புதிர் கணக்கு – 23

மூன்றாவது புதிரைக் கூறும் வாய்ப்பினை எனக் களித்த தலைவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இதோ எனது புதிரைக் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, பருந்து பாப்பாத்தி வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்துப் புதிரைக்கூற ஆரம்பித்தது.

“தம்பிகளா கவனமாகக் கேளுங்கள். நேற்று இங்கு சுற்றிப் பார்க்க வந்த மனிதர்கள் சிலர் பேசிக் கொண்டு போனதையே நான் இப்போது உங்களிடம் கேள்வியாகக் கேட்கிறேன்.

அதாவது இங்கிருப்பவர்களில் வெள்ளைநிறக் கொக்குகளும் சாம்பல் நிறக் கொக்குகளும் நாரைகளும் ஒரேவிதமான அமைப்பினில் இருக்கின்றனர்.

அதாவது இவர்களில் 24 பேரைத் தவிர மற்றவர்கள் நாரைகள் என்றும்

24 பேரைத் தவிர மற்றவர்கள் வெள்ளைக் கொக்குகள் என்றும் உள்ளனர் என்றால் அவர்களில் தனித்தனியே ஒவ்வொருவரும் எத்தனை பேர் உள்ளனர் என்பதை நீங்கள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்” என்று கூறியது.

வெளிநாட்டுப் பறவைகள் தலையைத் தாழ்த்தித் தமது அலகால் தரையில் கோடுகிழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

“ஏய் அந்தப் பொடியன் சின்னான் எங்காவது இருக்கானான்னு பாருங்க. ஒளிஞ்சிக்கிட்டு இருந்தாலும் இருப்பான்” என்றது காக்கை கருப்பன்.

காக்கையின் சந்தேகத்திற்கேற்பச் சிட்டுக் குருவி ஒரு வெளிநாட்டு சூலக் கொண்டை புறாவின் அருகில் அமர்ந்து அதன் காதுகளில் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டுச் சத்தமின்றிப் பறந்து சென்று மறைந்து விட்டுச் சிறிது நேரம் கழித்துத் தனது நண்பர்களின் மத்தியில் வந்து அமர்ந்தது.

“இப்பதான் வாராயா? நல்ல வேளை பருந்து பாப்பாத்தி கேள்வியைச் சொல்லி முடிச்சிருச்சி” என்றது மாடப்புறா மாணிக்கம்.

“யாருமே பதில் சொல்லும் நிலைமையிலயில்ல போலிருக்கு” என்று கிண்டல் செய்தது கிளி கீதம்மா.

அப்போது எழுந்த வெளிநாட்டுச் சூலக் கொண்டைப் புறா பதிலைக் கூற ஆரம்பித்தது. “இதோ உங்களது மூன்றாவது கேள்விக்கு நான் சரியான பதிலைக் கூறுகின்றேன்.” என்று கூறிவிட்டு ஏதோ ஒரு பதிலைக் கூறியது. அதனைக் கேட்ட பருந்து பாப்பாத்தி,
“விடை சரியானதுதான். ஆனால் எனக்கென்னவோ சூலக் கொண்டை புறா தானாகச் சொல்வதாகத் தெரியவில்லை” என்றது.

“எது எப்படியிருந்தா உங்களுக்கென்ன? உங்களுக்குத் தேவை சரியான விடைதானே? என்று உடனே கூறியது செஞ்சிவப்புக்கிளி.
“ஆமாம் சின்னான் தான் பதிலைச் சொல்லிக் கொடுத்தது” என்று சூலக் கொண்டை புறா ஒத்துக் கொண்டது.

“அதற்கான விடையும் முந்தைய கேள்வியைப் போன்றே ஒவ்வொரு இனமும் 12 பேரைக் கொண்டதாக இருக்கும் என்று கணக்கிட்டு 12+12+12 வந்தால் புதிருக்குச் சரியான விடைதான்” என்றது வெளவால் வாணி.

“முந்தைய புதிரைப் போலவே இதையும் சொன்னால் கூட யாரும் பதில் சொல்லவில்லையே” என்று பருந்து பாப்பாத்தி கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.