நமது கிராமங்கள்

இந்தியா பல ஆயிரம் கிராமங்கள் உள்ள நாடு. நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறினார்.

அவருடைய திட்டங்கள் யாவும் கிராமத்தை மையப்படுத்தியதாகவே இருந்தன. அவருடைய கிராமியப் பொருளாதாரக் கொள்கை உலகப் பொருளாதார அறிஞர்களால் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது.

நமது அரசுகள் இவ்வளவு காலமும் கிராமங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்கின்றன. ஆனால், கிராம மக்கள் இன்றும் சரியான சாலைவசதி, சுத்தமான குடிநீர் வசதி, தரமான கல்வி வசதி  மற்றும் போதிய மருத்துவ வசதி இன்றித் தவிக்கிறார்கள்.

அவர்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். விவசாயம் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. ஆகவே தம் பிள்ளைகளை நகரங்களை நோக்கிப் பிழைப்பிற்காக அனுப்புகிறார்கள்; பலர் நகரத்திற்கே குடிபெயர்ந்து விட்டார்கள்.

இருந்தாலும் இன்றும் கிராமத்து மக்கள் நமது பண்டைய பெருமையை அவர்களின் நடை உடை பாவனைகளால் பாதுகாத்து வருகின்றனர்.

கல்வி அறிவில் அவர்கள் பின்தங்கி இருப்பினும் ஒழுக்கத்திலும் நேர்மையிலும் படித்தவர்களைவிட உயர்ந்திருக்கிறார்கள்.

கற்றவர்கள் பண்பாளர்கள் என்பது பொதுநிலை. ஆனால், கல்லாதவர்களோ இன்றும் பண்பாடு உணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

அனைவரிடமும் அன்பு செலுத்துவதில் உயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வளர்க்கும் ஆடு மாடு கோழி நாய்கள் மீது கூட மிகுந்த அன்பு செலுத்துவதைக் கூர்ந்து கவனித்தால் இது தெரியவரும்.

அவர்கள் பண்புமயமானவர்கள் மட்டுமல்ல; அன்புமயமானவர்களாகவும் இருக்கிறார்கள். எனினும், கல்வி இன்மையால், நவீன அறிவியல் யுகத்தின் நல்விளைவுகளை அவர்கள் அனுபவிக்காது இருக்கிறார்கள்.

நம் கிராம மக்களிடம் காணப்படும் பல விந்தையான நிகழ்வுகள், நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

கதவு இல்லாத வீடுகள்

இராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே பாப்பணம் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கடந்த மூன்று தலை முறையாகக் கதவுகளே கிடையாது.

மீறிக் கதவுகளுடன் வீடு கட்டப்பட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்குச் சாமி குத்தம் ஏற்பட்டு விடுமாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கதவு வைத்து வீடு கட்டினாராம்; அவருடைய மாடுகள் இரண்டும் இறந்து போய்விட்டனவாம். அது சாமி குத்தத்தால் வந்த கேடு என்று, அவ்வூர் மக்கள் இன்றும் நம்புகின்றார்கள். அதனால் கதவுகள் இல்லாமலேயே புதிய வீடுகளைக் கட்டுகிறார்கள்.

வெளியூர் போக வேண்டுமானால் வாசலுக்கு மேலேயுள்ள சிறு சன்னலில் நூலைக் கட்டி அதில் சேலைத் துணியை மறைப்பாகத் தொங்க விடுவார்கள். அது காற்றில் பறக்காமல் இருக்க, வரிசையாக நாலைந்து செங்கற்களைத் தூக்கி வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். நாய், கோழி போன்றவை எதுவும் உள்ளே போகாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

இந்த ஊர்வாசியான மொட்டையன் என்பவர் 1952இல் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் மண் சுவர், கீற்றுக் குடிசை அதன்பின் பனை ஓலைக் குடிசையாக மாறிப் பின்னர் ஓட்டுவீடாக மாற்றம் வந்ததாம்.

பகல் நேரத்திலும் சரி இரவு நேரத்திலும் சரி பாப்பணம் கிராமத்தில் இதுவரை எந்தவொரு பொருளும் களவு போனது இல்லையாம் – என்ன ஒரு நேர்மை!

