சேரும் இடம் அறிந்து சேர்

நாம் யாருடனும் நட்புக் கொள்ளும்போது அவர்களின் குணநலன்கள் அறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை சேரும் இடம் அறிந்து சேர் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

பச்சை வனம் என்ற காட்டில் குரங்கு குப்புசாமி வசித்து வந்தது. அது சோம்பேறி. ஆனால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்றி காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லது.

ஒருநாள் குரங்கு குப்புசாமி மக்காச்சோளக் கொல்லை ஒன்றைப் பார்த்தது. அங்கே மக்காச்சோளங்கள் நிறைய காய்த்து இருந்தன.

குரங்கு குப்புசாமிக்கு மக்காச்சோளம் தின்ன ஆசையாக இருந்தது. மக்காச்சோளங்களை பறித்து வைத்துக் கொண்டால் சிலநாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணியது.

ஆனால் மக்காச்சோளத்தை பறிக்க சோம்பேறியாக இருந்ததால் யாரையாவது துணைக்கு வைத்துக் கொண்டால் சுலபமாக மக்காச்சோளத்தைப் பறிக்கலாம் என்று எண்ணியது.

‘யாரைத் துணைக்கு அழைத்துக் கொள்வது?’ என்று யோசித்தது.

முதலில் ‘குரங்கு குப்பணாவை துணைக்கு அழைக்கலாம்’ என்று எண்ணியது. ‘ஆனால் குப்பண்ணா பறிக்கின்ற மக்காச்சோளத்தில் சரி பாதியைக் கேட்கும். ஆதலால் அது சரிப்படாது.’ என்று நினைத்துக் கொண்டது.

பிறகு சிங்கம் சிங்காரம் குரங்கு குப்புசாமியின் நினைவுக்கு வந்தது. ‘மக்காச்சோளத்தை பிரிப்பதில் காட்டரசன் சிங்கம் சிங்காரத்திற்கு கோபம் ஏற்பட்டால் தன்னை அடித்துக் கொன்று விடும். ஆதலால் அது நமக்கு சரிப்பட்டு வராது.’ என்று எண்ணியது.

பின்னர் வரிக்குதிரை வண்ணமுத்து குரங்கு குப்புசாமியின் யோசனையில் வந்தது. ‘பிடுங்கும் மக்காச்சோளத்தில் குறைவாக பிரித்துக் கொடுத்தால் வரிக்குதிரை வண்ணமுத்து தன்னை உதைத்து விடும்’ என்று எண்ணியது.

கடைசியாக ஆட்டுக்கடா அய்யாக்கண்ணு குரங்கு குப்புசாமியின் நினைவிற்கு வந்தது. ‘ஆட்டுக்கடா அய்யாக்கண்ணுதான் நம்முடன் மக்காச்சோளம் பறிக்க சரியான ஆள். அவனைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு மக்காச்சோளத்தைப் பறிக்க வேண்டியதுதான்.’ என்று எண்ணியவாறே ஆட்டுக்கடா அய்யாக்கண்ணுவைத் தேடிச் சென்றது.

மாந்தோப்பின் அருகில் இருந்த புல்மேட்டில் அது புல் மேய்ந்து கொண்டிருந்தது.

ஆட்டுக்கடா அய்யாக்கண்ணுவிடம் சென்று “அய்யாக்கண்ணு நான் ஒரு மக்காச்சோளத் தோட்டத்தைப் பார்த்தேன். அங்கே நிறைய மக்காசோளங்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. நாம் இருவரும் சேர்த்து மக்காசோளம் பறிப்போமா?” என்று கேட்டது.

“சரி வா, போகலாம்” என்றது ஆட்டுக்கடா அய்யாகண்ணு.

இருவரும் சேர்ந்து மக்காசோளத்தைப் பறித்தன. பறித்த மக்காசோளங்களை இரண்டு மூட்டைகளாக குரங்கு குப்புசாமி கட்டியது.

ஆட்டுக்கடா அய்யாக்கண்ணுவிடம் குரங்கு குப்புசாமி “சரி, அய்யாக்கண்ணு மக்காச்சோளம் பறித்த என் பங்கிற்கு, நான் ஒரு மூட்டையை எடுத்துக் கொள்கிறேன்.” என்றது.

ஆட்டுக்கிடா அய்யாக்கண்ணுவும் “சரி” என்றது.

“அய்யாக்கண்ணு, மக்காச்சோளக் காட்டை கண்டுபிடித்து கொடுத்தற்காக, மற்றொரு மூட்டையையும் எடுத்துக் கொள்கிறேன்.” என்றபடி மக்காசோள மூட்டைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது.

ஆட்டுக்கடா அய்யாக்கண்ணு செய்வதறியாமல் குரங்கு குப்புசாமி செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தது.

இதைத்தான் பெரியவர்கள் சேரும் இடம் அறிந்து சேர் என்றனர். அதாவது நாம் ஒருவருடன் இணைந்து ஏதேனும் காரியத்தில் ஈடுபடும்போது அவர்களின் குணநலன்களை அறிந்து கொள்வது அவசியம்.

வ.முனீஸ்வரன்

2 Replies to “சேரும் இடம் அறிந்து சேர்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.