சம்பல் ஆறு – சாபம் வரமானது எப்படி?

சம்பல் ஆறு சாபம் பெற்ற நதியாகத்தான் இன்றளவும் மக்களால் கருதப்படுகிறது. ஆனால் அதனுடைய சாபமே இன்றைக்கு இந்தியாவின் தூய நதி என்ற பெரிய வரத்தினை அதற்கு அளித்துள்ளது.

சம்பல் நதியின் சாபம் எவ்வாறு வரமானது என்பதை பற்றியே இக்கட்டுரை.

இந்தியாவில் பொதுவாக நதிகள் என்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. காரணம் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளில் தோன்றி வளர்ந்ததே ஆகும்.

மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணமாக ஆறு விளங்கியதால் மக்கள் அதனைப் புனிதமாகவும் கடவுளாகவும் வழிபட்டனர். 

கங்கையும், யமுனையும் புனித நதிகளாக போற்றப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கு எல்லாம் நேர்மாறாக சம்பல் நதியில் குளித்தால் பாவம் பிடிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

நம் முன்னோர்களின் வாக்கே பல அரிய உயிர்களுக்கு வாழிடத்தையும், கங்கை மற்றும் யமுனையின் மாசுபாட்டையும் குறைக்க காரணமாக அமைந்துள்ளது.

சம்பல் ஆறு மத்திய மற்றும் வடஇந்தியாவை வளப்படுத்தும் இந்தியாவின் ஒன்பதாவது பெரிய நதி. இது மத்தியப்பிரதேசத்தில் தோன்றி ராஜஸ்தானில் பாய்ந்து உத்திரப்பிரதேசத்தில் யமுனையில் கலக்கிறது.

இது மத்தியபிரதேசத்தின் விந்திய மலையில் சுமார் 843 மீட்டர் உயரத்தில் சிங்கர் சௌரி என்னும் இடத்தில் தோன்றுகிறது.

அங்கியிருந்து வடக்காக மத்தியபிரதேசத்தில் பாய்ந்து பின்னர் வடகிழக்காக ராஜஸ்தானில் நுழைந்து பின்னர் மத்தியபிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லைப்பகுதியில் பாய்கிறது.

பின்னர் மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம் எல்லையைத் தொட்டு உத்திரபிரதேசத்தில் இட்டாவா என்னும் இடத்தில் யமுனையுடன் கலக்கிறது.

யமுனையின் முக்கியமான கிளையாறான இந்நதியின் மொத்த நீளம் 960 கிமீ ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரே வற்றாத நதி சம்பல் ஆறு மட்டுமே.

சம்பல் ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் பல்லுயிர் சுற்றுசூழலையும், மாசுபடாத தூய நீரையும் கொண்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, புனித நதிகளான கங்கை மற்றும் யமுனையின் மாசுபட்ட நீரினை, தன்னுடைய தூய நீரினைக் கொண்டு சுத்தப்படுத்தும் நதியாகவும் சாபம் பெற்ற சம்பல் ஆறு விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மாசடைந்த நீரினை உடைய யமுனையில் சம்பலின் தூய நீர் கலப்பதால் அதனுடைய மாசின் அளவு குறைக்கப்படுகிறது. இதனை ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். மாசு குறைந்த யமுனை கங்கையில் கலக்கும்போது, கங்கையின் மாசும் குறைகிறது.

புண்ணிய நதிகளைச் சுத்தமாக்கும் வரம் பெற்றதாக இன்று சம்பல் நதி உள்ளது.

அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று இந்நதியைப் பற்றி புராணங்களில் கூறப்பட்ட செய்தி. மற்றொன்று இந்நதி செல்லும் இடங்களில் உள்ள புவியியல் அமைப்பு.

புராணங்களில் சம்பல் நதி சர்மன்வதி என்றும் மகாபாரதத்தில் சர்மான்யவதி என்றும் கூறப்படுகிறது.

புராணங்களின்படி ரந்திதேவா என்ற மன்னன் வேள்விக்காக பல்லாயிரக்கணக்கான மாடுகளையும், குதிரைகளையும் பலியிட்டான்.