ஊர் எல்லையில் காவல் தெய்வமான முனியப்பசாமிக்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கோவிலிலும் வாசலோ நிலையோ கதவோ ஏதும் கிடையாது.

அந்த முனியசாமிதான் ஊரில் களவு போகாமல் பாதுகாக்கும் காவல் தெய்வம். இரண்டு ஏக்கர் பரப்பளவில் சுற்றுச் சுவருடன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் அத்தனை வாசல்களும் கதவுகளின்றித் திறந்தே இருக்கிறது – என்ன ஒரு பக்தி? பொதுவாக நமது கிராம மக்களின் பக்தி நம்மை வியப்பிற்குள் ஆழ்த்தி விடும்.

அடைக்கலம் காத்த ஐயனார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவிளிப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு ஒரு கோவில். அந்தக் கோவிலில் அடைக்கலம் காத்த ஐயனார் வீற்றிருக்கிறார். அவர் அடைக்கலமாக வரும் பக்தர்களைக் கைவிட மாட்டார்; காத்துக் கொள்வார் என்பதால், அவருக்கு அடைக்கலம் காத்த ஐயனார் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இக்கோவிலில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் திருவிழா நடைபெறும். திருவிழாவன்று ஐம்பது, அறுபது குதிரைகளைத் தூக்கிக் கொண்டு, ஏராளமான கிராம மக்கள் ஊர்வலமாகச் செல்வதுதான் ஐயனார் கோவிலின் பொதுவான நடைமுறை.

ஆனால், இந்தக் கோவில் விழாவில் கலந்து கொள்பவர்கள் நெற்றியில் குங்குமத்திற்குப் பதிலாகத் திருநீறு மட்டும் பூசுவார்கள்; பெண்கள் எவரும் தலையில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது என்பது காலங் காலமாகத் தொடரும் மரபு.

மரத்திற்குக் கும்பாபிஷேகம்

கிராமத்துத் திருவிழா என்றபோது, மரத்திற்குக் கும்பாபிஷேகம் செய்யும் கிராமம் நினைவுக்கு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியநேந்தலில் அமைந்துள்ள பெயரில்லா மரம் நூறாண்டுப் பழமை வாய்ந்தது.

அம்மரம் சுமார் அரை ஏக்கர் பரப்பில் தரையோடு படர்ந்து காணப்படுகிறது. அம்மரத்தின் இலைகள் ஒவ்வொன்றும் கிளைக்குக் கிளை மாறுபட்டிருக்கிறது.

இ.நெருங்குளம், பூக்குளம், கீழப்பசைன், இளையநாயக்கன் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அம்மரத்தைப் பல தலைமுறைகளாக வழிபட்டு வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அவர்களின் வழிபாட்டு முறைகளால் கவரப்பட்டு, தங்கள் குறைகளை மரத்திடம் முறையிட்டு, பின்னர் அவை நிறைவேறியதும் அதற்கான நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர்.

குழந்தையின்மை, உடல்நிலைப் பாதிப்பு, ஆவி பயம் உள்ளிட்டவற்றிற்கு அம்மரத்தின் இலையை உண்டால் குணமாகும் என நம்புகின்றனர்.

அதனால் அம்மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சென்னை – மதுரை வாசிகளும் கூட வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

நம்முடைய கிராம மக்கள் தங்களுக்குத் தாங்களே சில விதிமுறைகளை வகுத்து அவ்விதிமுறைகளை வழுவாமல் கடைப்பிடித்தும் வருபவர்கள்.

தீபாவளி கொண்டாடாத கிராமம்

சிவகங்கை அருகில் சில ஊர்களில் சுமார் 55 ஆண்டுகளாகத் தீபாவளி கொண்டாடுவதே இல்லை.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சிக்குட்பட்ட ஏரியூர் கிராமத்தைச் சுற்றியுள்ள ஒப்பிலாள்பட்டி, தும்பைப் பட்டி, எருமைப் பட்டி, சத்திரப் பட்டி, இடைய பட்டி, கிலுகிலுப்பைப் பட்டி, கலிங்கப் பட்டி ஆகிய பத்துக் கிராமங்களும் மயில்ராயன் கோட்டைநாடு என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தலைமைக் கிராமமாகக் கட்டாணிப் பட்டிக் கிராமம் உள்ளது.

