தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

தேங்காய் பால் கொழுக்கட்டை மாலை நேரத்தில் உண்பதற்கு ஏற்ற சிற்றுண்டி ஆகும். இதனை சுவையாக எளிய முறையில் வீட்டில் செய்து அசத்தலாம்.

மழை காலங்களில் இதனை இதமான சூட்டில் உண்ண சளித் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.

இனி தேங்காய்ப்பால் கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 200 கிராம்

கருப்பட்டி – 200 கிராம்

தேங்காய் – ½ மூடி (நடுத்தர அளவு)

பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

சீனி – 1 ஸ்பூன்

உப்பு – மிகவும் சிறிதளவு

ஏலக்காய் – ஒரு எண்ணம்

பாசிப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் கொழுக்கட்டை செய்முறை

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

ஏலக்காயைத் தட்டிக் கொள்ளவும்.

பாசிப் பருப்பை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

சிறிதளவு தண்ணீரில் மசித்த பாசிப்பருப்பைச் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

 

மசித்த பாசிப்பருப்பு
மசித்த பாசிப்பருப்பு

 

கருப்பட்டியை பொடியாக தட்டிக் கொள்ளவும்.

 

பொடித்த கருப்பட்டி
பொடித்த கருப்பட்டி

 

1 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவினை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

 

கரைத்த பச்சரிசி மாவு
கரைத்த பச்சரிசி மாவு

 

பச்சரிசி மாவினை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் துருவல், சீனி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு படத்தில் காட்டியபடி திரட்டிக் கொள்ளவும்.

 

திரட்டிய மாவு
திரட்டிய மாவு

 

பின்னர் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

 

உருட்டப்பட்ட மாவு
உருட்டப்பட்ட மாவு

 

தேங்காயுடன் தேவையான தண்ணீர், ஏலக்காய் சேர்த்து அரைத்து முதல் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

 

முதல் தேங்காய் பால்
முதல் தேங்காய் பால்

 

அவ்வாறே தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டாம், மூன்றாம் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். 

 

இரண்டாம், மூன்றாம் தேங்காய் பால்
இரண்டாம், மூன்றாம் தேங்காய் பால்

 

வாயகன்ற பாத்திரத்தில் இரண்டாம், மூன்றாம் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

பின்னர் அதனுடன் திரட்டிய உருண்டைகளைச் சேர்க்கவும்.

 

உருண்டைகள் கொதிக்கும் போது
உருண்டைகள் கொதிக்கும் போது

 

கலவை கொதித்ததும் கிளறி விட்டு, அடுப்பினை மிதமான தீயில் வைத்து அதனுடன் கரைத்த பச்சரிசி மாவினைச் சேர்த்து கொதிக்க விடவும்.

 

கரைத்த பச்சரிசி மாவினைச் சேர்த்ததும்
கரைத்த பச்சரிசி மாவினைச் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் வேக வைத்து மசித்த பாசிப்பருப்பினைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

பாசிப்பருப்பினைச் சேர்த்ததும்
பாசிப்பருப்பினைச் சேர்த்ததும்

 

ஒரு நிமிடம் கழித்து தட்டிய கருப்பட்டியை சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.

 

கருப்பட்டியைச் சேர்த்ததும்
கருப்பட்டியைச் சேர்த்ததும்

 

கருப்பட்டி கரைந்து நிறம் மாறியதும் அடுப்பினை அணைத்து விட்டு முதல் தேங்காய் பாலைச் சேர்த்து கிளறவும்.

 

முதல் தேங்காய் பால் சேர்த்ததும்
முதல் தேங்காய் பால் சேர்த்ததும்

 

சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.

 

சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை
சுவையான தேங்காய்ப் பால் கொழுக்கட்டை

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சுக்கினை சிறிதளவு தட்டி தேங்காய்ப்பால் கொதிக்கும் போது சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.