சிறப்புடன் வாழ

 சிறப்புடன் வாழ வேண்டும் என்றே நாம் எல்லோரும் எண்ணுகிறோம்.

சிறப்பாக வாழ்தல் என்றால் என்ன?. அப்படி சிறப்பாக வாழ முயற்சிகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோமா?  

சிறப்பாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்ற அடுக்கடுகான கேள்விக்கான பதிலை நான் உங்களுக்கு சிறு நிகழ்ச்சி மூலம் விளக்குகிறேன். 

பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் தனது மாணவர்களிடம் “எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்தால் சிறப்பாக வாழலாம்” என்றார். 

சிறுவன் ஒருவன் எழுந்து “இது எப்படி சாத்தியமாகும்?” என்றான்.

அதற்கு ஆசிரியர் சிறுவனிடம் ஒரு கல்லைக் கொடுத்து “ நீ இந்தக் கல்லைக் கொண்டு முதலில் ஒரு நாயை அடித்துவிட்டு வா” என்றார்.

சிறுவனும் தெருவில் சென்று கொண்டிருந்த நாயினை கல்லால் அடித்தான்.

நாய் பயந்து ஓடிவிட்டது.

ஆசிரியரிடம் திரும்பிய சிறுவனை பார்த்து “நாயை கல்லால் அடித்தாயா? என்ன நடந்தது?” என்றார்.

சிறுவனும் பெருமையாக “நான் கல்லால் அடித்ததும் நாய் ஓடிவிட்டது” என்றான்.

 

 

“சரி இப்பொழுது கல்லைக் கொண்டு தேன்கூட்டின் மீது அடித்துவிட்டு வா” என்றார்.

சிறுவனும் உற்சாகமாக கல்லை எடுத்துக் கொண்டு மரத்தில் இருந்த தேன்கூட்டில் அடித்தான்.

அவ்வளவுதான் தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் அவனை நோக்கி விரைந்து வந்தன.

தேனீகளைப் பார்த்ததும் சிறுவன் ஓடத் தொடங்கினான்.

எனினும் அவை அவனை விரட்டி நன்கு கொட்டி விட்டன. எனவே அவன் உடல் முழுவதும் வீக்கம் உண்டானது.

மிகவும் சோர்வாக திரும்பிய சிறுவனிடம் ஆசிரியர் “ஏன் இப்படி சோர்வாக இருக்கிறாய்? கல்லை தேன்கூட்டில் எறிந்தாயா?” என்று கேட்டார்.

அதற்கு சிறுவனும் “தேன்கூட்டில் எறிந்தவுடன் தேனீக்கள் என்னைப் பார்த்து விரைந்து வந்தன.

நான் அதனைக் கண்டு ஓடினேன். எனினும் அவை என்னை விரட்டி நன்கு கொட்டி விட்டன.” என்றான்.

 

அதற்கு ஆசிரியர் “ஏன் தேனீக்களை விட நாய் வலிமையானது தானே. அப்படியிருக்க கல்லைக் கண்டதும் நாய் ஏன் பயந்து ஓடியது? தேனீக்கள் ஏன் உன்னை ஓட வைத்தன?” என்றார்.

சிறுவன் “நாய் தனியாக இருந்ததால் கல்லால் அடித்ததும் பயந்து ஓடியது. ஆனால் தேனீக்கள் கூட்டமாய் இருந்ததால் கல்லால் அடித்ததும் என்னைத் துரத்தின” என்றான்.

அதற்கு ஆசிரியர் “சிறிய பூச்சிகளான தேனீக்கள் ஒற்றுமையாக இருந்ததால் பலசாலியான மனிதனைத் துரத்தின.

தேனீக்களைவிட வலிமையான நாய் தனியாக இருந்ததால் மனிதனைக் கண்டு பயந்து ஓடியது.

எனவே எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதனாக இருந்தாலும், ஒற்றுமையாக இருந்தால் நம்பலமே தனி” என்றார். 

ஆகையால் நாம் கல்வி, செல்வம், பலம் ஆகியவற்றை எவ்வளவு பெற்றிருந்தாலும் சிறப்புடன் வாழ வேண்டுமென்றால் சக மனிதர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 

-வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.