பிளைன் சால்னா செய்வது எப்படி?

பிளைன் சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான பிளைன் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – ¼ கிலோ

தக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

முந்திரிப் பருப்பு – 25 கிராம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – தேவையான அளவு

கொத்த மல்லி இலை – தேவையான அளவு

 

தாளிக்க

பட்டை – சிறிதளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

பிரிஞ்சி இலை – ஒரு எண்ணம்

 

செய்முறை

பெரிய வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியைக் கழுவி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சியைத் தோல் நீக்கி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டினை தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய், முந்திரி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.

கொத்த மல்லி இலையைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் சதுரங்களாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

 

வெங்காயம் பாதி வதங்கிய நிலையில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் இறக்கி ஆற விடவும்.

தக்காளி சேர்த்து வதக்கும்போது
தக்காளி சேர்த்து வதக்கும்போது

 

வெங்காயம் தக்காளிக் கலவையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அடித்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் தக்காளிக் கலவையைப் போட்டு வதக்கவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கும்போது
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கும்போது

 

 

மிக்சியில் போட்டு அடித்த தக்காளிக் கலவையை வதக்கும்போது
மிக்சியில் போட்டு அடித்த தக்காளிக் கலவையை வதக்கும்போது

இரண்டு நிமிடங்கள் கழித்து இஞ்சி பூண்டு கலவையைப் போட்டு வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் தேவையான அளவு நீரினைச் சேர்க்கவும்.

அதனுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலவையை கொதிக்க விடவும்.

கலவை கொதிக்கும்போது
கலவை கொதிக்கும்போது

 

ஒரு கொதி வந்தவுடன் முந்திரி தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

முந்திரி தேங்காய்க் கலவை சேர்த்தவுடன்
முந்திரி தேங்காய்க் கலவை சேர்த்தவுடன்

 

மீண்டும் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும். பச்சை வாசனை போனவுடன் கொத்து மல்லி இலையைத் தூவி இறக்கி விடவும். சுவையான பிளைன் சால்னா தயார்.

சுவையான பிளைன் சால்னா
சுவையான பிளைன் சால்னா

 

இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா, பட்டாணி புலாவ், பிரியாணி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண பிளைன் சால்னா சுவையாக இருக்கும்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சால்னாவை இறக்கும்தருவாயில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் இட்டு தாளித்து சால்னாவில் கொட்டலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.