தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் இறைவனான சொக்கநாதர் இராசேந்திரபாண்டியனின் படைவீரர்களுக்கு தண்ணீர்ப் பந்தல் வைத்து, தாகத்தைத் தீர்த்து சோழனின் பெரும்படைக்கு எதிராக வெற்றிபெறச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

சோழனின் மனமாற்றம், பாண்டியனுடனான சோழனின் போர், இறைவனார் பாண்டியனின் படைகளுக்கு தண்ணீர்தந்து வெற்றிபெறச் செய்தது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பந்தைந்தாவது படலமாக அமைந்துள்ளது. இது இதற்கு முந்தைய படலமான விடை இலச்சினை இட்ட படலத்தின் தொடர்ச்சியாகும்.

சோழனின் விருப்பம்

மதுரையில் சோமசுந்தரரின் அருளால் அங்கையற்கண்ணி அம்மை உடனறை சொக்கநாதரை வழிபட்டு காஞ்சி திரும்பினான் காடுவெட்டி சோழன்.

சொக்கநாதரையும், அங்கயற்கண்ணி அம்மையும் மீண்டும் வழிபட சோழன் விருப்பம் கொண்டான். ஆதலால் அவன் பாண்டியனுடன் நட்பு கொள்ள விருப்பம் கொண்டான்.

இராசேந்திர பாண்டியனுக்கு தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்களுடன் ஏராளமானவற்றை பரிசாகக் கொடுத்தனுப்பினான். ஏற்கனவே காடுவெட்டி மதுரை சொக்கநாதரை வழிபட்ட விதம், சோழன் சொக்கநாதரிடம் கொண்டிருந்த பேரரன்பு ஆகியவற்றை இராசேந்திர பாண்டியன் அறிந்திருந்தான்.

ஆதலால் அவன் காடிவெட்டியின் பரிசினை ஏற்றுக் கொண்டு அவனுக்கு முத்துமாலை உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை பதிலுக்கு கொடுத்து அனுப்பினான்.

இதனால் பாண்டிய மற்றும் சோழ நாடுகளுக்கு இடையில் நட்புறவு ஏற்பட்டது. இதனை மேலும் வலுவாக்கி சொக்கநாதரை உரிமையுடன் வழிபட சோழன் விரும்பினான்.

சோழனின் மகளை இராசேந்திர பாண்டியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதே அதற்கான வழி என்பதை சோழன் தீர்மானித்தான்.

தன்னுடைய விருப்பத்தை பாண்டியனுக்குத் தெரிவித்தான். இராசேந்திர பாண்டியனும் சோழனின் மகளை திருமணம் செய்ய சம்மதித்தான்.

சோழனின் மனமாற்றம்

இராசேந்திர பாண்டியனுக்கு அரசசிங்கன் என்றொரு தம்பி இருந்தான். அரசசிங்கனுக்கு இராச சிங்கன், இராச சிம்மன் என்ற பெயர்களும் உண்டு.

அரசசிங்கன் மிகவும் கொடியவன். சோழ இளவரசியை இராசேந்திர பாண்டியன் மணப்பதை அவன் விரும்பவில்லை. எவ்வாறேனும் சூழ்ச்சி செய்து சோழ இளவரசியை தான் மணந்து சோழ, பாண்டிய நாடுகளை தனதாக்கிக் கொள்ள விருப்பம் கொண்டான்.

ஆதலால் இராசேந்திர பாண்டியனுக்குத் தெரியாமல் அரசசிங்கன் காஞ்சியை நோக்கிப் புறப்பட்டான். தன்னுடைய வருகையை காடுவெட்டிக்கு ஏற்கனவே அறிவிக்கச் செய்தான்.

மணமகனின் வீட்டிலிருந்து வரும் விருந்தினரை வரவேற்க காடுவெட்டி தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான்.

இதில் மகிழ்ந்த அரசசிங்கன் காடுவெட்டியிடம் “என்னுடைய அண்ணன் உங்களின் மகளை மணந்தாலும் உங்களிடம் இணக்கமாக நடந்து கொள்ள மாட்டார். நான் அவ்வாறு இல்லை. உங்களுடைய மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுத்தால் நான் உங்களின் விருப்பப்படி நடந்து கொள்வேன்” என்று நயவஞ்சகமாகப் பேசினான்.