கடந்த 55 ஆண்டுகளாக இந்த 10 கிராமத்து மக்களும் ஒட்டு மொத்தமாகத் தீபாவளி கொண்டாடுவதில்லை என்ற கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயத்தை நம்பி வாழும் அப்பகுதி மக்கள் ஒரு காலத்ததில் பசி, பட்டினி, வறுமையால் வாடினர். அந்த நேரத்தில் வசதி படைத்தவர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி அப்பகுதி மக்கள் தீபாவளி கொண்டாடினர்.

பின்னர், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நெல் மூட்டைகளை ஈடாகக் கொடுத்துக் கடனை அடைத்தனர்.

அப்பொழுது பெரிய அம்பலக்காரர் எனப்படும் அவர்களின் தலைவர் பத்து கிராமத்தைக் கூட்டி ஊர்க் கூட்டம் நடத்தினார். தீபாவளி வரும் மாதங்களான அக்டோபர், நவம்பரில் விவசாயப் பணி நடைபெறும் என்பதால் தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தவிர்த்து விவசாயம் செய்து முன்னேற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தார். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை மதிக்கப்படுகிறது. அந்த ஊரில் புதுமணத் தம்பதிகள்கூடத் தலைத் தீபாவளி கொண்டாடுவதில்லை.

வெளியூரிலிருந்தும் கூட அன்றைய தினம் ஊருக்குள் எதையும் கொண்டுவரக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் பிறந்தவர்கள் வெளியூரில் வாழ்ந்தாலும், அவர்களும் கொண்டாடுவதில்லை. ஆனால், பொங்கல் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர் என்னே ஒரு சுய கட்டுப்பாடு!

திருமணத் தடை நீங்கியது

நம்முடைய மதுரை, சிவகங்கை மாவட்டமல்லாது இந்தியா, ஏன் உலகம் முழுவதும் கிராமத்தினர் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாட்டை விதித்து அதனை உயிரிலும் மேலாகக் காத்து வருகின்றனர். பல கிராமங்கள் சரியான சாலை வசதி கூட இல்லாமல் எல்லா வகையிலும் தனிமைப்பட்டுக் கிடக்கின்றன.

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு கிராமத்தில், திருமணம் நடப்பது என்பது கானல் நீராகவே இருந்தது. அந்தக் கிராமத்தில் ஐந்தாண்டுகளாகத் திருமணமே நடக்கவில்லை.

அப்படி என்ன அந்தக் கிராமத்தில் பிரச்சனை? அக்கிராமத்தில் அழகிய பெண்களைப் பார்க்க வரும் மாப்பிள்ளையும் அவர்கள் குடும்பத்தினரும் வருவதற்கு முறையான சாலை வசதி இல்லை என்பதுதான்.

கிராமத்திற்குச் செல்லச் சாலை வசதியில்லை; திருமண ஊர்வலம் நடத்த வழியில்லை என்று கூறி மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதில்லை. பல திருமணங்கள் சாலை வசதியில்லை என்பதினால், நின்று போயிருக்கின்றன.

இந்தப் பிரச்சனைகளைப் பல ஆண்டுக் காலமாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அரசும், அதிகாரிகளும், செவி சாய்க்கவில்லை.

அந்தக் கிராமத்தில் எதிர்காலத்தில் சந்ததியே இல்லாமல் போய்விடும் என ஊரார் பயந்தனர். அரசை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த கிராமத்துப் பெரியவர்கள். அந்தக் கிராம மக்களே சாலை வசதி ஏற்படுத்த முடிவு செய்து செயலில் இறங்கினர்.

கிராமத்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்று சேர்ந்தனர். சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விளைவு! இப்போது, இந்தக் கிராமத்திற்கு வழி கிடைத்து விட்டது. தன்கையே தனக்கு  உதவி! – வாழ்க காந்தியம்!

