நீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி

பூமியின் துருவப் பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் விளைவுகளை, ஓர் அறிவியல் இணைய இதழில் வாசித்துக் கொண்டிருந்தேன்.

அதில் வெண்ணிறப் பனிப்பாறைகள் நீரில் மிதக்கும் படியான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அப்பொழுது அதிலிருக்கும் இயற்கை அறிவியல் என் சிந்தனையை தூண்டியது.

பனிப்பாறைகளும் நீர் மூலக்கூறுகளால் தான் ஆக்கப்படிருக்கின்றன. ஆனால் அவை திடநிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம், வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசை அடைய, திரவ நீர் திடநிலைக்குச் செல்கிறது.

திடநிலையிலிருக்கும் நீரையே பனி என்கிறோம். விந்தையாக, திரவநிலை நீரைக் காட்டிலும் பனியின் அடர்த்தி குறைவாக இருக்கிறது. இதனால், தான் பனி நீரில் மிதக்கிறது.

அப்பொழுது, எனக்கு தாகம் எடுத்தது. உடனே சமயலறைக்குச் சென்று ஒரு சொம்பில் குடிநீரை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது.

அது என்னவெனில், பனிப்பாறைகள் வெண்ணிறத்தில் ஒளிபுகாத் தன்மையுடன் இருக்கின்றன.

ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் உருவாக்கப்படும் ஐஸ் கட்டிகள் ஒளிபுகும் தன்மையுடன் இருக்கின்றன. அதாவது கண்ணாடிப் போன்று. இதற்கு காரணம் என்ன?

இதனை சிந்தித்தபடியே, சொம்பில் நீருடன் எனது அறைக்கு வந்தேன். நீர் குடிக்கவில்லை. எடுத்துவந்த சொம்பை மேசையில் வைத்துவிட்டு எனது கேள்விக்கான விடையை தேட முயற்சித்தேன்.

“என்ன சார் தேடுறீங்க?” என்ற குரல் ஒலித்தது.

சுதாரித்துக் கொண்டேன். இது நீரின் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்றுக் கருதினேன். உடனே “யாரு? நீர் தான பேசுரது” என்று கேட்டேன்.

“ஆமாங்க, சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே” என்றது நீர்.

“உம்..ம்.. உன்னபத்திதான் நினைச்சிட்டு இருந்தேன்” என்றேன்.

“என்ன பத்தியா? எதுக்கு நினைச்சீங்க?” என்று கேட்டது நீர்.

“இல்ல, பனிப்பாறைகள் வழிய ஒளி ஊடுருவ மாட்டேங்குது. ஆனா குளிர்சாதனப் பெட்டியில உருவாக்கின ஐஸ்கட்டி, கண்ணாடி மாதிரி இருக்கு. இதத்தான் புரிஞ்சிக்க நினைச்சேன்” என்றேன்.

“ஓ..ஓ… இதுதான் உங்க சந்தேகமா? நானே சொல்றேன்.

நீருக்குள்ள அதிகமா காற்று கரைந்திருந்தா, அது உறைஞ்ச பிறகு ஒளி உட்புகா பனிக்கட்டிகளை‌ உருவாக்கும். அதுவே நீரில் காற்று இல்லைனா, அது உறையும் பொழுது கண்ணாடி மாதிரி இருக்கும்” என்றது நீர்.

“ஆ..ஆம்…ரொம்ப நன்றி. இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சி” என்றேன்.

“சரி சார். திடநிலை நீர நீங்க பனி அப்படீன்னு சொல்றீங்க. ஆனா, இன்னும் பல பெயர்களச் சொல்லியும் என்ன அழைக்கிறாங்க. உங்களுக்கு தெரியுமா?” என்றது நீர்.

சற்று யோசித்தேன். உடனே “நீயே சொல்லேன், தெரிஞ்சுக்கிறேன்.” என்றேன்.

“சொல்றேன். நான் மேகத்துல இருந்து காற்று மண்டலம் வழியா பூமிநோக்கி வரும்போது என்னை பனித்தூவி-ன்னு சொல்றாங்க. ஆங்கிலத்துல Snow ன்னு சொல்றாங்க” என்று சொல்லியது நீர்.

“ஆமாம், அப்ப உன்னோட தோற்றம் பஞ்சு மாதிரி மென்மையா இருக்குமே” என்றேன்.

“ஆமா சார். இதுவே திடநிலையில் சிறு உருண்டைகளாக மேலிருந்து கீழ வரும்பொழுது ஆலங்கட்டி ன்னு சொல்றாங்க.

பாறையிலிருந்து உருகி வழியும் பொழுது, உறைஞ்சி ஒரு ஈட்டி மாதிரி தோற்றத்த பெறும் பொழுது பனிக்கூரி-ன்னு சொல்றாங்க” என்றது நீர்.

“பனிக்கூரிக்கு ஆங்கிலத்துல என்ன சொல்றாங்க?” என்று வினவினேன்.

