கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?

கொள்ளு மிளகு பொடி சுவையான பொடி வகை ஆகும். இதனை சுடுசாதத்தில் நெய்யுடன் சேர்த்து உண்ண சுவை மிகும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் இதனை தொட்டுக் கொள்ளலாம்.

கொள்ளு உடலுக்கு வலிமையைத் தருவதுடன் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலினை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கொள்ளினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம் ஆகம்.

சிறிய கடைகளில் கிடைக்கும் கொள்ளில் கல், தூசி ஆகியவை இருக்கும். ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் கல் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட கொள்ளு கிடைக்கிறது. சுத்தம் செய்யப்பட்ட கொள்ளினை வாங்குவது நமது வேலையை எளிதாக்கும்.

கொள்ளினைப் பயன்படுத்தி இட்லி, மசியல், சூப் ஆகியவைகளைச் செய்யும் முறை பற்றி இத்தளத்தில் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.

இனி சுவையான கொள்ளு மிளகு பொடி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு – 100 கிராம்

மிளகு – 1 டேபிள் ஸ்பூன் (தோராயமாக 10 மில்லி கிராம்)

வெள்ளைப் பூண்டு – 10 பற்கள் (சிறியது)

மிளகாய் வற்றல் – 5 எண்ணம்

பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

செய்முறை

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

கட்டிப் பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

அதனை இளம்சூடாக இருக்கும் போது தட்டி நொறுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும்.

பெருங்காயக் கட்டியை வறுக்கும் போது
பெருங்காயக் கட்டியை வறுக்கும் போது
பொடியாகத் தட்டியதும்
பொடியாகத் தட்டியதும்

கொள்ளினை வெறும் வாணலியில் சேர்த்து வறுக்கவும்.

கொள்ளினை வறுக்கும் போது
கொள்ளினை வறுக்கும் போது

கொள்ளு பாதி வறுபட்டதும் காம்பு நீக்கிய மிளகாய் வற்றலை கொள்ளுடன் சேர்த்து வறுக்கவும்.

மிளகாய் வற்றலைச் சேர்த்து வறுக்கும் போது
மிளகாய் வற்றலைச் சேர்த்து வறுக்கும் போது

கொள்ளு சிவந்ததும் இறக்கி கலவையை நன்கு ஆற விடவும்.

கொள்ளினை வறுக்கும் போது மிதமான தீயில் வைத்து ஒருசேரக் கிளறவும். இல்லை எனில் ஒருபக்கம் கருகியும், ஒருபக்கம் வேகாது இருந்து விடும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்காமல் வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆற விடவும்.

பூண்டினை வறுக்கும் போது
பூண்டினை வறுக்கும் போது

மிளகினை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுத்து கலவையில் கொட்டி ஆற விடவும்.

மிளகினை வறுக்கும் போது
மிளகினை வறுக்கும் போது

கறிவேப்பிலையை வெறும் வாணலியில் நன்கு சுருள வறுத்து ஆறவிடவும்.

கறிவேப்பிலையை வறுக்கும் போது
கறிவேப்பிலையை வறுக்கும் போது

வறுத்தவற்றை ஒருதட்டில் கொட்டி நன்கு ஆற விடவும்.

கலவை ஆறும் போது
கலவை ஆறும் போது

மிக்ஸியில் வறுத்த கொள்ளு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, மிளகு, வெள்ளைப் பூண்டு, பெருங்காயம் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

சுவையான கொள்ளு மிளகு பொடி தயார்.

அரைக்கும் முன்பு
அரைக்கும் முன்பு

அரைத்த பொடியை நன்கு ஆற விட்டு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்தவும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் காய்ந்த முருங்கை இலையை சேர்த்து பொடி தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் காய்ந்த கறிவேப்பிலையை வறுக்காமல் உபயோகித்து பொடி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.