மாறாத கிராமத்துக் கலாச்சாரம்

கணினி மயமான நவீன காலத்தில் மேல் நாட்டார் பாணியில் நாம் நமது நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டோம். மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், மாறும் உலகில் மாறாமலிருக்கும் கிராமத்துக் கலாச்சாரம் இன்றும் ஆழமாகச் சில கிராமங்களில் வேரூன்றி உள்ளது.

இதற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டு தொட்டியனூர் என்னும் கிராமம்.அது தாரமங்கலத்திலிருந்து அருணாச்சல புதூர் வழியாகக் கோணக்காபாடிக் கிராமத்தில், யாருடனும் ஒட்டாமல் தனிப் பகுதியாக இருக்கிறது.

நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு வந்த தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அக்கிராமத்தில் குடியிருக்கிறார்கள். அந்தத் தொட்டியனூர் கிராமத்தின் தலைவரின் முன் அனுமதியின்றி, யாரும் ஊருக்குள் நுழைய முடியாது.

அக்கிராமம் முழவதும் வட்டமாகக் கட்டப்பட்டிருக்கும் ஓலை வீடுகள். அவர்களின் திருமணச் சடங்குகள் ஊர்த் திருவிழா மாதிரி நடக்கும். 10 ஜோடிகளாவது சேர்ந்த பின்னரே, கல்யாண ஏற்பாடுகள் நடக்கும். தங்கள் சமூகத்திற்குள்ளேயேதான் திருமணம் செய்து கொள்வார்கள்.

வயதிற்கு வந்தவுடன் பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும்: ஆண்களுக்கு வயதுக் கட்டுப்பாடு கிடையாது; ஆண் நான்கு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம். திருமணம் முடிவு செய்யப்பட்ட ஜோடிகளுக்குச் செவ்வாய்க் கிழமையில் மட்டுமே திருமணம் நடக்கும்; ஊர் கூடி விருந்து வைப்பார்கள்; விடிய விடியச் சடங்கு, பாடல் எனக் கோலாகலமாக இருக்கும்.

விவசாயத்தை நம்பியிருக்கும் அவர்கள் ஆடு மேய்க்கிறார்கள்; ஆண்கள் கிடைக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். காட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் அங்குள்ளவர்களிடம் தண்ணீர்கூட வாங்கிக் குடிப்பதில்லை; வெளியூருக்குச் செல்லும் போது கூடக் குழாயில் வரும் தண்ணீரைத்தான் குடிப்பார்கள்.

ஹோட்டலில் சாப்பிடுவது; சினிமா பார்ப்பது போன்ற பழக்கங்கள் சுத்தமாக இல்லாதிருந்தன. ஆனால், ஆண்களுக்கு மட்டும் சில சலுகைகள் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு வயதுக்கு வரும்வரைதான் படிக்க அனுமதி உண்டு. ஆண்களை மட்டும் உயர் படிப்பிற்கு அனுப்புகிறார்கள்; வயதுக்கு வந்த பெண்களை அனுப்புவதில்லை. அதன் பின்னர் சேலை, தாவணி, என உடை உடுத்தினாலும், ஜாக்கெட் போடக் கூடாது. ஆனால், செல்போன், டி.வி. பயன்படுத்துகிறார்கள்.

ஜாக்கெட் போடாமல் இருக்கும் அவர்கள், வழிவழியாக வந்த இந்தப் பழக்கத்தை மாற்ற நினைக்கவில்லை. ஆனால், சில ஊர்களில் உள்ள அவர்கள் ஜாதிக்காரர்கள் ஜாக்கெட் போட ஆரம்பித்திருக்கின்றனர். எனவே, அவர்களுடன் இவர்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லையாம்.

இவ்வாறான நடைமுறையில் பல, காலத்துக்கு ஒவ்வாத கட்டுப் பெட்டித் தனங்களாகத் தோன்றினாலும் நாகரிகத்தின் கொடூரத் தன்மைகளிலிருந்து கிராமங்கள் பாதுகாப்பாகவே இருந்துள்ளன.

இருப்பினும், கிராமங்கள் மெல்ல மெல்லத் தமது சுயத்தை இழந்து கொண்டிருப்பது வருத்தத்தையே தருகிறது. இந்தியாவின் இதயங்கள் சீரடைய வழியே இல்லையா?

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்