சுண்டை – மருத்துவ பயன்கள்

சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்.

சுண்டை கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி ஆகும். சுண்டை இலைகள் பெரியவை, கொத்தாகவும், பல கிளைகளுடனும், சுணைகள் கொண்டதாகவும் காணப்படும்.

சுண்டை பூக்கள், தொகுப்பானவை, வெள்ளை நிறமானவை. சுண்டை காய்கள், உருண்டை வடிவமானவை, கொத்தானவை.

வீட்டுத் தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை வளர்கின்றது. பொதுவாக சுண்டைக்காய் என்று அழைக்கப்படுகின்றது. கடுகி, அமரக்காய் போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு.

சுண்டை காய்களே மருத்துவத்தில் பயன்படுபவை. சுண்டைக்காய் வற்றல், மளிகை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மலைப்பகுதிகளில் விளையும் சுண்டைக்கு மலைச்சுண்டை என்கிற பெயர் உண்டு. இது அதிக கசப்பாக இருக்கும், உணவில் உபயோகிக்க முடியாதது.

தேவையான அளவு சுண்டைக்காயை, மோரில் நன்கு மூழ்கியிருக்குமாறு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, வற்றலாகச் செய்துக் கொள்ள வேண்டும். இந்த சுண்டை வற்றலை தூள் செய்து கொண்டு, ¼ தேக்கரண்டி அளவில், தினமும், காலை, மாலை வேளைகளில், வெந்நீருடன் உட்கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 2 நாட்களுக்கு இவ்வாறு செய்துவர பேதி கட்டுப்படும்.

சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடிக்கஅஜீரணம் குணமாகும்.

பச்சையான இளம் சுண்டைக்காய்களை குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்.

சுண்டைக்காய் காரக்குழம்பு இன்றும் பிரபலமான ஒன்று. பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள சளிக்கட்டு குறையும். இரத்தம் சுத்தமாகும்.

சுண்டைக்காய்க் குழம்பு எலும்புகள் உறுதியடையவும், நாக்கின் சுவை உணர்ச்சியை அறியும் திறனை அதிகமாக்கவும். மேலும், குரல்வளம் அதிகரிக்கவும் பயன்படும்.

Comments are closed.