பணப்பயிர் – கரும்பு

கரும்பு இந்தியாவில் பயிரிடப்படும் முக்கியமான பணப்பயிர் ஆகும்.  இலத்தீன் அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் கரும்பினை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாகும். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிரேசில் ஆகிய நாடுகளும் கரும்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கரும்பு உயரமான புல்வகையைச் சார்ந்தது. இது 3.5 மீட்டர் வரை வளரக்கூடியது. இது அயன மற்றும் துணை அயன மண்டலப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பயிரிடப்படுகிறது.

வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை

கரும்பு நன்கு செழித்து வளர சராசரியாக 24C வெப்பம் ஆண்டு முழுவதும் தேவைப்படுகிறது. 130 செ.மீ. மழையளவும் நல்லவளமான மண்ணும் தேவைப்படுகிறது.

இப்பயிர் அறுவடை செய்யும் காலத்தில் அதிகளவு வேளாண் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

ஒரு முறை கரும்பை பயிர் செய்தபின் மீண்டும் கரும்பு பயிர் செய்யப்படுவதில்லை. மாற்றுப்பயிர்களாக நெல், வாழை, நிலக்கடலை, மஞ்சள் போன்றவை பயிர் செய்யப்படுகின்றன.

கரும்புப் பயிர் செழித்து வளர மிருதுவான மண் ஏற்றது. எனவே பயிர் செய்யும் இடங்களில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரையில் மிருதுவான மண் இருக்குமாறு செய்யப்படுகிறது.

கரும்பானது பார் அமைத்து பயிர் செய்யப்படுகிறது. கரும்பினைப் பயிர் செய்வதற்கு முன் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணற்பை பயிர் செய்யப்பட்டு பின் அவை மடக்கி உழப்பட்டு அந்நிலத்தில் கரும்பு பயிர் செய்யப்படுகிறது.

இப்பயிர் பொதுவாக தமிழ்நாட்டில் டிசம்பர், ஜனவரி முதல் பருவம், பிப்ரவரி, மார்ச் இரண்டாம் பருவம், ஏப்ரல், மே மூன்றாம் பருவம் என மூன்று பருவங்களில் பயிர் செய்யப்படுகிறது.

 

சோகை உரித்தல்

கரும்புப் பயிர் 5 முதல் 7 மாத பயிராக இருக்கும்போது சாதாரணமாக 30 இலைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10 இலைகள் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகின்றன.மற்ற இலைகள் சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

எனவே இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த இலைகளை, ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படாத இலைகளை உரித்து பார்களில் பரப்பி விடவேண்டும்.

இதனால் பயிர் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு மண்ணில் ஈரம் காக்கப்படுகிறது; களையும் கட்டுப்படுத்தப்படும். எனவே சோகை உரித்தல் கரும்பினைப் பயிர் செய்து 5 முதல் 7 மாதங்களில் செய்ய வேண்டும்.

கரும்புப்பயிரானது பயிர் செய்யப்பட்டு ஓராண்டு முடிவில் அறுவடைக்கு தயராகிறது. அப்போது கரும்பானது அடியோடு வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு பொருத்தமான வெட்டுக்கத்தி அல்லது கோடாரியைப் பயன்படுத்தப்படுகிறது.

அதிக சர்க்கரைச் சத்துள்ள அடிக்கரும்பு வெட்டப்படுவதால் கரும்பின் எடை கூடுவதோடு சர்க்கரை கட்டுமானமும் கூடுகிறது.

கரும்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் மையப்பகுதியில் சேர்த்து வைக்கப்படுகிறது. எனவே கரும்பாலைகளில் இதன் சாற்றினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.

உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து பெறப்படுகிறது. கரும்பிலிருந்து சாறு பிழியப்பட்ட சக்கை காதிதம் தயாரிக்கப் பயன்படுகிறது. மக்கிய கரும்புத் தோகை நல்ல உரமாகப் பயன்படுகிறது.

கரும்புச்சாறு, சர்க்கரை மருத்துவப் பயன்பாட்டிலும், உணவாகவும் பயன்படுகின்றன. கரும்பின் வேரினை குடிநீராகச் செய்து சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.