்தை நன்கு தூளாக்கிக் கொள்ளவும்.

தூளாக்கிய மண்டை வெல்லத்தை மட்டும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 

மிக்ஸியில் அரைத்த மண்டை வெல்லம்
மிக்ஸியில் அரைத்த மண்டை வெல்லம்

 

கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை கலந்து கொண்டு சலித்துக் கொள்ளவும்.

முந்திரி, பாதாம் பருப்பை நேராக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்.

 

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

 

அதில் மிக்ஸியில் அரைத்த மண்டை வெல்லத்தைச் சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் தயிர் சேர்க்கவும்.

 

தயிர், மண்டை வெல்லம் சேர்த்ததும்
தயிர், மண்டை வெல்லம் சேர்த்ததும்

 

மூன்றையும் ஒருசேர நன்கு கலக்கவும்.

மண்டை வெல்லம் சிறுகட்டியாக சேர்த்தால் கரண்டியை வைத்து நன்கு நசுக்கி ஒருசேர்ந்தால்போல் செய்யவும்.

 

எண்ணெய், தயிர், மண்டை வெல்லம் சேர்த்து கலந்ததும்
எண்ணெய், தயிர், மண்டை வெல்லம் சேர்த்து கலந்ததும்

 

சலித்த கோதுமை மாவு கலவையை மண்டை வெல்ல எண்ணெய் கரைசலுடன் சேர்த்து கட்டி விழாமல் ஒருசேரக் கிளறவும்.

 

கலவையுடன் கோதுமை மாவுக் கலவையைச் சேர்த்ததும்
கலவையுடன் கோதுமை மாவுக் கலவையைச் சேர்த்ததும்

 

 

கலவையுடன் கோதுமை மாவுக் கலவையை ஒருசேரக் கலந்ததும்
கலவையுடன் கோதுமை மாவுக் கலவையை ஒருசேரக் கலந்ததும்

 

பின்னர் பாலினை கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து மாவினை ஒருசேரக் கிளறவும்.

 

பாலினைச் சேர்த்ததும்
பாலினைச் சேர்த்ததும்

 

சிறிதளவு கோதுமை மாவினை எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய பாதாம், முந்திரிப் பருப்பில் பாதியைச் சேர்த்து பிரட்டி வெளியே எடுத்து, தயார் செய்துள்ள கலவையில் கொட்டி மெதுவாகக் கிளறவும்.

 

 

முந்திரி, பாதாம் பருப்புகளைச் சேர்த்ததும்
கோதுமை மாவில் தோய்க்கப்பட்ட முந்திரி, பாதாம் பருப்புகளைச் சேர்த்ததும்

 

ஒரு அலுமினிய பாத்திரத்தில் அடிப்புறம் மற்றும் ஓரங்களில் எண்ணெய் தடவி அதில் கோதுமை மாவினை சிறிதளவு சேர்த்து அடிப்புறம் மற்றும் ஓரங்கள் முழுவதும் படும்படி செய்யவும்.

 

எண்ணெய் தடவிய பாத்திரம்
எண்ணெய் தடவிய பாத்திரம்

 

 

எண்ணெயின் மேல் கோதுமை மாவு தடவிய பாத்திரம்
எண்ணெயின் மேல் கோதுமை மாவு தடவிய பாத்திரம்

 

அதில் கோதுமை மாவுக் கலவையை ஊற்றவும்.

அதன் மேல், நறுக்கிய பாதாம், முந்திரிப் பருப்பின் மீதி பாதியை மேலே தூவவும்.

 

கோதுமை மாவுக் கலவையை ஊற்றும் போது
கோதுமை மாவுக் கலவையை ஊற்றும் போது

 

 

முந்திரி, பாதாம் பருப்பு கலவை தூவியதும்
முந்திரி, பாதாம் பருப்பு கலவை தூவியதும்

 

குக்கரை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் நன்கு சூடேற்றவும்.

பின்னர் அதனுள் பிரிமனை (தண்ணீர் பானைக்கு அடியில் வைக்கும் வட்டவடிவ வளையம்) நடுவில் போட்டு, அதனுள் மாவு கலவை உள்ள அலுமினிய பாத்திரத்தை வைத்து குக்கரை மூடிவிட்டு, (விசில் போடாமல்) அடுப்பினை மிதமான தீயில் அரை மணி நேரம் வைக்கவும்.

 

பிரிமனையை குக்கரில் வைத்ததும்
பிரிமனையை குக்கரில் வைத்ததும்

 

குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

 

அரை மணி நேரத்திற்குப் பிறகு குக்கரைத் திறந்து, நடுவில் குச்சியை வைத்து குத்திப் பார்த்தால், குச்சியில் ஒட்டாமல் வந்தால் அடுப்பிலிருந்து இறக்கவும். (குச்சியில் ஒட்டிக்கொண்டு வந்தால் மீண்டும் குக்கரை மூடி வேகவிடவும்.)

கத்தியைக் கொண்டு ஓரங்களைச் சுற்றி எடுக்கவும்.

கேக்கை வேறு தட்டிற்கு மாற்றி ஆறியதும் விரும்பிய வடிவத்திற்கு வில்லைகள் போடவும்.

சுவையான கேக் தயார்.

 

சுவையான கேக்
சுவையான கேக்

 

வில்லையாக்கப் பட்ட கேக்
வில்லையாக்கப் பட்ட கேக்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் கிஸ்மஸ், பிஸ்தா சேர்த்து கேக் தயார் செய்யலாம்.

விரும்பமுள்ளவர்கள் வெண்ணிலா எசன்ஸ், ரோஸ் எசன்ஸ் சேர்த்து கேக் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.