“Icicle –ன்னு சொல்லுவாங்க. இதுவே, நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, என்னை பனியாறு, அதாவது Glacier அப்படீன்னு அழைக்கறாங்க” என்றது நீர்.

“பரவாயில்லையே உனக்குத்தான் எத்தனை பேரு?” என்றேன்.

“இன்னும் இருக்கு சார். Frost அதாவது பனிப்பூச்சு. கேள்விப்பட்டிருக்கீங்களா?” எது ஒன்னு மேலயும், நான் மெல்லிய அடுக்கா திடநிலையில படர்ந்து இருக்கும் பொழுது என்னை பனிப்பூச்சுன்னு சொல்லி அழைப்பாங்க” என்றது நீர்.

மேலும் அது தொடர்ந்தது.

“இதுவே துருவப் பகுதியில மிகப் பெரிய பரப்பளவுல இருக்கிறப்போ பனிப்படுக்கை (Ice cap) இல்லைன்னா பனிவிரிப்பு (Ice sheet) அப்படீன்னு சொல்லுவாங்க” என்றது நீர்.

“அப்படியா? எனக்கு ஒரு சந்தேகம். இந்த பனிப்படுக்கைக்கும் பனிவிரிப்புக்கும் என்ன வித்தியாசம்?” என்றேன்.

“பனியோட பரப்பளவு 50,000 சதுர கிலோமீட்டருக்கும் குறைவா இருந்துச்சினா அதுக்கு பனிப்படுக்கைன்னு சொல்லுவாங்கா. ஆனா, பனியின் பரப்பளவு 50,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமா இருந்துச்சினா அப்போ பனிவிரிப்புன்னு சொல்லி அழைப்பாங்க” என்றது.

“நல்லது. சூழ்நிலையோட வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசுக்கு வந்ததும், நீ பனியா உறைஞ்சி பல வடிவங்கள்ல காட்சி தருயே. உன்னோடு இயல்பு ரொம்பவும் வித்தியாசமானது” என்றுக் கூறி நீரைப் புகழ்ந்தேன்.

“நன்றி சார். ஒன்னும் நியாபகம் வச்சுக்கோங்க. நான் தூய நீரா இருக்கும் போது தான் பூஜ்ஜியம் டிகிரி செல்சியசுல பனியா மாறுவேன். ஆனா கடல் நீரா இருக்கும்பொழுது, என்னோட உப்புக்களும் கலந்திருக்கும். அப்போ நான் பொதுவா -2 °C -ல தான் உறைஞ்சு பனியாக மாறுவேன்” என்றது நீர்.

“ஓ..ஓ.. சரி சரி… ஆனா, நீ திரவ நீரா இருக்கும்போது தானே எல்லோருக்கும் பயன். பனிக்கட்டியா இருந்தா என்ன நன்மை?” என்றேன்.

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? நான் துருவப் பகுதியில பனியா இருக்கறதால தான் கடல் மட்டம் உயராம இருக்கு. இல்லைன்னா என்னவாகும் தெரியுமா அதோட, காலநிலையைப் பேணுவதிலும் எனக்கு பங்குண்டு. இது மட்டுமா, என்னால தான் பனிச்சறுக்கு விளையாட்டே நடக்குது” என்றது நீர்.

“ஆமாம்.. ஆமாம்.. ஒத்துக்கிறேன். நீ பனிக்கட்டியா இருக்கும் போதும் பயன் தான்” என்றேன்.

“நல்லது சார். சொல்ல மறந்துட்டேன். பனிச் சிற்பக் கலையும் நான் திடநிலையில இருப்பதாலத்தான் சாத்தியமாகுது. முக்கியமா, பூமியல ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றங்களை தெரியப்படுத்தவும் என்னால முடியும். அதவச்சு, தக்க ஆராய்ச்சி வழிமுறைகள பின்பற்றி, கடந்தகால வரலாற்றையும் அறிய முடியும். அத்தோட பனிக்கட்டிய ஆய்வு செய்வது மூலமா, எதிர்கால காலநிலை பற்றியும் தெரிஞ்சிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி பண்றாங்க” என்று பெருமிதத்துடன் கூறியது நீர்.

பனிக்கட்டியின் நன்மைகளை அறிந்து மகிழ்ந்தேன். அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. எடுத்துவந்த குடிநீரை இன்னும் பருகவில்லை. “சரி எனக்கு தண்ணி தாகம் எடுக்குது” என்றேன்.

“சரி சார்.. நீங்க தண்ணி குடிங்க. நான் கிளம்புறேன்” என்றுக் கூறியது நீர்.

சொம்பில் இருந்த நீரை பருகியப்பின், மீண்டும் அந்த அறிவியல் இதழில் இருந்த கட்டுரையை படிக்க தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நீருடன் ஓர் உரையாடல் 2- நீரோட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.