டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்

டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கோண்ட்வானா கண்டமானது பிரியத் தொடங்கியது. அவ்வாறு பிரிந்த கோண்ட்வானாவின் ஒருபகுதியானது, ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிக்காவை உள்ளடக்கியிருந்தது.

சில மில்லியன் ஆண்டுகள் கழித்து, ஆஸ்திரேலியாவானது அன்டார்டிக்காவிலிருந்து பிரிந்து, வடக்கு நோக்கி பயணித்து தற்போதைய இடத்தை அடைந்தது.

ஆஸ்திரேலியா உலகின் மிகச்சிறிய கண்டம் மற்றும் மிகப்பெரிய தீவு ஆகும்.

அதனால் ஆஸ்திரேலியாவின் காலநிலை, நிலஅமைப்பு ஆகியவற்றில் மாற்றம் உண்டாகி அங்குள்ள தாவரங்கள், விலங்கினங்கள் சூழலுக்கு ஏற்ப தனித்தன்மையோடு இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் காணப்படும் உயிரினங்களில் 80 சதவீதமானது உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான விலங்குகள், தங்களின் வளர்ச்சி அடையாத இளம்குட்டிகளை வயிற்றுப்பையில் பாதுகாத்து வளர்த்து விடும் மார்ச்சுபியல் விலங்குகளாக உள்ளன.

இனி டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள் பற்றி பார்ப்போம்.

கங்காரு

கங்காரு
கங்காரு

 

ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட கங்காரு, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலூட்டி ஆகும். இது மார்சுபியல் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்காகும்.

மார்சுபியல் விலங்குகள் தங்களின் இளம்குட்டிகளை, வளரும் வரை வயிற்றின் பை போன்ற பகுதியில், பாதுகாப்பாக வைத்து வளர்க்கின்றன.

கங்காரு அகலமான பாதங்களுடன் கூடிய நீண்ட உறுதியான பின்னங்கால்களையும், சதைப்பகுதி நிறைந்த நீண்ட வாலினையும், சிறிய தலை மற்றும் முன்னங்கால்களையும் கொண்டுள்ளது.

இதனுடைய பின்னங்கால்கள் மற்றும் வாலானது இது கீழே விழாமல் தாவிக் குதிப்பதற்கு உதவுகின்றன.

இது ஒரே தாவலில் 9மீட்டர் தூரம் வரை தாவுகிறது. இது மணிக்கு 48 கிலோமீட்டர் வரை பயணிக்கும். கங்காரானது 50 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழுவாகக் காணப்படுகிறது.

கங்காரு பிறந்த தனது குட்டியை சுமார் பத்து மாதங்கள் வயிற்றில் உள்ள பையில் வைத்து பாதுகாக்கிறது.

இது ஆஸ்திரேலியாவின் தேசிய சின்னமாக உள்ளது.

 

 

கோவாலா

கோவாலா
கோவாலா

 

இது ஆஸ்திரேலியாவின் முக்கிய அடையாளச் சின்னமாக கருதப்படுகிறது. இது தனது நேரத்தை மரத்திலேயே கழிக்கிறது. யூகலிப்டஸ் இதனுடைய உணவாகும்.

கோவாலா என்பதற்கு தண்ணீர் தேவையில்லை என்பது பொருளாகும்.

இது மிகக்குறைந்தளவு நீரினையே அருந்துகிறது. ஏனெனில் இதனுடைய உணவிலிருந்தே தனக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறது.

இதுவும் பிறந்த தன்னுடைய இளம்குட்டியை வளரும் வரை, தன்னுடைய வயிற்றுப்பையில் பாதுகாப்பாக வளர்க்கிறது.

இதனுடைய பாதங்கள் மற்றும் நகங்கள், இது மரம் ஏறுவதற்கு உதவுகிறது. இது பார்ப்பதற்கு கரடி போன்று இருந்தாலும் இது உண்மையில் கரடி இனத்தைச் சார்ந்தது அல்ல.

இதனுடைய உடல் முழுவதும் சாம்பல் அல்லது செம்பழுப்புநிற முடியினால் போர்;த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்குகிறது.

 

வொம்பாட் (Wombat)

வொம்பாட்
வொம்பாட்

 

இது நான்கு கால்களில் நடக்கும் மார்ச்சுபியல் விலங்கினம் ஆகும். இது தன்னுடைய வளர்ச்சியடையாத இளம்குட்டியை, வயிற்று பையில் சுமார் ஐந்து மாதங்கள் வரை வைத்து வளர்க்கிறது.

இதற்கு கொறியுண்ணிகளைப் போல, நீண்ட முன்வெட்டும் பற்கள் இருக்கின்றன.

இந்த முன்னால் உள்ள வெட்டும் பற்கள், வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதனுடைய மேல்தோலானது பழுப்பு, கறுப்பு, சாம்பல் நிறங்களைக் கொண்டுள்ளது.