பலியிடப்பட்ட உயிரினங்களின் இரத்தத்திலிருந்து உருவானதுதான் சம்பல் நதி என்று கூறப்படுகிறது.

மகாபாரதத்தின்படி பாஞ்சால அரசின் தெற்கு எல்லையாக சம்பல் நதி குறிப்பிடப்படுகிறது.

நாட்டுப்புறக் கதைகளின்படி சம்பல் நதி இருந்த பகுதி சகுனியின் நாட்டில் இருந்தாகவும், இந்நதிக்கரையிலே பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பகடை விளையாட்டு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

பகடை விளையாட்டில் பாண்டவர்கள் தோற்றதால் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டாள்.

திரௌபதி தன்னுடைய அவமானத்திற்கு சாட்சியாக இருந்ததாக சம்பல் நதியைக் கருதினாள்.

ஆதலால் சம்பல் நதியில் குளிப்பவர்கள் பழிவாங்கும் எண்ணத்தை தணியாத தாகமாகக் கொள்வார்கள் என்று சம்பல் நதிக்கு சாபமிட்டாள்.

திரௌபதி சாபம் மற்றும் உயிரினங்களின் இரத்தத்தால் உருவானது என்ற கருத்து, மக்கள் சம்பல் ஆற்றினை பயன்படுத்துவதையு ம், ஆற்றின் கரைகளை ஒட்டி பெரிய நகரங்கள் உருவாவதையும் தடுத்தது.

இன்னும் சொல்லப்போனால் சம்பல் நதிக் கரையில் குறிப்பிடத்தக்க புனிதத்தலங்கள் ஏதும் உருவாகவில்லை.

தூய நதியாக சம்பல் விளங்குவதற்கான இரண்டாவது காரணத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இந்நதி பயணிக்கும் பெரும்பாலான இடங்கள் விந்திய மற்றும் ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இதனுடைய வழியெங்கும் தாழ்வான பள்ளத்தாக்குகளும், இருள் சூழ்ந்த மலைக் குன்றுகளும் இருக்கின்றன.

ஆதலால் சம்பல் நதி பகுதி புரட்சியாளர்களுக்கும், கொள்ளைக் கும்பலுக்கும் உறைவிடமாக அமைந்து இப்பகுதியில் தொழிற்சாலைகளோ, நகர்மயமாதலோ நிகழவில்லை.

மக்களின் பயன்பாடு குறைந்ததால் இந்நதி மாசு கலப்பின்றி தூய்மையாகவும், பல்லுயிர் பெருகுவதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

இந்நதி அரை வறண்ட மண்டலத்தில் அமைந்துள்ளதால் முட்புதர்காடுகள், வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

1979-ம் ஆண்டு சம்பல் நதியின் 250 மைல் நீளம் தேசிய சம்பல் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அரிய வகை கரியல் முதலை, மக்கர் முதலை, எட்டு வகையான நன்னீர் ஆமை, கங்கையாற்று டால்பின்கள் ஆகியவை காணப்படுகின்றன.

சம்பல் ஆற்றில் கரியால் முதலைகள்

சிலநூறு எண்ணிகையிலேயே இருந்த கரியால் முதலைகள் சரணாலயமாக மாற்றப்பட்ட பின் சம்பல் நதியில்; பல்லாயிரக்கணக்கில் பெருகியுள்ளன.

இந்நதிப் பகுதியில் 330 வகைகளுக்கும் மேற்பட்ட வசிப்பிட மற்றும் புகலிடப் பறவைகள் காணப்படுகின்றன.

சரணாலயப் பகுதியில் மீன்பிடிக்கவோ, நிலத்தடி நீரினைக் கொண்டு வேளாண்மை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது சம்பல் நதியில் நிகழும் மணல் குவாரிகள், முறையற்ற மீன்வேட்டை, நதி நீரினை மற்றவற்றிற்கு பயன்படுத்துவது ஆகியவை இந்நதியின் பல்லுயிர் வளத்தை கேள்விக் குறியாக்கும் நிலையில் உள்ளது.

இயற்கை வளங்களைப் பாதுகாத்து, ஏனைய உயிர்களுக்கும் வாழ்வளித்து சிறந்த இயற்கைச் சூழலை எதிர்கால சந்தயினருக்குப் பரிசளிப்போம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.