புதிய சலவை

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.
காலை வேளை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை, பாருங்கள்

கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்தாள் மனைவி.

“அப்பாடா. இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை. இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன.” என்று சொன்னாள்.

கணவன் அமைதியாகச் சொன்னான். “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்

 

இப்படித்தான் பல முறை நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் குறைகள் இருந்தால் அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன. அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை.

நம் குறைகளுக்கோ காரணங்களை மிக வலுவாக‌ வைத்திருக்கிறோம். அந்தக் காரணங்கள் இல்லா விட்டால் நாம் பத்தரை மாற்றுத் தங்கம் தான்.

மற்றவர் குறைகளை நாம் மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது குறைகளை நீக்கி விட்டால் நம் வாழ்வு சிறக்கும் என்பதை நாம் உணர்ந்து கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டு.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.