தாதா சாகேப் பால்கே

தாதா சாகேப் பால்கே என்றவுடன் பொதுவாக எல்லோருக்கும் சினிமா விருதுதான் ஞாபகத்திற்கு வரும்.

தாதா சாகேப் பால்கே தான் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இந்திய சினிமாவை உலக அளவில் பிரபலப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவர் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைகதை ஆசிரியர் என பன்முகத் தன்மை உடையவராக விளங்கியவர்.

இவர் திரைபடத்துறையில் மொத்தம் 19 ஆண்டுகள் கோலோச்சி 95 திரைப்படங்களையும், 26 குறும்படங்களையும் உருவாக்கியுள்ளார்.

திரைப்படத்துறையில் சாகேப்பின் பங்களிப்பினைப் போற்றும் விதமாக இந்திய அரசு 1969 முதல் தாதா சாகேப் பால்கே விருதினை இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் பங்களிப்பினை புரிந்தவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.

தாதா சாகேப் பால்கே அகாடமி 2001 முதல் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு கௌரவ விருதினை வழங்கி சிறப்பிக்கிறது.

 

பிறப்பு மற்றும் இளமைக் காலம்

தாதா சாகேப் 30 ஏப்ரல் 1870-ல் நாசிக் அருகில் உள்ள திரியம்பகேஸ்வரர் என்ற இடத்தில் மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பதாகும்.

இவருடைய தந்தையார் சமஸ்கிருத அறிஞர் ஆவார். இவர் சிறு வயதிலேயே கலை மற்றும் இயற்கையில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கினார்.

பால்கே 1885-ல் மும்பையில் உள்ள ஜே.ஜே.கலைப் பள்ளியில் சேர்ந்தார். பின் 1890-ல் கலா பவன் சென்று வதோராவில் உள்ள பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக் கழத்தில் சேர்ந்து சிற்பம், பொறியியல், வரைதல், ஓவியம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மிக நுட்பமாகக் கற்றார்.

 

பால்கேவின் சொந்த வாழ்க்கை

பால்கே 1885-ல் தனது முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டார். 1900-ல் முதல் மனைவி எதிர்பாராமல் இறந்ததால் சரஸ்வதிபாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சரஸ்வதிபாய் பால்கேயின் முயற்சிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பால்கேயின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

 

பால்கேவின் ஆரம்பகாலப் பணிகள்

பால்கே முதலில் கோத்ராவில் புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். புளோபானிக் பிளேக் நோயால் பால்கேயின் முதல் மனைவி மற்றும் குழந்தை இறந்தவுடன் அவர் புகைப்படத் தொழிலை கைவிட்டார்.

அதன்பின் அவர் இந்திய தொல்பொருள் நிறுவனத்தில் வரைவாளராகப் பணிபுரிந்தார். வரைவாளர் பணியில் இருந்த கட்டுப்பாடுகளால் அமைதியில்லாமல் பால்கே வேலையை விட்டுவிட்டு சொந்தமாக அச்சிடும் தொழிலைத் தொடங்கினார்.

பால்கே கல் அச்சுக்கலை மற்றும் எண்ணெய் வண்ண அச்சுப்படத்தில் திறமை பெற்றிருந்ததால் பிரபல ஓவியரான ராஜா ரவி வர்மாவிடம் வண்ணம் தீட்டுபவராக பணிபுரிந்தார்.

பின்னர் பால்கே சொந்தமாக அச்சகம் ஆரம்பித்து நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் பற்றி அறிய ஜெர்மனிக்கு சென்றார்.

 

திரைப்படத்துறையில் பால்கே

அச்சகத் தொழிலில் தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோது அத்தொழிலை விட்டு வெளியேறி பால்கே திரைப்படத்துறைக்குள் நுழைந்தார்.

இதற்கு ‘தி லைஃப் ஆஃப் தி கிரிஸ்ட்’ என்ற ஊமைப்படம் முக்கிய காரணம் ஆகும்.

