புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் உண்டாக்க முடியாத ஆற்றல் ஆகும்.

புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி கனிமங்கள் ஆகியவற்றிலிருந்து இவ்வகை ஆற்றல் பெறப்படுகிறது.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களை தேவையான நேரத்தில் (குறுகிய காலத்தில்) புதுப்பிக்க இயலாது.

புதுப்பிக்க இயலாத ஆற்றலின் மூலங்கள் பூமியின் அடியிலிருந்து பெறப்படுகின்றன. இவ்வளங்களின் இருப்பு நிர்ணயிக்கப்பட்டவை ஆகும். எனவே இவ்வாற்றல் மூலங்கள் வற்றும் மூலங்கள் என அழைக்கப்படுகின்றன.

இயற்கையில் இவ்வளங்கள் உருவாக எடுத்துக் கொள்ளும் காலத்தைவிட வேகமாக நம்மால் இவ்வளங்கள் நுகரப்படுகின்றன.

புதுப்பிக்க இயலாத மூலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வரையறைக்கு உட்பட்டவை. இம்மூலங்களிலிருந்து நாம் ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது அவை அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுசூழல் மாசுப்பாடு உண்டாகிறது.

 

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்கள்

பூமிக்கு அடியிலிருந்து கிடைக்கும் கனிமங்களை உலோகக் கனிமங்கள், உலோகமற்ற கனிமங்கள் மற்றும் எரிபொருள் கனிமங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

உலோகத் தாதுக்கள் அடங்கிய மூலப்பொருட்களைக் கொண்டவை உலோகக் கனிமங்கள் என்றழைக்கப்படுகின்றன.

உலோகத் தாதுக்கள் அற்ற மூலப்பொருட்களைக் கொண்டவை உலோகமற்ற தனிமங்கள் என்றழைக்கப்படுகின்றன.

எரிபொருள் கனிமங்கள் என்பவை ஆற்றலை உருவாக்கும் கனிமங்கள் ஆகும்.

எரிபொருள் கனிமங்கள் முக்கியமானதாக உள்ளன. ஏனெனில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தொழிற்சாலைகள், வீடுகள், அலுவலங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு எரிபொருள் கனிமங்கள் தேவைப்படுகின்றன.

நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு மற்றும் அணுசக்தி கனிமங்கள் ஆகியவை விரைவில் தீர்ந்து போகும் முக்கியமான எரிபொருள் கனிமங்கள் ஆகும்.

 

நிலக்கரி

நிலக்கரி
நிலக்கரி

 

நிலக்கரி பல மில்லியன் வருடங்களாக உருவான கனிமம் ஆகும். எனவே இது புதை எரிபொருள் என அழைக்கப்படுகிறது. பூமியில் இருந்து கிடைக்கக்கூடிய மிகுதியான புதைஎரிபொருள் நிலக்கரி ஆகும்.

புவி அமைப்பில் ஏற்பட்ட மாறுதல்களினால் மிகப்பெரிய பரப்புக் காடுகள் படிவுப் படுகைகளில் புதைந்து போயின. காலப்போக்கில் புவியின் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக புதைந்து போன தாவரங்கள் நிலக்கரியாக மாற்றம் அடைந்தன.

உலகின் மிக முக்கியமான நிலக்கரி வயல்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஜெர்மனி, ஐக்கிய அரசு போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

ஆசியாவின் முக்கிய நிலக்கரி வயல்கள் சீனா மற்றும் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலியில் லிக்னைட் என்ற பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது.

தற்போது மின்சார தயாரிப்பில் நிலக்கரி அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும்போது அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது.

 

பெட்ரோலிய பொருட்கள்

பெட்ரோலிய பொருட்கள்
பெட்ரோலிய பொருட்கள்

 

பெட்ரோலியப் பொருட்கள் எண்ணெய் வடிவில் பூமியில் இருந்து பெறப்படுகின்றன. எண்ணெயானது கடலுக்கடியிலுள்ள படிவுப்பாறைகளான சேற்றுமண்படிவுகள், மென்களிகல், மணற்பாறை போன்ற அடுக்குகளில் காணப்படுகின்றது.

புவியின் அடியில் புதைந்துள்ள தாவரம் மற்றும் சுண்ணாம்பு ஓட்டிலுள்ள விலங்குகளின் படிமங்கள் புவியின் வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இவை எண்ணெயாக மாறி பாறை இடுக்குகளிலும், பாறைத்துளைகளிலும் காணப்படுகின்றன.

இந்த எண்ணெய் அடுக்கிற்குமேல் லேசான ஹைட்ரோ கார்பன் இயற்கை வாயு வடிவில் காணப்படுகின்றது.

ஆசியாவின் நிலப்பகுதிகளிலும், வடகடலின் கண்டத்திட்டு பகுதிகளிலும் எண்ணெய் வயல்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் அஸ்ஸாமின் நிலப்பகுதியிலும், மும்பை ஹை என்ற கடல் பகுதியிலும் எண்ணெய் வயல்கள் காணப்படுகின்றன.