இவ்விலங்கு தன்னுடைய வலிமையான நகங்களைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் நீளமான குழியைத் தோண்டி அதற்குள் வசிக்கிறது.

இது இரவில் இரை தேடும் விலங்காகும். புற்கள், வேர்கள், மரப்பட்டைகள், கிழங்குகள் உள்ளிட்ட தாவரப் பொருட்களை உணவாகக் கொள்கிறது.

 

டிங்கோ (Dingo)

டிங்கோ
டிங்கோ

 

இது ஆஸ்திரேலியாவின் நிலத்தில் காணப்படும் பெரிய வேட்டை விலங்காகும். இது பார்ப்பதற்கு வீட்டுநாய் போல இருந்தாலும் இது வீட்டுநாய்க்கும் ஓநாய்க்கும் இடைப்பட்ட அளவினை உடையது.

இது தனியாகவோ அல்லது 10 பேர் கொண்ட குழுவாகவும் காணப்படும். இது ஆஸ்திரேலியாவில் சுமார் 3000 அல்லது 4000 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

டிங்கோ தனியாகவோ அல்லது குழுவாகவோ வேட்டையாடுகின்றது. முயல்கள், கொறியுண்ணிகள், பறவைகள், பல்லிகள் ஆகிய சிறிய உயிர்களை தனியாகவும், கங்காரு உள்ளிட்ட பெரிய உயிரிகளை குழுவாகவும் வேட்டையாடுகின்றது.

டிங்கோவால் நன்றாக மரம் ஏறவும் முடியும்.

இவ்விலங்கு பழங்கள் மற்றும் தாவரங்களையும் உட்கொள்கிறது. இது ஓநாய் போல் ஊளையிட்டு, தங்கள் குழுவில் மற்ற டிங்கோக்களுடன் தகவலை பரிமாறிக் கொள்கிறது.

 

 

பிளாட்டிபஸ்

பிளாட்டிபஸ்
பிளாட்டிபஸ்

 

பிளாட்டிபஸ் தற்போதைய உலகில் முட்டையிட்டு பாலூட்டும் இரண்டு விலங்குகளில் ஒன்று. மற்றொன்று எச்சிட்னாஸ் ஆகும்.

ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இது, ஆற்றங்கரையில் வளை தோண்டி வாழும் உயிரினமாகும்.

இது வாத்தினைப் போன்ற தட்டையான அலகும், வலைப்பின்னல் பாதத்தினையும் கொண்டுள்ளது. மேலும் இது நீர்எலியைப் போன்ற வாலினையும், நீர்நாயினைப் போன்ற உடல் மற்றும் முடியையும் கொண்டுள்ளது.

 

 

இவ்விலங்கானது உடல்முழுவதும் அடர்த்தியான முடியைக் கொண்டுள்ளது. இந்த அடர்த்தியான முடியானது தண்ணீருக்குள் இவ்விலங்கு இருக்கும்போது, தண்ணீர் உட்செல்லாமல் பாதுகாப்பதோடு உடலுக்கு கதகதப்பினைக் கொடுக்கிறது.

ஆண் பிளாட்டிபஸ் தன்னுடைய பாதத்தில், விசக் கொடுக்கினைக் கொண்டுள்ளது.

இதனுடைய தட்டையான அலகானது மிகவும் உணர்ச்சியுள்ள உறுப்பு ஆகும்.

தண்ணீருக்குள் இருக்கும்போது, இதனுடைய கண்கள் மற்றும் செவிகள் மூடிக் கொள்வதால், தன்னுடைய இரையை அலகின் உணர்ச்சியால் இனம் கண்டுகொள்கிறது.

 

 

எச்சிட்னாஸ்

எச்சிட்னாஸ்
எச்சிட்னாஸ்

 

ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இவ்விலங்கு மிகவும் பழமையானது.

முட்டையிட்டு பாலூட்டும் இவ்விலங்கு எறும்புகள் மற்றும் கரையான்களை உணவாகக் கொள்கிறது.

இதனுடைய உடலானது முட்கள் மற்றும் முடிகளால் மூடப்பட்டுள்ளது. இதனுடைய உடலின் முள்ளானது, கெரட்டினால் ஆன உருமாற்றம் அடைந்த முடியே ஆகும்.

உடலில் உள்ள முட்கள் இதனை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது. எதிரிகள் இதனை தாக்க வரும்போது, எச்சிட்னாஸ் சுருண்டு, மூக்கு பகுதி வெளியே தெரியும்படி தன்னுடைய உடலினை பந்து போல சுருட்டிக் கொள்கிறது.

இது தன்னுடைய கால்களால் எறும்பு புற்றை உடைத்து, நீண்ட நாக்கினை புற்றுக்குள் நுழைத்து, எறும்பினையும், கரையான்களையும் உண்ணுகிறது.

இது தன்னுடைய மோப்ப சக்தியால், இரை இருக்கும் இடத்தினை அறிந்து கொள்கிறது.

