சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஒன்பதாவது பாசுரம் ஆகும்.

திருப்பாவை பாடல் 29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றும்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதே

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றோலோர் எம்பாவாய்

விளக்கம்

கண்ணனே, மிக விடியற்காலையிலேயே நாங்கள் எழுந்து வந்து உன் அரண்மனையில் உன்னைச் சேவித்து பொற்றாமரை போன்ற உனது திருவடிகளைப் போற்றி, நாங்கள் கோரும் வரம் இதுதான்.

மாடு மேய்த்து உண்ணும் எங்களது ஆயர்குலத்தில் கோபாலனாக அவதரித்த நீ (பரம்பொருள் என்பதை நாங்கள் அறிவோம்), உனக்கு நாங்கள் செய்யும் சிறுசிறு தொண்டுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்கள் உன்னுடைய அருளை இன்றைக்கு மட்டும் பெற்றுக் கொள்ள வரவில்லை.

கோவிந்தா, எந்த காலத்திலும், ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உன் அடியார்களாக பிறப்பு எடுத்து உன்னோடு இணைந்து வாழும் பேறு பெற்று உன் அருளைப் பெற வேண்டுகிறோம்.

எங்களது உள்ளத்தில் எழும் மற்ற சிற்றாசைகளை நீ எங்களிடத்திலிருந்து நீக்கி, அதைப் பக்தியாக மாற்றி அருள் செய்ய வேண்டுகிறோம். இதுவே எங்களுடைய கோரிக்கை ஆகும்.

திருப்பாவையானது 28 பாசுரங்களுடன் நிறைவு பெறுவதாகவும், 29 மற்றும் 30-வது பாசுரங்கள் முடிவுரை போன்ற சாற்றுப் பாசுரங்கள் என்றும் அழைப்பர்.

கோதை என்ற ஆண்டாள்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.