சிறுதானிய புட்டு செய்வது எப்படி?

சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும் ஆகும்.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவை சிறுதானியம் என்றழைக்கப்படுகின்றன.

இந்த சிற்றுண்டி தயார் செய்ய மேற்கூறிய தானியங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.

இனி சுவையான சிறுதானிய புட்டு செய்முறை பற்றிப் பார்ப்போம்.

புட்டு மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

சாமை – 1 கப்

தினை – 1 கப்

வரகு – 1 கப்

குதிரைவாலி – 1 கப்

கேழ்வரகு – 1 கப்

கம்பு – 1 கப்

சோளம் – 1 கப்

புட்டு மாவு தயார் செய்யும் முறை

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும்.

 

தினையை வறுக்கும் போது
தினையை வறுக்கும் போது

 

பின் அதனை ஆறவைத்து மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். சிறுதானியப்புட்டு மாவு தயார்.

 

சிறுதானிய புட்டு மாவு
சிறுதானிய புட்டு மாவு

 

இந்த மாவினை காற்று புகாத டப்பாவில் அடைத்து சுமார் மூன்று மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

புட்டு தயார் செய்ய தேவையானவை

சிறுதானிய புட்டு மாவு – 200 கிராம்

தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

சீனி – 100 கிராம்

உப்பு – மிகவும் சிறிதளவு (ஒரு சிட்டிகை)

ஏலக்காய் – 3 அல்லது 4 எண்ணம் (பெரியது)

தண்ணீர் – பிசிறத் தேவையான அளவு

செய்முறை

உப்பினை பிசிறத் தேவையான அளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

தேங்காயை திருகிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

சிறுதானியப் புட்டு மாவில் உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கட்டி விழாமல் உதிரியாகப் பிசிறவும்.

புட்டு மாவானது உதிரியாகவும், ஈரப்பதத்துடனும் இருக்குமாறு செய்ய வேண்டும்.

 

 புட்டு மாவினைப் பிசையும் போது
புட்டு மாவினைப் பிசையும் போது

 

பின் ஈரப்பதமான மாவினை ஒன்றுபோல் அழுத்திவிட்டு துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும்.

 

பிசைந்த மாவு
பிசைந்த மாவு

 

பின் புட்டு மாவினை இட்லிப் பானையில் வைத்து வேக விடவும். மாவானது வெந்து மணம் வந்தவுடன் அடுப்பினை அணைத்து விடவும்.

 

இட்லி பானையில் வைத்த மாவு
இட்லி பானையில் வைத்த மாவு

 

பின் சூடான வெந்த புட்டு மாவினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் சீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

சுவையான சிறுதானிய புட்டு தயார். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

 

சுவையான சிறுதானிய புட்டு
சுவையான சிறுதானிய புட்டு

 

இதனை குழந்தைகளிடம் பள்ளியில் வைத்து சாப்பிடக் கொடுத்து அனுப்பலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து சூடான புட்டு மாவில் கலந்து புட்டு தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் சீனிக்கு பதிலாக மண்டை வெல்லத்தை கலந்து புட்டு தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

One Reply to “சிறுதானிய புட்டு செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.