பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?. இந்த கேள்வி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.

இன்றைய நவீனகால சூழ்நிலையில் எங்கே பார்த்தாலும் ஒரே பிளாஸ்டிக் மயம்தான். ரோடு, காடு, தெரு, ஆறு, கடல் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள்.

இன்னும் குறிப்பிட்டு சொன்னால் பிளாஸ்டிக் பைகள் நிலத்திலும், காற்றிலும், நீரிலும் மட்டற்று கலந்துள்ளன.

 

நிலத்தில் காணப்படும் நெகிழி பைகள்
நிலத்தில் காணப்படும் நெகிழி பைகள்

 

 

பவளப்பாறைகளில் காணப்படும் நெகிழி பைகள்
பவளப்பாறைகளில் காணப்படும் நெகிழி பை

 

இதுக்கு முழுக்காரணம் யார் என்று கேட்டால் மனிதர்களாகிய நாம்தான். நாம் செய்த இத்தவறுக்காக இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் உட்பட பெரும்பாலானவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் பல இடங்களில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டின் எதிர்மறையான விளைவே இதற்கு காரணம் ஆகும்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மனிதன் சமகால வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒருபெரிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

பிளாஸ்டிக் பைகள் அதிகம் பயன்படுத்துவதற்கு காரணம் அவை லேசானதாகவும், தூக்கிச் செல்ல வசதியாகவும், விலைமலிவாகவும் கிடைப்பதால்தான்.

நமக்கு மிகவும் வசதியான இவைகள் சுற்றுசூழலுக்கு எதிரியாகவும், நம்முடைய உடல்நலனிற்கு எமனாகவும் விளங்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்றி பார்ப்போம்.

நீர் மற்றும் நில மாசுபாடு

இப்பைகள் நீர் மாசுபாடு மற்றும் நிலத்தில் மாசுபாட்டினை தோற்றுவிக்கின்றன. இவை எடை குறைவாக இருப்பதால் எளிதாகவும் வேகமாகவும் காற்றினாலும் நீரினாலும் அடித்துச் செல்லப்படுகின்றன.

 

பிளாஸ்டிக்கால் நிலமாசுபாடு
பிளாஸ்டிக்கால் நிலமாசுபாடு

 

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்பிளாஸ்டிக்கால் நீர்மாசுபாடு

காற்று வீசும்போது இப்பைகளால் இங்கும் அங்கும் எடுத்துச் செல்லப்பட்டு மரங்களிலும், வேலிகளிலும், நதிகளிலும் சிக்கி இறுதியில் கடலினையும் குப்பை மயமாக்குகிறது.

பருவநிலை மாற்றம் உண்டாக்க காரணம்

இவ்வகைப் பைகள் பெரும்பாலும் பாலிபுரோப்பிலின் என்ற பொருளிலிருந்து தயார் செய்யப்படுகிறது. பாலிப்புரோப்பிலினின் மூலம் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களில் ஒன்றான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகும்.

மேலும் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டினால் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாக வெளியிடப்பட்டு கிரீன் ஹவுஸ் விளைவுக்குக் காரணமாகி பருவநிலை மாற்றத்தை உண்டாக்குகிறது.

எளிதில் மக்காதவை

பெட்ரோலியப் பொருளிலிருந்து தயார் செய்யப்படும் இவ்வகைப் பைகள் எளிதில் மக்காதவை. இவைகள் மக்குவதற்கு 1000 ஆண்டுகளோ அதற்கு மேலோ ஆகும்.

இப்பைகள் கண்ணுக்குத் தெரியாத மிகவும் சின்னதாக உடைந்து மண்ணிலோ, கடலிலோ சேகரமாகி உணவுச் சங்கிலியில் கலந்து உயிரினங்களுக்கு தீமை விளைவிக்கின்றன.

உலகில் உள்ள பெருங்கடல்களின் ஒவ்வொரு சதுர மைலுக்கும் சுமார் 46,000 – 10,00,000 பிளாஸ்டிக் துண்டுகள் மிதக்கின்றன.

