சசிபெருமாள் என்றொரு பைத்தியக்காரர்

சசிபெருமாள் ஒரு பைத்தியக்காரர். பலரும் அம்மணமாய்த் திரியும் ஊரில் அனைவரும் கோவணம் கட்ட ஆசைப்பட்டவர்.

காப்பி குடிப்பதைப் போல் சாராயம் குடிக்க ஆரம்பித்துவிட்ட சமூகத்திடம் காந்தி போல் கட்டுப்பாடு வேண்டிய பைத்தியக்காரர் சசிபெருமாள்.

சமூகம் கெட்டுப் போவதைச் சகித்துக் கொண்டு வாழும் நம்மிடம் சரியானதைச் செய்யுங்கள் என்று சொன்னவர்.

மகிழ்ச்சிக்காகக் குடிக்கின்றோம் என்று சொன்னவர்களிடம் உன் குடும்ப மகிழ்ச்சியை மது குடித்துவிடும் என்று சொன்னவர்.

அடித்தட்டு மக்களின் உதவியால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் அந்த மக்களின் அழிவிற்கே வேலை செய்கிறார்கள் என்ற உண்மையைத் தன் உயிரைக் கொடுத்துச் சொன்னவர்.

தமிழ்நாடு குடியால் தடுமாறும் நாடாய் மாறிப்போனதற்குத் தலையில் அடித்துக் கொண்ட பைத்தியக்காரர் சசிபெருமாள்.

மதுவெனும் அரக்கனைக் கொன்று மக்களைக் காக்கும் சண்டையில் தன்னை மாய்த்துக் கொண்ட முதல் வீரர் சசிபெருமாள்.

 

பாரதம் காக்கப் புறப்பட்ட பகத்சிங் போல

பாட்டாலே சமூகநீதி புகட்டிய பாரதியைப் போல

மதுவின் கேட்டைத் தடுக்கத் தன்னை

மாய்துக் கொண்ட பைத்தியக்காரர் சசிபெருமாள்.

அம்மணமா? கோவணமா? எது

நம் சமர்ப்பணம் அவருக்கு?