நேர்மை தந்த பரிசு

அழகாபுரி என்ற நாட்டினை இந்திரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு சந்திரசேனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இளவரசன் மிகவும் நல்லவன்.

திருமணப் பருவத்தை அடைந்த சந்திரசேனனுக்கு தந்தை இந்திரசேனன் திருமணம் செய்து வைக்க எண்ணினான்.

இளவரசனோ போட்டி ஒன்றை நடத்தி நேர்மையான பெண்ணைத் தேர்வு செய்து திருமணம் செய்ய ஆசைப்பட்டான். இளவரசன் தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தான். அரசனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான்.

இளவரசன் திட்டப்படி அழகாபுரி நாட்டில் திருமண வயதில் உள்ள பெண்கள் எல்லாம் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

இளவரசன் வந்திருந்த இளம்பெண்களிடம் “பெண்களே, உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு விதை தருவேன். நீங்கள் விதைகளை ஊன்றி வளர்த்தல் வேண்டும். ஆறு மாதங்களில் யாருடைய செடி நன்றாக வளர்ந்துள்ளதோ அவரே இந்நாட்டின் இளவரசியாவார்” என்று போட்டியை அறிவித்தான்.

பின் வந்திருந்த பெண்கள் அனைருக்கும் ஆளுக்கொரு விதை வழங்கப்பட்டது.

அரண்மனையில் பணியாற்றும் பணிப்பெண்ணின் மகளும் விதையைப் பெற்றாள். அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்.

ஒரு தொட்டியில் மண் நிரப்பி, நீரைத் தெளித்து விதையை ஊன்றினாள். கண்ணுங் கருத்துமாகப் பார்த்து வந்தாள்.

மூன்று மாதங்களாகியும் விதை முளைக்கவில்லை. அப்பெண் கவலையுடன் உழவர்களிடம் சென்றாள். அவர்களிடம் செடி வளர்ப்பு குறித்துக் கேட்டறிந்தாள். அதன்படி முயற்சி செய்தாள். ஆனால் ஒரு பயனும் இல்லை.

இளவரசன் குறிப்பிட்ட நாளும் வந்தது. பணிப்பெண்ணின் மகள் எவ்வளவு முயற்சி செய்தும் செடி முளைக்கவில்லை.

ஆனாலும் செடியில்லாத மண் தொட்டியுடன் அரண்மனைக்குச் சென்றாள்.

அவளைத் தவிர மற்ற பெண்கள் அனைவரும் வண்ணவண்ண மலர்கள் மலர்ந்திருந்த பூத்தொட்டியுடன் வந்திருந்தனர்.

இளவரசன் சந்திரசேனன் அனைவரது மலர்த்தொட்டிகளையும் பார்த்தான். பின் தன் முடிவினை அறிவித்தான்.

“வெறுந் தொட்டியுடன் வந்த பெண்ணை நான் இளவரசியாக தேர்வு செய்துள்ளேன்” என்றான்.

“ஆம். இந்தப் பெண் மட்டும்தான் நேர்மை என்னும் விதையைப் பயிர்செய்தாள். நான் கொடுத்த விதைகள் எல்லாம் முளைக்கும் திறன் அற்ற விதைகளே” என்று கூறினான்.

அதைக் கேட்டவுடன் பூந்தொட்டியுடன் வந்திருந்த பெண்கள் அனைவரும் தலை குனிந்தனர்.

ஏனென்றால் அவர்கள் அனைவரும் இளவரசன் கொடுத்த விதை முளைக்கவில்லை என்றதும் வேறு நல்ல விதையை ஊன்றி அதை வளர்த்து எடுத்து வந்தனர்.

பணிப்பெண்ணின் மகளே நேர்மையாக விதை முளைக்கவில்லை என்று வெறுந்தொட்டியை எடுத்து வந்தாள்.

எனவே இளவரசன் அவளை வெற்றி பெற்றவளாக அறிவித்தார்.

குழந்தைகளே நேர்மை தந்த பரிசினைப் பார்த்தீர்கள் தானே.

நேர்மையே எப்போதும் வெற்றியைத் தரும். நாமும் செய்யும் எல்லாவற்றையும் நேர்மையுடன் செய்வோம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.