பணப்பயிர் – பருத்தி

பருத்தி இந்தியாவில் விளையும் மிகமுக்கியமான பணப்பயிர் ஆகும். இது இழைப்பயிர் வகையைச் சார்ந்தது. அயன மற்றும் துணை அயன மண்டலப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.

பருத்தி, செடியில் விதைகள் மூடிய மிருதுவான அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினை கொண்ட பகுதியாக விளைகிறது.

பருத்தியின் பயன்கள்

பருத்தியின் இழை ஆடைகள் செய்யப் பயன்படுகிறது. இழையிலிருந்து விதைகளைப் பிரிக்க ஜின்னிங் என்ற செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.

பருத்தியின் இலையும், மொட்டும் மருத்துவக் குணம் கொண்டவை. இவற்றை அரைத்துப் பசும்பாலில் கரைத்து உட்கொண்டால் மேக நோய்களும், இரத்தப் பித்த நோய்களும் நீங்கும்.

பருத்தியின் விதைகள் பருத்திக் கொட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன. இது நீரில் ஊறவைத்தும், ஊறவைக்காமலும் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றது.

மேலும் பருத்திக் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தூய்மைப்படுத்திய பருத்தி எண்ணெய் உணவுப் பொருட்கள் தயார் செய்யவும், தரம் குறைந்த எண்ணெய் சோப்பு தயாரிக்கவும் பய‌ன்படுத்தப்படுகின்றது.

மருந்துப் பொருட்கள் தயார் செய்யும் போது ஆலிவ் எண்ணெய்க்குப் பதிலாக பருத்தி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

பருத்தியின் எண்ணெய் எடுக்கும் போது வரும் கழிவு பருத்திப் பிண்ணாக்கு என்று அழைக்கப்படுகிறது. இப்பிண்ணாக்கு துவரங்குருணையுடன் கலந்து கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

பருத்தியின் விதையை அரைத்தப் பால் எடுத்து அதனுடன் தேங்காய்ப்பால், மண்ட வெல்லம் சேர்த்து பருத்திப் பால் தயார் செய்யப்படுகிறது. இதனைப்பருகுவதால் நெஞ்சுசசளி நீங்கும். நெஞ்சுச்சளியால் ஏற்படும் நெஞ்சு வலியும் நீங்கும். இன்றைக்கம் பருத்திப்பால் விற்பனை நடைபெறுகிறது.

பருத்திக்காயைப் பிடுங்கியவுடன் செடியை வேருடன் பிடுங்கி காயவைக்கப்படுகிறது. இது பருத்திமார் என்றழைக்கப்படுகிறது. இது எரிபொருளாகப் பயன்படுகிறது.

 

வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலை

இப்பயிர் செழித்துவளர தட்பவெப்பநிலை 20C லிருந்து 30C வரை இருக்க வேண்டும். மழை பொழிவு 50 – 100 செ.மீ. இருக்க வேண்டும். கரிசல் மண் மற்றும் வண்டல் மண் பருத்திப் பயிர் விளைய ஏற்ற மண் வகையாகும்.

பருத்தியின் காய்ப்பகுதியை செடியிலிருந்து பறிக்க சில இடங்களில் தொழிலாளிகளும், சில இடங்களில் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றனர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், உஸ்பெகிஸ்தான், பிரேசில் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை பருத்தி உற்பத்தியில் உலகில் முன் இருக்கின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் இராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளிலும் பருத்தி அதிகமாக விளைகின்றது.

 

பயிர் செய்யும் முறை

பருத்தியுடன் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகைகளைப் பயிர் செய்யலாம். பருத்தியைப் பயிர் செய்ய நிலத்தில் சால் முறை அமைத்துப் பயிர் செய்யப்படுகிறது.

இப்பயிர் பயிர் செய்யும் போது பயிர் இடைவெளியாக இரு வரிசைகளுக்கு இடையில் 45 செ.மீ இடைவெளியும், இரு செடிகளுக்கு இடையில் 15 செ.மீ இடைவெளியும் விடப்படுகிறது.

பருத்தியின் விதைகள் 5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படுகின்றன. பருத்தியை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க அக்னி அஸ்திரம் என்ற இயற்கை பூச்சி விரட்டி ஒன்று உள்ளது.

இப்பூச்சிவிரட்டியைத் தயார் செய்ய புகையிலை ஒரு கிலோவும், வேப்ப இலை 5 கிலோவும், பச்சை மிளகாய் 2 கிலோவும், பூண்டு ஒரு கிலோவும் எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து பசையாக்கிக் கொள்ளவும்.

இதனை 20 லிட்டர் கோமியத்துடன் கலந்து வைக்கவும். இக்கலவையை நன்றாகக் கொதிக்க வைத்து 48 மணி நேரத்திற்கு பிறகு அதை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து நேரடியாக பருத்திச்செடியில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பூச்சி தாக்காமல் தரமான பஞ்சினைப் பெறுவதோடு, மகசூலும் அதிகரிக்கும்.

 

அறுவடை செய்யும் முறை

பருத்தியின் அறுவடை சுமார் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை நடைபெறுகிறது. பருத்திச் செடியிலிருந்து பருத்தி சுளைகள் பிரித்தெடுப்பதற்கு பருத்தி எடுத்தல் என்று பெயர்.

காலை பத்து மணிக்குள்ளும், மாலை மூன்று மணிக்கு மேலும் பருத்தியெடுப்ப‌து நல்லது. வெப்பமான சூழலில் பருத்தி எடுக்கும் போது காய்ந்த பூவிதழ்களும், சருகுகளும் நல்ல பருத்தியோடு சேர்ந்து கலந்து விடும்.

நல்ல பருத்தியைத் தனியாகவும், தரம் குறைந்த பருத்தியை தனியாகவும் பருத்தி எடுக்கும் போதே பிரித்து தனித்தனிப் துணிப்பைகளில் நிரப்ப வேண்டும்.

பருத்தியெடுத்த‌ பின்பு மரநிழலிலோ, வீட்டு முற்றங்களிலோ, கெட்டியான மண் அல்லது சிமிண்ட் தரையிலோ அம்பாரம் போட்டு வைக்க வேண்டும்.

 

Comments are closed.