நீர் பற்றிய வினா – விடை

கிணற்று நீரை சேகரித்து வைக்கும் பொழுதோ (அ) கொதிக்க வைக்கும் பொழுதோ வெண்மை நிறத்தூள் படிகிறது இதுபற்றி?

நீரில் மிகுதியாக உள்ள பை-கார்பனேட், கால்சியம் கார்பனேட் என்ற உப்பு தூள் வடிவில் வெளிப்படுகிறது. இதனால் உடலுக்கு கெடுதல் ஏதும் இல்லை. வடிகட்டி பின் உபயோகிக்கலாம்.

 

 வீட்டின் மேல் நிலைத் தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது ஏன்?

காற்று, சூரிய ஒளி இருக்கும் பொழுது, பாசி ஏற்படுகிறது. இதற்கு மேல்நிலை தொட்டிகளை நன்கு மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர் சேகரிக்கும் தொட்டிகளையும் நன்கு மூடி பாதுகாக்கவும், தகுந்த அளவு பிளிச்சிங் பவுடரும் சேர்க்கலாம்.

(100 லிட்டர் நீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளிச்சிங் பவுடர் 1 கிராம்).

 

சிலநேரங்களில் சமைக்கும் பொழுது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறது ஏன்?

நீரில் காரத்தன்மை (Alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

 
நீரினை பிடித்து சேகரித்து வைத்தால், மஞ்சள் நிறமாக இருக்கிறது. துணிமணிகளில் காவி அல்லது பழுப்பு கறை ஏற்படுதல் எதனால்?

இது இரும்பு (Iron) உப்பு இருந்தால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி பயனடையலாம்.

 

கிணற்று நீரை படிகாரம் போட்டு சுத்தம் செய்யலாமா?

கலங்கலான நீரை மட்டுமே படிகாரம் போட்டு சுத்திகரிக்கலாம். எனினும் படிகாரத்தின் அளவு அதிகரித்தால் சுத்திகரிக்கப்பட்ட நீரில், அலுமினியத்தின் அளவு அதிகமாக இருக்கும். இது உடல் நலனுக்கு கெடுதல் ஆகும்.

 

கிணற்று நீரில் உப்புத் தன்மை நீக்க தேத்தங் கொட்டையை அல்லது நெல்லி மரக்கட்டையை பயன்படுத்தலாமா?

தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவை உடையது. துவர்ப்பும், உப்பு சுவையும் இருக்கும் பொழுது நீர், உப்பு குறைந்ததாக உணரப்படலாம். எனினும் நீரில் கரைந்துள்ள பொருள்களின் அளவில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

 

பல் காவி நிறமாகிறது, ஏன்?

குடிக்கும் நீரில் புளோரைடு கலந்து இருப்பதால் ஏற்படும். புளோரைடு ஒரு லிட்டரில் 1.5 மி.கி. அளவிற்கு அதிகமாக கலந்த நீரை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

 

புளோரைடு அளவுகோல் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?

குறைந்த அளவு புளோரைடு (0.5 – 1.0 மி.கி. ஃலி) பற்பாதுகாப்பிற்கு மிக அவசியம். இது பற்சொத்தையையும் பல்லில் துர்நாற்றத்தையும் தவிர்க்க உதவுகிறது. 1.5 மி.கி.ஃலி என்ற அளவைவிட அதிகமாக உள்ள புளோரைடு உள்ள நீரைப் பருகினால் பல் காவி நிறமாகும். எலும்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டு முடக்குவாதம் போன்ற செயலற்ற நிலைக்கு தள்ளப்படும். புளோரஸிஸ் நோய்கள் ஏற்படும்.

 

ஆறு மாதத்திற்குள்ளான குழந்தைக்கு நீலமேறுதல் மற்றும் இறந்து விடுதல் காரணம்?

நைட்ரேட்டு உப்பு அதிகமாக இருத்தல் காரணமாக இருக்கலாம். இந்த உப்பு அதிகம் இருந்தால் குழந்தைகள் நீலநிறமாக மாறி இறக்க நேரிடும்.

 

நீர் சோப்புக் கட்டியில் நுரைக்காமல் இருத்தல் ஏன்?

கடின நீரினால் இது ஏற்படுகிறது. கடின நீர் உபயோகிப்பை தவிர்க்கலாம்.

 

கழிவறை தொட்டி மற்றும் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு இவற்றிற்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?

சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

 
நீர்வழி நோய்களிலிருந்து தடுப்பதற்கு சில வழிமுறைகள்

• நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

• நோய் கிருமிகளை அழிக்க பிளிச்சிங் பவுடர் பயன்படுத்த வேண்டும். (1000 லிட்டருக்கு 1.5 கிராம் உபயோகித்தல் வேண்டும்)

• தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள் (குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர் நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாத்தல்.

• கைப்பம்புகள், குழாய்கள் சுற்றி நீர் தேங்காமல் பாதுகாத்தல், குழாய் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணி துவைத்தல் போன்றவற்றை தவிர்த்தல்.

• புளோரைடு கலக்காத நீரையே பருகுவதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும். இதனால் பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட புளோராஸிஸ் நோய்களில் மனிதனுக்கு ஏற்படும் நிலையான பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

• நீரின் தரம் அறிந்து பின் உபயோகப்படுத்த வேண்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.