இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி

பயிர் வளர்ச்சி ஊக்கி என்பது பயிர்கள் வளர்வதற்கு தேவையான ஊட்டச் சத்தை வழங்கி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை ஆகும்.

குணப்பசலம், அமிர்தக் கரைசல் மற்றும் தேங்காய்பால்மோர் போன்றவை இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும்.

 

குணப்பசலம்

குணப்பசலம் பயிர் வளர்ச்சி ஊக்கி என்பது மீனிலிருந்து தயாரிக்கப்படுவதால் இது மீன் அமினோ அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்

மீன் அல்லது மீன்கழிவு – 1 கிலோ

நாட்டுச் சர்க்கரை பழையது அல்லது கருப்பட்டி – 1 கிலோ

தயாரிப்பு முறை

மீனையும், பழைய சர்க்கரை அல்லது கருப்பட்டியையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுவைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை நன்கு கிளறிவிடவும். ஒரு சில நாள்களில் கலவையிலிருந்து பழுத்த பழவாசனை வரும். இந்த கலவையை 10 நாட்களுக்கு பிறகு வடிகட்டி உபயோகிக்க வேண்டும்.

எஞ்சியுள்ள மீன்சக்கையில் மறுபடியும் பழைய சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து மேற்கூறிய முறையில் உபயோகிக்கலாம். இவ்வாறு மும்முறை செய்யலாம்.

பயிர்களுக்கு 20 – 50 மில்லிலிட்டர் குணப்பசலத்தை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

 

அமிர்தக் கரைசல்

அமிர்தக் கரைசல் என்பது சர்க்கரை, கோமியம், சாணம் கொண்டு தயாரிக்கப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும்.

தேவையான பொருட்கள்

சர்க்கரை – 1 கிலோ

கோமியம் – 1 லிட்டர்

சாணம் – 1 கிலோ

தண்ணீர் – 10 லிட்டர்

செய்முறை

சர்க்கரை, கோமியம், சாணம் மற்றும் தண்ணீர் எல்லாவற்றையும் பாத்திரத்தில் கொட்டி இறுக மூடிவைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை நன்கு கலக்கிவிடவும்.

அமிர்தக் கரைசலை 24 மணி நேரத்திற்கு பிறகு உபயோகிக்கலாம். பயன்படுத்துவதற்கு முன்பு வடிகட்டவும். ஒரு லிட்டர் அமிர்தக் கரைசலை 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கவும்.

 

தேங்காய்பால் மோர்

தேங்காய்பால் மோர் மற்றொரு சிறந்த‌ பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1 கிலோ

தயிர் – 1 லிட்டர்

இளநீர் – 2 எண்ணம்

செய்முறை

தேங்காயை பால் எடுத்து 4 லிட்டர் தண்ணீரில் கலக்கவும், தயிரையும் 4 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். தேங்காய் பால் தண்ணீர், மோர் மற்றும் இளநீர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடி வைக்கவும்.

ஒரு நாளைக்கு இருமுறை கலக்கி விடவும். 20-வது நாள் வரை தொடர்ந்து கலக்க வேண்டும். 20 நாட்களுக்கு பிறகு பயிர்களுக்கு தெளிக்கலாம். 200 – 300 மில்லி லிட்டர் தேங்காய்பால் மோரை 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கவும்.

– இரா.அறிவழகன்

Comments are closed.