கொத்துமல்லி – மருத்துவ பயன்கள்.

கொத்துமல்லி கார்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பசித்தூண்டியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கொத்துமல்லி இலை, கீரையாகவும் பயன்படுகின்றது. இதனால் பித்தக் காய்ச்சலும் பித்த மயக்கமும் நீங்கும்.கொத்துமல்லி உடலுக்கு உறுதியை ஏற்படுத்தும். ஆண்மையைப் பெருக்கவும் இது உதவுகின்றது. மேலும், தொடர்ந்து கொத்துமல்லிக் கீரையை உண்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் கொத்துமல்லி மண்டைச்சூடைக் குறைப்பதுடன், ஆழ்ந்த தூக்கமும் உண்டாக்கும். கொத்தமல்லி இலையைத் துவையல் தயாரித்தும் சாப்பிடலாம்.

கொத்துமல்லி விதை வாசனைப் பொருளாகவும் பயன்படும். கொத்துமல்லி                 விதைஎண்ணெய் வயிற்றுப் பொருமல், செரியாமை, கழிச்சல் இவைகளுக்குப் பயன்படுகின்றது. மேலும், வாசனைத் தைலங்களிலும் சேர்க்கப்படுகின்றது.

கொத்துமல்லி 20 செ.மீ. வரை வளரும் சிறுசெடி. இலைகள், மூவிலை அமைப்பில் மடலானவை. மடல்கள், அகன்ற முட்டை வடிவமானவை.  பூக்கள், சிறியவை, வெண்மையானவை, தொகுப்பானவை. கொத்துமல்லி காய்கள் கோள வடிவமானவை, வரிகளுடன் உள்ள‌வை. முதிர்ந்து, 2 அரை வட்டமான பகுதிகளாக உடைகின்றன.

கொத்துமல்லி இந்தியா முழுவதும் பயிராகின்றது. பயிர் நிலங்களிலிருந்து எழும்பும் கொத்துமல்லி மணத்தை வெகு தொலைவிலிருந்தும் உணர முடியும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

பச்சையான கொத்துமல்லி தாவரம் காய்கறி அங்காடிகளிலும், காய்ந்த கொத்துமல்லி விதைகள் மளிகைக் கடை, நாட்டுமருந்துக் கடைகளிலும் கிடைக்கும். காய்ந்த விதைகளுக்கு, தனியா, உருள் அரிசி போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு.

பல்வலி, ஈறுவீக்கம், வாய்துர்நாற்றம் குணமாக கொத்துமல்லி இலைகளை வாயில் இட்டு மெல்ல வேண்டும். வாய் துர்நாற்றம் சரியாக கொத்துமல்லி விதைகளை வாயிலிட்டும் மெல்லலாம். அல்லது கொத்துமல்லி விதைக் குடிநீர் செய்து வாய் கொப்பளித்தும் வரலாம்.

கொத்துமல்லி இலைகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

1தேக்கரண்டி அளவு கொத்துமல்லி விதைகளை சிறிதளவு காடியில் அரைத்து உள்ளுக்கு கொடுக்க போதை நீங்கும்.

2 தேக்கரண்டி கொத்துமல்லி விதைகளை நன்கு நசுக்கி ½ லிட்டர் நீரில் விட்டு 200 மிலியாக காய்ச்சி வடிகட்டி 1 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். காலை, மாலை இரு வேளைகள், 3 நாட்கள் சாப்பிட இரத்தக் கழிச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி குணமாகும்.

அம்மை நோயின் போது கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி விதைகளைக் கழுவி ½ லிட்டர் நீரில் போட்டு 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அந்த நீரில் கண்களைக் கழுவ வேண்டும் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 முறைகள் இவ்வாறு செய்யலாம்.

கொத்துமல்லி விதை ¼ கிலோ, சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, சதகுப்பை ஆகியவை ஒவ்வொன்றும் 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இளவறுப்பாக வறுத்து பொடியாக்கி சலித்து ½ கிலோ வெள்ளை கற்கண்டுப் பொடி சேர்த்து கலந்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீருடன் சாப்பிட்டு வர விக்கல், நாவறட்சி, நெஞ்செரிச்சல் தீரும்.

Comments are closed.