பஜ்ஜி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சரிசி : 400 கிராம்
உளுந்தம் பருப்பு : 100 கிராம்
உப்பு : தேவையான அளவு
வற்றல் : 4
காயம் : சிறிதளவு
பஜ்ஜிப்பொடி : 1 சிட்டிகை

 

செய்முறை

அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக நனைய வைக்கவும். அரைமணி நேரம் நனைந்த பின் பருப்பை இட்லிக்கு ஆட்டுவது போல் நன்றாக ஆட்டி எடுக்கவும்.

பின் அரிசியை ஆட்டும் போது வற்றல், காயம், உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி பஜ்ஜி பொடியையும், உளுந்துமாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவு அதிகம் கெட்டியாக இல்லாமலும், இளக்கமாக இல்லாமலும் இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பின் வாழைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், குடை மிளகாய், அப்பளம், பிரியப்பட்டதை வாழைக்காய் சீவும் உதவியால் வெட்டி மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் சுட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

பஜ்ஜி மெதுவாக இல்லாவிட்டால் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ரொட்டியையும் பஜ்ஜி மாவில் தோய்த்து ரொட்டி பஜ்ஜி சுடலாம்.