பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு

பாய்ச்சங் பூட்டியா கால்பந்து விளையாட்டை இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். கால்பந்து விளையாட்டில் உலக அரசங்கில் இந்திய அணியைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

சர்வதேச அரங்கில் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு சிறந்த ஊக்குவிப்பாளராகக் கருதப்படுகிறார். கால்பந்தாட்டத்தில் இவரது விளையாட்டு தன்மையின் காரணமாக சிக்கிம்மின் மறைந்து தாக்குபவர் என்றழைக்கப்படுகிறார்.

‘பாய்ச்சங் இந்திய கால்பந்திற்கான கடவுளின் பரிசு’ என்று மூன்று முறை ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பட்டம் பெற்ற ஐ.எம்.விஜயன் அவர்கள் பூட்டியாவைப் பாராட்டியுள்ளார்.

ஐந்து முக்கியக் கால்பந்துக் கோப்பைகளை இந்திய அணிக்காக பெற்றுத்தந்தவர். இந்திய அணிக்காக அதிகக் கோல்களை (40) அடித்தவர். 1984க்குப்பின் இந்திய அணி ஆசியக் கோப்பையில் விளையாடத் தகுதி பெறக் காரணமானவர். 104 சர்வதேசப் போட்டிகளில் முதன்மை வீரராகத் திகழ்ந்தவர்.

2009ல் நேருக்கோப்பையைப் பெற்ற போது 100வது சர்வதேசப் போட்டியில் முதன்மை வீரர் என்ற பெருமை இவரைச் சாரும். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவர் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போதே, இவரது பெயரால் கால்பந்து அரங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இவர் அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

பிறப்பு மற்றும் இளமைப் பருவம்

பூட்டியா 15.12.1979ல் சிக்கிம் மாநிலத்தில் டின்கிட்டம் என்ற ஊரில் பிறந்தார். இவர் நேபாளி பேசும் புத்த மதத்தைச் சார்ந்தவர். இவருக்கு சுவாங் பூட்டியா என்ற மூத்த சகோதரரும், ரவிசங் பூட்டியா என்ற இளைய சகோதரரும் உள்ளனர்.

‘பாய்ச்சங்’ என்பதற்கு சிறிய சகோதரர் என்று பொருள். இவர் தனது ஆரம்பக்கல்வியை கிழக்கு சிக்கிமில் பேக்யாங் என்ற இடத்தில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் பயின்றார்.

கால்பந்து வீரராக பாய்ச்சங்

பள்ளியில் பயின்ற போதே கால்பந்து, பேட்மிட்டன், கூடைபந்து, தடகளம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தினார். 9 வயதில் கால்பந்துப் போட்டியில் நன்றாக விளையாடிதற்காக ஊக்கத் தொகையைப் பெற்றார்.

பாய்ச்சங் விளையாட்டு வீரராவதற்கு அவரது மாமா கர்மா பூட்டியா ஊக்கம் அளித்தார். இவர் பள்ளியில் பயின்ற போது சிக்கிமில் உள்ள நிறைய பள்ளிகள், மற்றும் உள்ளூர் கிளப்புகளில் விளையாடினார். 1992ல் சப்ரோட்டோ கோப்பையில் விளையாடி சிறந்த வீரர் விருதினை வென்றார்.

இந்நிகழ்வுகள் இவர் இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பரான பாஸ்கர் கங்குலியால் இனம் காணப்பட்டு கல்கத்தா கால்பந்து கழகத்தில் சேர்க்கப்பட்டார். இவர் கால்பந்து விளையாட்டில் ஸ்ட்ரைக்கர் எனப்படும் பந்தினை கோல்போடும் வகையில் மாற்றும் திறனுடையவர் என்ற நிலையில் ஆடினார்.

சர்வதேசப் போட்டிகள்

இவர் தனது 19வது வயதில் முதன் முதலில் நேருக் கோப்பைக்காக 10.03.1995ல் தாய்லாந்துக்கு எதிராக சர்வதேசப் போட்டியில் கால்தடம் பதித்தார். உஸ்பெக்கிஸ்தான் அணிக்கு எதிராக நேருக்கோப்பையில் முதல் கோல் அடித்தார். இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

1997ல் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு தங்க கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் 5-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பூட்டியா ஒரு கோல் போட்டார்.