இப்படத்தைப் பார்த்த பின் திரையில் இந்தியக் கடவுள்களைக் கற்பனையாகக் கூறும் நகரும் படங்களின் மீது தனது கவனத்தைச் செலுத்தினார். இதுவே இவரது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

1912-ல் இவர் தனது முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை படமாக்கினார். பின்னர் இப்படம் 3 மே 1913-ல் மும்பை காரநேசன் சினிமாவில் திரையிடப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பால்கே பெற்றார்.

தனது முதல் திரைப்படத்தில் கிடைத்த வெற்றியின் காரணமாக பல ஊமைப்படங்கள், ஆவணப்படங்கள், கல்வி படங்கள், நகைச்சுவை படங்கள் ஆகியவற்றை படைத்தார்.

(1913) மோகினி பஸ்மாசுர், (1914) சாவித்திரி சத்தியவான், (1917) இலங்கா தகனம், (1918) ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா, (1919) கலிய மார்டான் ஆகியவை பால்கே படைப்புகளுக்கு புகழ் சேர்ப்பவை.

பால்கேயின் படங்கள் அனைத்தும் நிதி நிலைப்புத் தன்மைக் கொண்டதால், பல்வேறு வர்த்தகர்களை ஈர்த்ததோடு மட்டுமில்லாமல், அவருடன் இணைந்து பணிபுரியவும் வழிவகுத்தது.

 

ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனம்

பால்கே ஐந்து வர்த்தகர்களுடன் இணைந்து தனது முதல் பட நிர்வணமான ஹிந்துஸ்தான் பிலிம்ஸை மும்பையில் துவக்கினார். இந்நிறுவனத்தின் நிதிப்பொறுப்பினை பங்குதாரர்கள் கவனித்துக் கொள்ள பால்கே படைப்பம்சத்தைக் கவனித்துக் கொண்டார்.

அதில் வெற்றி கண்ட பால்கே மாடல் ஸ்டுடியோ ஒன்றினையும் நிறுவி அதில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சி அளித்தார்.

ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1920-ல் ஹிந்துஸ்தான் நிறுவனத்திலிருந்த ராஜினாமா செய்து திரைப்படத்துறையிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

அதனபின் தன்னுடைய தீராத கலையார்வத்தின் காரணமாக ‘ரங்க்பூமி’ என்ற நாடகத்தை எழுதினார். இந்நாடகம் அவருக்கு பெரும் புகழினை ஈட்டித்தந்தது.

பால்கேயின் படைப்பம்சம் இல்லாமல் ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருளிழப்பைச் சந்தித்தது. இதனால் ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அந்நிறுவனத்தில் இணைந்தார். ஒரு சில படங்களை இயக்கியபின் அந்நிறுவனத்தில் இருந்து பால்கே வெளியேறினார்.

 

பால்கேயின் இறுதிக்காலம்

பால்கே பேசும் படங்களில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை சமாளிக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

1932-ல் வெளியிடப்பட்ட ‘சேதுபந்தன்’ என்ற திரைப்படமே அவரது கடைசி பேசும் படம் ஆகும். இப்படம் பின்னர் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

1936லிருந்து 1938 வரை அவர் அவரது கடைசிப் படமான ‘கங்காவதாரன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். பின் மும்பையிலிருந்து நாசிக் சென்று வசித்த பால்கே 1944-ல் பிப்ரவரி 16-ம் தேதி தனது 74வது வயதில் இயற்கை எய்தினார்.

இந்திய திரைபடத்துறையில் பால்கேயின் பெரும் பங்களிப்பினை போற்றும் விதமாக இந்திய அரசு அவரது பெயரால் இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு விருதினை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.

இவ்விருதினைப் பெறுவது பெரும் சாதனையாக இந்தியாவில் கருதப்படுகிறது. திரைப்படத் துறையில் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் ஆர்வத்தின் காரணமாக இந்திய திரைப்படங்களை உலகில் மிளிரச் செய்த பால்கேயைப் போற்றுவோம்.

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.