பெண் எச்சிட்னாஸ் வயிற்றில் உள்ள பைகளில் முட்டையிட்டு அதனைப் பொரிக்கச் செய்கிறது. இளம்குட்டிகள் வளரும் வரையில் தன்னுடைய பையில் பாதுகாப்பாக வளர்க்கிறது.

 

டாஸ்மேனியன் டெவில்

டாஸ்மேனியன் டெவில்
டாஸ்மேனியன் டெவில்

 

ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இது, மிகப்பெரிய வேட்டையாடும் மார்ச்சுபியல் விலங்கு ஆகும். இதனுடைய கரடுமுரடான பழுப்பு அல்லது கருப்புநிற தோலானது, பார்ப்பதற்கு குட்டிக் கரடியைப் போல் தோற்றமளிக்கிறது.

இதனுடைய முன்னங்கால்கள் நீண்டும், பின்னங்கால்கள் குட்டையாகவும் இருக்கின்றன. இது நடப்பதைப் பார்த்தால் பன்றி போல் இருக்கும். வளர்ந்த டாஸ்மேனியன் டெவில் உருவத்தில் சிறிய நாய் அளவு இருக்கும்.

டாஸ்மேனியன் டெவில் உணவிற்காகவும், எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், காற்றில் பறந்து இலக்கை அடைகின்றது.

மேலும் இது பயமுறுத்தப்படும் போது மிகவும் ஆக்ரோசமாகச் செயல்படுகின்றது. இது தவளைகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றது.

இது வலிமையான தாடைகள் மற்றும் கூர்மையான பற்களைக் கொண்டுள்ளது.

நிலத்தில் வாழும் விலங்குகளில் டாஸ்மேனியன் டெவிலின் கடிக்கும் திறனே மிகவும் சக்தி வாய்ந்தது.

 

வால்பி

வால்பி
வால்பி

 

இது கங்காரு இனங்களில் மிகவும் சிறியது. இதுவும் தன்னுடைய பிறந்த இளம்குட்டிகளை வயிற்று பையினுள் பாதுகாத்து வளர்த்து பெரிதாக்குகிறது.

தலை முதல் வால் வரை இதனுடைய நீளம் ஆறு அடியாகும். இது சக்தி வாய்ந்த பின்னங்கால்களைக் கொண்டு தாவிக் குதித்து அதிக தூரம் செல்கிறது.

தன்னுடைய எதிரிகளை, பின்னங்கால்களால் கடுமையாக உதைக்கின்றது.

இதனுடைய வாலானது நகரும் போதும், உட்காரும் போதும், உடலினை சமநிலைப் படுத்த உதவுகிறது.

புற்கள் மற்றும் தாவரங்களை இது உணவாக்குகிறது.

 

டைகர் குவால் (Tiger Quoll)

டைகர் குவால்
டைகர் குவால்

 

ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இது மார்ச்சுபியல் இனத்தைச் சார்ந்த வேட்டையாடும் விலங்கு ஆகும்.

இவ்விலங்கின் தோலானது, சிவப்பு கலந்த பழுப்புநிற உடலினையும், அதில் வெள்ளைப்புள்ளிகளையும் கொண்டுள்ளது. இதனுடைய மூக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக இருக்கும்.

இது தன்னுடைய இடத்தின் எல்லைகளை, மூத்திரத்தால் அடையாளப்படுத்துகிறது.

இதனுடைய வாழிடத்தின் அளவானது 500 ஹெக்டேர் வரை இருக்கும்.

இரவில் இரையைத் தேடும் இவ்விலங்கு, பகலில் குழிக்குள் பதுங்கி ஓய்வெடுக்கும். இவ்விலங்கு இரையினைத் தேடி ஒரு இரவில் 6கிமீ வரை பயணம் செய்கிறது. நிலத்தில் வாழும் விலங்குகளில் டாஸ்மேனியன் டெவிலை அடுத்து இதனுடைய கடி சக்தி வாய்ந்தது.

 

சுகர் கிளைடர் (Sugar Glider)

சுகர் கிளைடர்
சுகர் கிளைடர்

 

ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இது மரத்தில் வாழும் மார்ச்சுபியல் விலங்காகும். இதனுடைய இறக்கைகள் மெல்லிய தோலால் ஆனது.

இரவில் இரைதேடும் இவ்விலங்கு, மகரந்தங்கள், மரக்கன்றுகள், தேனீக்கள், சிலந்திகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது.

பகலில் மரப்பொந்துகளில் ஓய்வெடுக்கிறது.

குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை பாதுகாக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், இது மற்ற சுகர் கிளைடர்களுடன் ஒன்றாக உறங்குகிறது.

இது செல்ல பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது.

 

டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள் பற்றி அறிந்து கொண்டீர்களா?.

இங்குதான் உலகின் முட்டையிட்டு பாலூட்டும் விலங்குகள், வயிற்றில் குட்டிகளை பாதுகாக்கும் மார்ச்சுபியல் விலங்குகள் உள்ளன.

இயற்கையைப் புரிந்து கொள்வோம்!

இயற்கையைப் பாதுகாப்போம்!

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.