இரண்டு வருடங்கள் கழித்து கோவாவில் நடைபெற்ற தெகாகூத கோப்பையை இந்தியா பங்களாதேஷ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன்ஷிப்பை தக்க வைத்தது. இப்போட்டியில் ஒரு கோல் போட்டார். மேலும் தொடரின் மதிப்பு மிக்க வீரர் என்ற பெயரையும் பெற்றார்.

2002ல் வியட்நாமில் நடைபெற்ற LG கோப்பைக்கான போட்டியில் வியட்நாம் அணியை இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் இருபுறங்களிலும் பூட்டியா கோல் அடித்தார்.

2003ல் ஆப்ரோ-ஏசியன் விளையாட்டுப் போட்டியில் அரையிறுதியில் ஜிம்பாவே அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்து 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

2007 நேரு கோப்பைக்கான போட்டியில் கம்போடியா, பங்களாதேஷ், கிரிகிஸ்தான், சிரியா அணிகளுக்கு எதிராக கோல்கள் அடித்து இந்திய அணியை சாம்பியன்ஷிப் வாங்கச் செய்தார்.

2005ல் நடைபெற்ற தெஆகூத கோப்பைக்கான போட்டியில் அணித் தலைவராக செயல்பட்டு இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்றதோடு தொடரின் மதிப்பு மிக்க வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

2008ல் நடைபெற்ற தெஆகூ கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். 2008ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சேலஞ்ச் கோப்பைக்கான சர்வதேசப் போட்டிகளில் 3 கோல்கள் அடித்து சாம்பியன்ஷிப் வாங்கியதோடு 2011ல் நடைபெற்ற ஆகாகூப்பில் ஆசியக் கோப்பைக்கான போட்டியில் விளையாட இந்திய அணியை தகுதி பெறச் செய்தார்.

2009ல் நேருக்கோப்பைக்கான போட்டிகளில் விளையாடியபோது 100 சர்வதேச காலபந்துப் போட்டிகளை கடந்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இப்போட்டியில் இந்திய அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்ததோடு தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

2011ல் ஆகாகூப்பின் ஆசியக் கோப்பையில் விளையாடிய போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 24.08.2011ல் ஓய்வை அறிவித்தார். அவர் மொத்தம் 104 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 40 கோல்கள் அடித்துள்ளார்.

கிளப்போட்டிகள்

1993ல் 16 வயதில் கிழக்கு வங்காள கால்பந்து கூட்டமைப்பில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து பாக்வாராவின் துஊவு மில்ஸ் அணியில் சேர்ந்து 1996-97ல் இந்திய தேசிய கால்பந்து லீக் போட்டியில் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். இப்போட்டியில் அதிக கோல்கள் போட்டதன் காரணமாக நேரு கோப்பைக்கான சர்வதேசப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1999ல் ஐரோப்பிய பரிகால்பந்து கிளப்பில் விளையாடி ஒப்பந்தமானார். முகமது சலீமிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய கிளப் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். மலேசிய கிளப்பிற்காகவும் விளையாடி உள்ளார்.

திருமணம்

பூட்டியா 30.15.2004ல் மாட்குரிடிப்னிஸ் என்ற பெண்ணை மணந்தார். 2014ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் டார்ஜிலிங்கில் நின்று தோல்வி அடைந்தார். 28.10.2010ல் பாய்ச்சங் பூட்டியா கால்பந்து பள்ளி என்ற அமைப்பினைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

பட்டங்கள்

1998ல் கால்பந்து வீரருக்கான அர்ஜுனா பதக்கம்

2008ல் நான்காவது இந்திய உயரிய விருதான பத்மஸ்ரீ

2014ல் பங்கா பூசன்

இந்திய கால்பந்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெறச் செய்த பாய்ச்சங் பூட்டியா நம் பாராட்டுக்கு உரியவர்.

– வ.முனீஸ்வரன்