காடுவெட்டியும் ‘சோழன் வலிந்து பெண்ணைக் கொடுத்தான் என்பதைவிட பாண்டியன் விரும்பி சோழ இளவரசியை மணம் முடித்தான்’ என்ற சொல்லே நமக்கு புகழாகும். ஆதலால் நாம் நம் பெண்ணை அரசசிங்கனுக்கு மணம் முடிப்போம் என்று மனம் மாறினான்.

சோழ பாண்டிய போர்

அரசசிங்கனுக்கு தனது மகளை மணம்முடித்தான் காடுவெட்டிய சோழன். பின்னர் இராசேந்திர பாண்டியனுக்கு ஓலை ஒன்றினை அனுப்பினான்.

அதில் எனது மகளை அரசசிங்கனுக்கு மணம் முடித்து விட்டேன். ஆதலால் நீ பாண்டிய நாட்டை அரசசிங்கனிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் சோழபடை உன் நாட்டின்மீது போர் தொடுக்கும். பின் போரில் வெற்றி பெற்று அரசசிங்கனை பாண்டிய நாட்டின் அரசனாக்கி விடுவேன் என்று எழுதி இருந்தான்.

மதுரைக்கு மிகஅருகில் சோழப்படை பாண்டியனின் வருகைக்காக காத்திருந்தது.

ஓலையை படித்தபின் இராசேந்திர பாண்டியன் திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரிடம் “எம்பெருமானே, நள்ளிரவில் தனியனாய் உன்னை வழிபட்ட உன் பக்தனாகிய காடுவெட்டிய சோழன், இப்போது எனக்கு விரோதமாக படையெடுத்து வந்துள்ளான். அன்று அவனுக்கு துணையாக இருந்த தாங்கள் இன்று அவனுடைய செயலுக்கும் துணைபுரிவீர்களா?” என்று மனம் வருந்திக் கேட்டான்.

அப்போது “பாண்டியனே, நீ கலங்க வேண்டாம். உன்னுடைய சிறிய படையுடன் நாளை சோழனை எதிர்கொள்வாய். வெற்றியை உமதாக்குவோம்” என்று தெய்வாக்கு வானில் கேட்டது.

இறைவனாரின் தெய்வாக்கினைக் கேட்டதும் இராசேந்திரன் அரண்மனை திரும்பி மறுநாள் சோழனுடனான போருக்கு ஆயத்தமானான்.

இறைநம்பிக்கையில் சோழனின் பெரும்படையை எதிர்த்தான் இராசேந்திர பாண்டியன். போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இறைவனார் கடும் வெப்பத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தினார்.

சோழ பாண்டிய படைவீரர்கள் தாகத்தினால் களைப்படைந்தனர். நிழலைத் தேடத் தொடங்கினர் இருபடை வீரர்களும். அப்போது பாண்டியனின் படைக்கு இடையில் இறைவனார் சிவனடியார் வேடம் தாங்கி தண்ணீர்ப் பந்தல் வைத்தார்.

பாண்டியனின் படைவீரர்களுக்கு தண்ணீரை வழங்கினார். இறைவனார் அளித்த நீரினை உண்ட பாண்டியப்படைவீரர்கள் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் சோழப்படையை எதிர்த்து போரிட்டு எளிதில் வென்றனர். காடுவெட்டிய சோழனும், அரசசிங்கனும் கைது செய்யப்பட்டனர்.

இராசேந்திர பாண்டியன் அவர்களை மன்னித்து விடுதலை செய்தான். காடுவெட்டிய சோழனை மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பினான். இராசேந்திர பாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்தான்.

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் கூறும் கருத்து

தன்னுடைய பக்தனாக இருந்தாலும் நேர்வழியில் செல்லாதிருந்தால் இறைவன் அவர்களைக் காப்பாற்ற மாட்டார்.

துரோகிகளுக்கு தண்ணீர்கூட இல்லாமல் இறைவனார் செய்து விடுவார். ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.

-வ.முனீஸ்வரன்

முந்தைய படலம் விடை இலச்சினை இட்ட படலம்

அடுத்த படலம் இரசவாதம் செய்த படலம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.