 

இயற்கை எரிவாயு

இயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு

 

இயற்கை எரிவாயு என்பது மீதேன், ஈதேன், புரெப்பேன், ப்யூட்டேன் ஆகிய வாயுக்களின் கலவை ஆகும். இதனை எரிக்கும்போது எப்பொருளையும் கழிவாக வெளியேற்றுவதில்லை.

மேலும் இப்பொருளிலிருந்து ஆற்றல் பெறப்படும்போது எவ்வித மாசுபாடும் ஏற்படுவதில்லை. இவை இயற்கையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு மேல் லேசான வாயு வடிவில் காணப்படுகின்றது.

 

அணுசக்தி கனிமங்கள்

அணு உலை
அணு உலை

 

யுரேனியம், தோரியம் போன்ற கனிமங்கள் அணுசக்தியை உற்பத்தி செய்ய பயன்படுகின்றன. நமீபியா, கஜகஸ்தான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் யுரேனியம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரள கடற்கரை மணற்பரப்புகளில் இல்மனைட் அதிகளவு காணப்படுகிறது. உலகிலேயே அதிகளவு (30 சதவீதம்) அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்க ஐக்கிய நாடு ஆகும். அணுசக்தி எரிபொருளை அதிகளவில் (75 சதவீதம்) பயன்படுத்தும் நாடு பிரான்ஸ் ஆகும்.

இந்தியாவில் இராஜஸ்தான், காய்கா, தாராப்பூர், காக்ராபர், நரோரா, கல்பாக்கம், கூட்ங்குளம் ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் உள்ளன.

 

புதுப்பிக்க இயலாத வளங்களின் நிறைகள்

புதுப்பிக்க இயலாத வளங்கள் பயன்பாட்டிற்கு எளிமையானவை. இதிலிருந்து பெறப்படும் எரிபொருட்களை எளிதில் பயன்படுத்தும் பொருட்களுக்கு (கார், மோட்டார் வாகனங்கள்) நிரப்பலாம்.

சிறிதளவு கதிர்வீச்சு தனிமங்களைப் பயன்படுத்தி அதிகளவு மின்சாரத்தைத் தயாரிக்கலாம்.

புதுப்பிக்க இயலாத வளங்களிலிருந்து பெறப்படும் ஆற்றலினை மற்றொரு வகை ஆற்றலாக குறைந்த செலவில் மாற்றலாம்.

புதுப்பிக்க இயலாத வளங்களிலிருந்து பெறப்படும் ஆற்றலினை (எரிபொருள்) குறைந்த நேரத்தில் பயன்பாட்டு பொருட்களுக்கு நிரப்பலாம்.

 

புதுப்பிக்க இயலாத வளங்களின் குறைகள்

புதுப்பிக்க இயலாத வளங்கள் ஒரு குறிப்பிட்ட காலவரையறை மட்டுமே கிடைக்கும். மீண்டும் இவ்வளங்களை திரும்பப் பெற அதிக ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

புதுப்பிக்க இயலாத வளங்களின் வேகமான பயன்பாட்டால் சுற்றுச்சூழலில் விரும்பத்தகாத பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன.

புதுப்பிக்க இயலாத வளங்களிலிருந்து பெறப்படும் ஆற்றலானது பசுமை இல்ல வாயுக்களை அதிகளவு வெளியேற்றுகிறது. இதனால் புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட சுற்றுசூழல் சீர்கேடுகள் நிகழ்கின்றன.

புதுப்பிக்க இயலாத வளங்கள் தீர்ந்துவிடும் என்பதால் நாளுக்கு நாள் இதன் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எடுத்துக்காட்டு பெட்ரோலியப் பொருட்களின் விலை.

 

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களைப் பாதுகாப்பதன் அவசியம்

மனிதர்களின் வாழ்வு மற்றும் முன்னேற்றம் ஆகியவை புவியின் ஆற்றல் வளங்களைச் சார்ந்து இருப்பதால் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துதல் அவசியம் ஆகும்.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களிலிருந்து ஆற்றலினைப் பெற்று பயன்படுத்தும்போது சுற்றுசூழலில் கடுமையான விளைவுகள் உண்டாகின்றன. எனவே சுற்றுசூழலின் கடுமையான விளைவுகளின் தாக்கத்தினைக் குறைக்க ஆற்றலினை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

மேலும் குறைந்து வரும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்;களை எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டிற்காகப் பாதுகாக்க வேண்டும்.

தேவையில்லாத இடங்களில் எரியும் மின்விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை அணைத்து விடலாம். இதனால் மின்கட்டணம் குறைவதோடு மறைமுகமாக சுற்றுசூழல் சீர்கேடு தடுக்கப்படுகிறது.

போக்குவரத்திற்கு தனிநபர் வாகன பயன்பாட்டினைக் குறைத்து பொது வாகனப் பயன்பாட்டினை மேற்கொள்ளலாம்.

நாம் ஒவ்வொருவரும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களை தேவையான இடங்களில் அளவாகப் பயன்படுத்தி சுற்றுசூழலையும் பாதுகாத்து பொருளாதார தன்னிறைவு பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.