தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழியை பாட்டி ஒருவர் குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது கூறுவதை சிறுத்தைக்குட்டி சிங்காரம் மறைந்திருந்து கேட்டது.

பழமொழியைப் பற்றி வேறு ஏதேனும் தகவல்களைக் கூறுகிறாரா? என்று கூர்ந்து கவனிக்கலானது. அப்போது கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் “பாட்டி முதலில் பழமொழியைப் பற்றி விளக்கிக் கூறுங்கள். பிறகு கதையைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கூறினான்.

அதனைக் கேட்ட பாட்டி “சரி முதலில் பழமொழிக்கான விளக்கத்தைக் கூறுகிறேன். பிறகு கதையை கூறுகிறேன்.” என்று கூறினார். இதனைக் கேட்டதும் சிறுத்தைக்குட்டி சிங்காரம் மனதிற்குள் மகிழ்ச்சிக் கொண்டு கூட்டத்தைக் கூர்ந்து கவனிக்கலானது.

பாட்டி “குழந்தைகளே, மிகப்பெரிய ஆபத்து உருவாகி அதிலிருந்து தப்பும் போது இந்தப் பழமொழியை நாம் கூறுவதுண்டு.

இப்பழமொழி உருவாக காரணமாக அமைந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.

பழமொழிக்கான கதை

மகாபாரத யுத்தத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் ‘மாவீரன்’ ‘கொடையாளி’ என்று எல்லாம் போற்றப்படும் கர்ணன் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.

அந்த கர்ணனிடம் நாகாஸ்திரம் ஒன்று இருந்தது. கர்ணனின் முக்கிய எதிரியான அர்ச்சுனனால் பாதிக்கப்பட்ட ஒரு நாகம் நாகஸ்திரமாக மாறி கர்ணனிடம் தங்கியிருந்தது.

பாரதப் போருக்கு முன்னதாக குந்தி தேவி கர்ணனை சந்தித்து அர்ச்சுனன் மீது ஒரு தடவைக்கு மேல் நாகாஸ்திரத்தை விடக்கூடாது என்றும், அர்ச்சுனனை தவிர பிறருடன் போர் புரியக் கூடாது என்றும் வரம் வாங்கியிருந்தார்.

போர்களத்தில் அர்ச்சுனனும் கர்ணனும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டனர். கர்ணன் தனது நாகாஸ்திரத்தை எடுத்தான். அர்ச்சுனனின் தலையைக் குறிவைத்து அம்பை செலுத்தினான்.

அப்போது தான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அர்ச்சுனின் தேரோட்டியாக இருந்த கண்ணன் தேரை தன் காலால் பூமியுள் ஒரு அடி அழுத்தினார்.

அர்ச்சுனனின் தலையை நோக்கி வந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் தலைப்பாகையை தாக்கிவிட்டு சென்றது. இதனால் அர்ச்சுனனின் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது.

இந்த நிகழ்ச்சியிலிருந்து தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழி தோன்றியது. மேலும் இப்பழமொழியை ‘தலை தப்பியது தம்பிரான் (கண்ணபிரான்) புண்ணியம்’ என்றும் கூறுவர்.” என்று கூறினார்.

இதனைக் கேட்ட சிறுத்தைக்குட்டி சிங்காரம் ‘எப்படியாவது இன்றைக்கான பழமொழியை நாம் சொல்லிவிட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் காட்டை நோக்கி ஓடியது.

வட்டப்பாறையில் எல்லோரும் காக்கை கருங்காலனின் வருகைக்காக காத்திருந்தனர். சிறுத்தைக்குட்டி சிங்காரமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது.

காக்கை கருங்காலன் மெல்ல நடந்து வட்டப்பாறையினை வந்தடைந்தது. எல்லோரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே “என் அருமைக் குஞ்சிகளே, குட்டிகளே. இன்றைக்கு உங்களில் யார் பழமொழி பற்றிக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டது.

அதனைக் கேட்டதும் சிறுத்தைக்குட்டி சிங்காரம் “தாத்தா நான் இன்றைக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழியைப் பற்றிக் கூறுகிறேன்” என்று தான் கேட்டது முழுவதையும் தெளிவாகக் கூறியது.

காக்கை கருங்காலனும் “குழந்தைகளே. ஒரே பொருளினைக் கொண்ட இரு பழமொழிகளைக் கூறிய சிறுத்தைக்குட்டி சிங்காரத்தை உங்களின் சார்பாக பாராட்டுகிறேன்.

சரி நாளை மற்றொரு பழமொழியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இப்பொழுது எல்லோரும் செல்லுங்கள்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.