சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

சிக்கன் பிரியாணி அசைவ உணவு பிரியர்களின் விருப்பமான உணவு ஆகும். விருந்தினர்கள் வருகையின் போதும், விழாக் காலங்களிலும் இது நம் நாட்டில் பரவலாக சமைத்து உண்ணப்படுகிறது.

எளிய முறையில் வீட்டில், சுவையான சிக்கன் பிரியாணி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சம்பா பிரியாணி அரிசி – 400 கிராம்

சிக்கன் – 200 கிராம்

தேங்காய் – ஒரு எண்ணம் (மீடியம் சைஸ்)

நெய் – 25 கிராம்

கொத்த மல்லி இலை – 10 தண்டுகள் (மீடியம் சைஸ்)

எலுமிச்சை பழம் – 1 மூடி

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசால் அரைக்க

பெருஞ்சீரகம் – 4 ஸ்பூன்

பட்டை – ஆள்காட்டி விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

அன்னாசிப் பூ – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

கடல் பாசி – சிறிதளவு

சாதிப்பத்திரி – 3 இதழ்கள்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

முந்திரிப் பருப்பு – 6 எண்ணம்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

பிரிஞ்சி இலை – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

சிக்கன் பிரியாணி செய்முறை

சம்பா பிரியாணி அரிசியை கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் ஒரு மூடி எலுமிச்சையை பிழிந்து விட்டு, அரிசியை குலுக்கி, எலுமிச்சை சாறு எல்லா இடத்திலும் பரவுமாறு செய்யவும்.

கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

 

சுத்தம் செய்த சிக்கன்
சுத்தம் செய்த சிக்கன்

 

தேங்காயை உடைத்து பால் எடுக்கவும்.

தேங்காய் பாலானது அரிசியைப் போல இரு மடங்கு இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, காம்பு நீக்கிய பச்சை மிளகாயுடன் சேர்த்து, மிக்ஸியில் பரபபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி, தோல் உரித்த வெள்ளைப் பூண்டுடன் அரைத்துக் கொள்ளவும்.

 

அரைத்த மசாலாக் கலவை
அரைத்த மசாலாக் கலவை

 

பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கடல்பாசி, சாதிப்பத்திரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 

அரைத்த கரம்மசாலாப் பொடி
அரைத்த கரம்மசாலாப் பொடி

 

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

 

பின் அதனுடன் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள், மஞ்சள் பொடி, தேவையான உப்பு சேர்த்து இரு நிமிடங்கள் வதக்கவும்.

 

சிக்கன், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்ததும்
சிக்கன், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்ததும்

 

மசாலாக் கலவைச் சேர்க்கும் முன்பு
மசாலாக் கலவைச் சேர்க்கும் முன்பு

 

மசாலாக் கலவை, கரம்மசாலா பொடிச் சேர்த்ததும்
மசாலாக் கலவை, கரம்மசாலா பொடிச் சேர்த்ததும்

 

பின்னர் இஞ்சி, பூண்டு கலவை, வெங்காயம் பச்சை மிளகாய் கலவை, அரைத்த கரம் மசாலாப் பொடி, ¼ டம்ளர் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி, இரண்டு விசில் வரும் வரை வைத்து, அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து, கலவையைக் கிளறி, அதனுடன் அரிசிக்கு இரண்டு மடங்கு அளவுக்கான தேங்காய் பாலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்ததும் அதனுடன் சம்பா அரிசி, தேவையான உப்பு, நெய் சேர்த்து கிளறி குக்கரை மூடி விடவும்.

 

குக்கரை மூடும் முன்
குக்கரை மூடும் முன்

 

அடுப்பினை மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் சிம்மில் இருநிமிடங்கள் வைத்து இறக்கவும்.

குக்கரில் இருந்து ஆவி நீங்கியவுடன் குக்கரைத் திறந்து, பிரியாணியை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லி இலையைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

சுவையான சிக்கன் பிரியாணி தயார்.

 

சிக்கன் பிரியாணி
சிக்கன் பிரியாணி

 

இதனுடன் சிக்கன் சாப்ஸ் சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

 

குறிப்பு

குக்கரின் கைபிடியைப் பிடித்துப் பார்த்து, கொதி அடங்கியிருந்தால் குக்கரினை அணைத்து விடலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.