இணைய இதழ் பற்றித் தெரிந்து கொள்வோம்

இணைய இதழ் என்பது இணையத்தில் வெளிவரும் இதழ் ஆகும். அது இணையத்தில் மட்டும் வெளியாகும் இதழாக‌ இருக்கலாம் அல்லது இணையம் மற்றும் அச்சில் வெளியாகும் இதழாக‌வும் இருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக தொழில் நுட்பம் நாளும் பெருகி வருகிறது. அரசு அலுவலகச் செயல்களிலிருந்து நமது அன்றாடச் செயல்கள் வரை இணையம் மூலமே பெரும்பாலானவை நடைபெறுகின்றன.

சாதாரண மக்களும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை இலகுவாக பயன்படுத்துகின்றனர். அதனால் இதழ்களும் இன்றைக்கு இணையத்தின் மூலம் அவர்களைச் சென்று அடைவதற்கு எளிதாக உள்ளது.

வருங்காலத்தில் அச்சு இதழை விட இணைய இதழ் அதிகம் வாசிக்கப்படுவதாக‌ இருக்கலாம்.

சில அச்சு இதழ்களும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.  ப‌ல இதழ்கள் இணையத்தில் மட்டும் வெளியிடப்படுகின்றன.

இணையத்தில் மட்டும் வெளியிடப்படும் சில இதழ்கள் ஏதேனும் குறிப்பிட்ட தலைப்புகளை மையப்படுத்தி வெளியிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சமையல், அரசியல், ஆன்மீகம், ஜோதிடம், இலக்கியம் ஆகியவற்றைக் கூறலாம்.

இணைய இதழ்கள் பொதுவாக வார இதழாகவும், மாத இதழாகவும், நாளிதழாகவும் வெளியாகின்றன. சில இதழ்கள் பல மொழிகளிலும் வெளிவருகின்றன.

இன்றைக்கு உலக அளவில் இணையத்தில் தமிழ்மொழி பெரும்பாலோரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. அதனால் தமிழில் வெளியாகும் இணைய இதழ்களும் அதிகமாகவே உள்ளன.

இணைய இதழ் சிறப்புக்கள்

இதழ்கள் இணையத்தில் வெளியாகும் போது எழுத்து வடிவிலும், ஒலி மற்றும் ஒளி வடிவிலும், காணொளியாகவும் வெளிவருவது இதன் சிறப்பு அம்சமாகும்.

இவ்விதழ்களை உலகில் எவ்விடத்தில் இருந்தும் இணையத்தின் மூலம் காணலாம். இதனால் உலகெங்கும் படைப்பாளியின் படைப்புகள் பரவுகின்றன.

இவ்விதழ்களை ஒரே நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் படிக்கலாம்.

இவ்விதழ்களைச் சேமித்து வைப்பதற்கு என்று தனி இடம் தேவைப்படுவதில்லை.

இவ்விதழ்களில் நமக்கு தேவையானவற்றை எளிதில் தேடி கண்டுபிடிக்க முடிகிறது.

இவ்விதழ்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்பினை எளிதில் திரட்டலாம்.

இவ்விதழ்கள் மூலம் செய்திகள், கருத்துகள் ஆகியவை படிப்பவர்களுக்கு காலதாமதமின்றி கிடைக்கின்றன.

இவ்விதழ்கள் உலகெங்கிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை (மொழி, மதம்) ஒன்றிணைக்கின்றன.

இணைய இதழின் சவால்கள்

இணைய இதழ் மூலம் வருமானம் ஈட்டுவது என்பது கடினமான ஒன்று. எனவே சில இதழ்கள் மட்டுமே தொய்வின்றி தொடர்ந்து வெளிவருகின்றன.

பெரும்பாலான இணைய இதழ்களில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரே மாதிரியான கருத்துகளே வெளியாகின்றன. இது வாசகர்களுக்கு சலிப்பை உண்டு பண்ணி விடுகின்றன.

இணைய இதழை ஆரம்பிப்பது எளிது ஆனால் தொடர்ந்து நடத்துவது கடினம்.

இதழ் ஆரம்பிக்கும்போதே நாம் மாத இதழாகக் கொண்டு வர விரும்புகிறோமா இல்லை வார இதழாகக் கொண்டு வர விரும்புகிறோமா என முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு இதழுக்கும் தேவையான படைப்புக்களை உரிய நேரத்தில் தயார் செய்து பதிப்பிக்க வேண்டும்.

தற்போது இணைய இதழ்களை வெளியிடுவதற்கென்று வேட்பிரஸ் போன்ற மென் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

நன்கு திட்டமிட்ட்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து இதழ்களை வெளிக்கொணர வேண்டும். அப்படி செய்தால் அந்த இதழுக்கென்று ஒரு வாசகர் வட்டம் உருவாகும்; பின் வெற்றி சாத்தியமாகும்.

இனிது இணைய இதழ்

இனிது ஒரு பல்சுவை இதழ். இது சமூகம், முன்னேற்றம், உடல்நலம், உணவு, பயணம், சுற்றுச்சூழல், இலக்கியம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றைப் பற்றி பேசும் இதழ்.

இவ்விதழில் மேற்காணும் தலைப்பில் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மேலும் இவ்விதழை கணினி, ஆன்ராய்டு கைபேசி, ஆன்ராய்டு டேப்ல‌ட் ஆகிய நவீன கருவிகளிலும் காணலாம்.

இணைய இதழாக 29.09.2014 அன்று இனிது தனது இனிதான பயணத்தைத் தொடங்கியது. அன்றாட வாழ்விற்கு தேவையான தகவல்களைக் கொடுப்பதோடு வாழ்வில் உத்வேகம், மகழ்ச்சி தருவதாக விளங்குகிறது.

மிகச்சிறந்த இணைய இதழாகத் திகழ்வதே இனிதுவின் நோக்கம் ஆகும். நல்ல படைப்பாளிகளின் தரமான‌ படைப்புகளை பதிப்பிக்கத் தயாராக உள்ளது.

நாளும் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் எதிர்காலத்தில் இணைய இதழ்கள் வேகமாகவே வளரும்.

ஆகவே ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது இவ்விதழ்களின் கடமையாகும்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.