உற்பத்திக்கு அதிக ஆற்றல் செலவிடப்படுகிறது

ஒரு காரினை ஒரு கிமீ அல்லது அரை மைலுக்குச் செலுத்த தேவையான ஆற்றலின் அளவானது ஒன்பது பிளாஸ்டிக் பைகளை தயார் செய்ய செலவிடப்படுகிறது.

ஆனால் ஒரு பிளாஸ்டிக் பையானது பயன்படுத்தப்படும் காலஅளவு வெறும் 12 நிமிடங்களே ஆகும்.

உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவையும், அதனுடைய பயன்பாட்டின் காலஅளவையும் ஒப்பிடும்போது அது இச்சூழலுக்கான மிகப்பெரிய இழப்பாகும்.

காட்டுயிரிகள் மற்றும் கடலுயிரிகளுக்கு ஏற்படும் தீமைகள்

பறவைகள், விலங்குகள் மற்றும் கடலுயிரிகள் இப்பைகளை தங்களுடைய உணவு என்று தவறாகக் கருதி அதனை உண்டு விடுகின்றன.

 

பிளாஸ்டிக் பையை உண்ணும் குரங்கு
பிளாஸ்டிக் பையை உண்ணும் குரங்கு

 

இவ்வாறு இப்பைகளை உணவாக்கும்போது இப்பைகள் செரிக்காமல் அவைகளுக்கு இறப்பினை ஏற்படுத்தி விடுகின்றன.

 

பிளாஸ்டிக்கால் மடிந்துள்ள கடல்பறவை
பிளாஸ்டிக்கால் மடிந்துள்ள கடல்பறவை

 

சில‌நேரங்கில் ஆமைகள், கடல்சிங்கங்கள், பென்குயின்கள் உள்ளிட்ட கடலுயிரிகள் இப்பைகளில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் இறந்து விடுகின்றன.

வெளியே வர முடியாத ஒரு பிளாஸ்டிக் பையில் நீங்கள் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

கடலில் எண்ணிலடங்கா பிளாஸ்டிக் பைகள் உள்ளன. அவை மீன்களுக்கும் இதர கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.

 

ஒரு நிமிடம் இந்த காணொளியைக் காணுங்கள். உயிரச்சம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.

 

மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு

இப்பைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆரோக்கிய உடலியத்திற்குத் தேவையான ஹார்மோன்களின் செயல்பாடுகளைத் தடுக்கின்றன.

மீன் உள்ளிட்ட கடலுயிரிகளால் உண்ணப்படும் இப்பைகள், உணவுச்சங்கியிலில் புகுந்து மனிதனைச் சென்றடைந்து, மனிதனில் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பினை உண்டாக்குகிறது.

சுற்றுச்சூழலில் இருந்து அகற்றுவது கடினம்

இவ்வகைப் பைகளை சுற்றுப்புறத்திலிருந்து அகற்றுவது கடினமாக உள்ளது. மேலும் இதனை நிலத்தில் போட்டு மூடும்போது அவை எளிதாக மக்காமல் நிலமாசுபாட்டினை உண்டாக்குகின்றன.

நீரில் கலந்து நீர் மாசுபாட்டினையும், எரிக்கும்போது காற்று மாசுபாட்டினையும் உண்டாக்குகிறது. மேலும் இது உடைந்து கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறியத் துகள்களாகி சுற்றுப்புறத்திலிருந்து அகற்ற முடியாது போகிறது.

எளிதில் மறுசுழற்சி செய்ய முடியாதவை

இப்பைகளை மறுசுழற்சி செய்ய குறிப்பிட்ட தேர்ந்த இயந்திரங்கள் தேவை. அவற்றின் விலையோ அதிகம். எனவே எல்லா இடங்களிலும் இதனை மறுசுழற்சி செய்வது இன்றைக்கு வரையில் கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது.

ம‌றுசுழற்சி செய்யப்படும் இப்பைகளின் சுத்தம் பிரச்சினையாகவே உள்ளது. எனவே இவற்றின் மறுசுழற்சி எளிதானது அல்ல.

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்? என்பதை தெரிந்து கொண்டீர்கள் தானே.

ஆதலால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை தவிர்த்து சுற்றுசூழலுக்கும், நமக்கும் நன்மையளிக்கும் செயல்களைச் செய்து வருங்கால சந்ததியினருக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.