புத்திசாலி தவளை

புத்திசாலி தவளை என்பது சீன தேசக் குட்டிக் கதையாகும்.

முகில்வனம் என்றொரு காடு இருந்தது. அதில் தங்கப்பன் என்ற பெரிய தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் சாமர்த்தியமானது.

ஒரு முறை புலி புண்ணியகோடி தவளை தங்கப்பனைப் பார்த்தது. புலி புண்ணியகோடி அதற்கு முன்னர் அவ்வளவு பெரிய தவளையைப் பார்த்து இல்லை. எனவே தவளை தங்கப்பனைப் பார்த்து “நீ யார்?” என்று புலி புண்ணியகோடி கேட்டது.

அதற்கு தவளை தங்கப்பன் “நான் தவளைகளின் அரசன். எனது பெயர் தங்கப்பன். நான் பல அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.” என்று கூறியது.

“அப்படியா? எதையாவது செய்து காட்டு பார்க்கலாம்” என்று புலி புண்ணியகோடி கூறியது.

“சரி இக்குளத்து நீரில் குதித்து இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்லுவோம். என்னால் உன்னைத் தோற்கடிக்க முடியும்” என்றது தவளை தங்கப்பன்.

“சரி, நீ என்னைத் தோற்கடித்தால் நீ திறமைசாலி என்பதை ஒப்புக்கொள்ளுவேன்” என்று புலி புண்ணியகோடி கூறியது.

குளத்து நீரில் புலி புண்ணியகோடி குதிக்க தயாரான போது தவளை தங்கப்பன் புலிக்குத் தெரியாமல் அதனுடைய வாலை லேசாகப் பற்றி அதனுடைய முடியைக் கவ்விக் கொண்டது.

புலி புண்ணியகோடி குளத்தில் நீந்தி அக்கரைக்குச் செல்வதற்கு சற்று முன்பாக‌, தவளை தங்கப்பன் புலியின் வாலிலிருந்து தாவிக் குதித்து அக்கரையை அடைந்தது.

கரையை அடைந்ததும் தவளை தங்கப்பனின் வாயில் புலியின் முடி கொஞ்சம் இருப்பதைப் பார்த்த புலி புண்ணியகோடி “என்ன உன் வாயில் இருக்கிறது?” என்று கேட்டது.

“இதுவா? நேற்று ஒரு புலியைக் கொன்றேன். இன்னும் ஜீரணிக்க முடியாத சில முடிகள் இவை” என்று கம்பீரமாக தவளை தங்கப்பன் கூறியது.

இதனைக் கேட்டதும் புலி புண்ணியகோடி அலறி அடித்து ஓடியது.

 

வழியில் நரி நஞ்சப்பன் புலி புண்ணியகோடியைத் தடுத்து நிறுத்தியது.

“ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வருகிறீர்?” என்று நரி நஞ்சப்பன் கேட்டது. அதற்கு புலி புண்ணியகோடி நடந்தவற்றைச் சொன்னது.

“கேவலம் ஒரு தவளைக்குப் போய் பயந்து இப்படியா ஓடி வருவது?” என்று கேலியாக நரி நஞ்சப்பன் கூறியது.

“நீ அதைக் கொல்ல முடியும் என்றால் உன்னுடன் நான் வருவேன். ஆனால் அதனைக் கண்டவுடன் நீ பயந்து ஓடிவிட்டால் என்ன செய்வது?. ஆதனால் நம் இருவரது வாலையும் ஒன்றாகக் கட்டிக் கொள்வோம்.”என்று புலி புண்ணியகோடி கூறியது. அதற்கு நரி நஞ்சப்பனும் ஒத்துக் கொண்டு இருவருடைய வாலையும் கட்டிக் கொண்டு தவளை தங்கப்பனிடம் சென்றன.

இருவரையும் கண்ட தவளை தங்கப்பன் “ஐயா, நரியாரே வாருங்கள். இன்று இரவு விருந்துக்கு நீங்கள் அழைத்து வருவதாகக் கூறிய புலி இதுதானா?” என்று பதட்டமில்லாமல் கேட்டது.

இதனைக் கேட்டதும் புலி புண்ணியகோடி நரி நஞ்சப்பனை இழுத்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓடியது.

சாமர்த்தியம் இருந்தால், நம்மை விட சக்தி மிக்கவர்களையும், நாம் சமாளிக்கலாம் என்பதே புத்திசாலி தவளை கதையின் கருத்தாகும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.