சமணரைக் கழுவேற்றிய படலம்

சமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது.

திருஞானசம்பந்தர் தமது பதிகங்களை தீயிலிட்டும், ஆற்றிலிட்டும் சமணர்களுடன் போட்டியிட்டு வென்றது, மதுரையில் சைவம் மீண்டும் தழைத்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

சமணரைக் கழுவேற்றிய படலம் திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்து மூன்றாவது படலமாக அமைந்துள்ளது.

அனல் மற்றும் புனல் வாதங்கள்

திருஞானசம்பந்தர் சொக்கநாதரின் திருவருளால் கூன்பாண்டியனின் வெப்புநோயையும், உடல் கூனினையும் போக்கியதைக் கண்டு மங்கையர்கரசியும், குலச்சிறையாரும் பெரிதும் மகிழ்ந்தனர்.

மதுரையில் மீண்டும் சைவத்தை தளிர்க்கச் செய்யுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

திருஞானசம்பந்தரும் இறைவனின் திருவருளால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று அவர்களிடம் கூறி திருகோவிலை அடைந்து இறைவனை மனமார வழிபட்டார்.

ஞானசம்பந்தர் இறைவனாரிடம் “ஐயனே, பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தோங்க அருள்புரியுங்கள்” என்று வேண்டிக் கொண்டார்.

பாண்டியனின் வெப்புநோயை தீர்ப்பதில் தோல்வியுற்ற சமணர்கள் திருஞானசம்பந்தரை வாதிட்டு வெல்ல முடிவு செய்தனர்.

மன்னனிடம் இதனைத் தெரிவித்து அவரை வாதப்போருக்கு அழைத்தனர். மன்னனும் இதற்கு உடன்பட்டான். போட்டியின்படி மதுரை நகருக்கு வெளியே அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது.

சமணர்கள் தங்களின் பாடல்களை பனைஓலை சுவடியில் எழுதி குண்டத்தில் போட்டனர். திருஞானசம்பந்தரும் ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை அக்னியில் இட்டார்.

அக்னி குண்டம் எரிந்து முடிந்ததும் திருஞானசம்பந்தரின் திருநள்ளாற்றுப் பதிகம் எரியாமல் புதுப்பொலிவுடன் இருந்தது. சமணர்களின் பாடல் தீயில் கருகியது.

ஆனால் சமணர்கள் சமாதானம் அடையாமல் புனல் வாதத்திற்கு திருஞானசம்பந்தரை அழைத்தனர். அப்போது பாண்டியன் குறுக்கிட்டு வாதத்தில் தோற்றவர்கள் கழுவேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இருவரும் ஒப்புக் கொண்டனர்.

வைகை ஆற்றில் சமணர்கள் பனைஓலையில் எழுதிய தங்களின் பாடல்களை இட்டனர். அச்சுவடிகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

திருஞானசம்பந்தர் தான் எழுதிய ‘வாழ்க அந்தணர், வாழ்க ஆவினம்’ என்ற பதிகத்தை ஆற்றில் போட்டார். என்ன அதிசயம் திருஞானசம்பந்தரின் ஏடானது வைகை ஆற்று நீரினை எதிர்த்து கிழித்து சென்று சற்று தூரத்தில் மறைந்தது.

இதனைக் கண்டதும் சமணர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு தாங்களாகவே கழுவில் ஏறி தங்களின் உயிரினைத் துறந்தனர்.

ஏடு மறைந்த இடத்தில் வில்வமரத்தின் அடியில் இறைவனார் சுயம்புவாய் தோன்றி இருந்தார். அதனைக் கண்டதும் அங்கிருந்தோர் அனைவரும் ஆச்சரியத்துடன் அவரை வழிபட்டனர்.

திருஞானசம்பந்தர் அப்போது ‘வன்னியமும் மத்தமும்’ என்ற பதிகத்தைப் பாடி இறைவனாரை வழிபட்டார்.

அப்போது ஒரு முதியவர் வடிவில் இறைவனார் அவ்விடத்திற்கு வந்தார். ஞானசம்பந்தர் அவரிடம் “ஐயா, என்னுடைய அரிய பாடல்கள் அடங்கிய ஓலைசுவடியை வைகை ஆற்றில் இட்டேன். அது ஆற்றினைக் கிழித்துக் கொண்டு சென்று இவ்விடத்தில் மறைந்து விட்டது.” என்றார்.

முதியவர் ஞானசம்பந்தரிடம் ஏடுகளை தந்து மறைந்தருளினார்.
பின்னர் சௌந்திரபாண்டியன் அவ்விடத்தில் திருகோவில் ஒன்றினைக் கட்டி சிலகாலம் தங்கியிருந்து இறைவனாரை வழிபட்டான். அவ்விடம் தற்போது திருவேடகம் என்று அழைக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து பல தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி மீண்டும் சோழ நாட்டிற்குச் சென்றார்.

சமணரைக் கழுவேற்றிய படலம் கூறும் கருத்து

இறைவனார் தன்னலமில்லா தன்னுடைய அடியவர்களைக் காப்பார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

 

அடுத்த படலம் வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

 

One Reply to “சமணரைக் கழுவேற்றிய படலம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.